தேவனுக்கே மகிமையுண்டாவதாக

வெளி:2:7 

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரிடத்தில் காத்திருந்து கிருபைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் கர்த்தருக்கென்று வேலைச்செய்தால் நம்முடைய கையால் காணிக்கை வாங்கக்கூடாது என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 6:1-7

தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவை நோக்கி: இதோ, நாங்கள் உம்முடன் குடியிருக்கிற இந்த இடம் எங்களுக்கு நெருக்கமாய் இருக்கிறது.

நாங்கள் யோர்தான்மட்டும் போய் அவ்விடத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொரு உத்திரத்தை வெட்டி, குடியிருக்க அங்கே எங்களுக்கு ஒரு இடத்தை உண்டாக்குவோம் என்றார்கள். அதற்கு அவன்: போங்கள் என்றான்.

அவர்களில் ஒருவன்: நீர் தயவுசெய்து உமது அடியாரோடேகூட வரவேண்டும் என்றான். அதற்கு அவன்: நான் வருகிறேன் என்று சொல்லி,

அவர்களோடேகூடப் போனான்; அவர்கள் யோர்தான் நதியருகே வந்தபோது மரங்களை வெட்டினார்கள்.

ஒருவன் ஒரு உத்திரத்தை வெட்டி விழுத்துகையில் கோடரி தண்ணீரில் விழுந்தது; அவன்: ஐயோ என் ஆண்டவனே, அது இரவலாக வாங்கப்பட்டதே என்று கூவினான்.

தேவனுடைய மனுஷன் அது எங்கே விழுந்தது என்று கேட்டான்; அவன் அந்த இடத்தைக் காண்பித்தபோது, ஒரு கொம்பை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்கப்பண்ணி,

அதை எடுத்துக்கொள் என்றான்; அப்படியே அவன் தன் கையை நீட்டி அதை எடுத்துக்கொண்டான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவிடம், நாங்கள் உம்மோடு குடியிருக்கும்படி எங்களுக்கு இருக்கிற இடம் நெருக்கமாயிருக்கிறது.  ஆதலால் நாங்கள் யோர்தான் மட்டும் போய் அங்கே நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உத்திரத்தை வெட்டிக்கொண்டு வந்து, குடியிருக்கும் படி அங்கே எங்களுக்கு ஒரு இடத்தை உண்டாக்குவோம் என்றார்கள்; அதற்கு எலிசா போங்கள் என்று சொல்ல, அவர்களில் ஒருவன் : நீர் தயவு செய்து உமது அடியாரோடேகூட  வர வேண்டும் என்றான்.  அதற்கு அவன்: நான் வருகிறேன் என்று சொல்லி, அவர்களோடேக்கூடப் போனான்.  அவர்கள் யோர்தான் அருகே வந்த போது மரங்களை வெட்டினார்கள்.  ஒருவன் உத்திரத்தை வெட்டி வீழ்த்துகையில் கோடரி தண்ணீரில் விழுந்தது. அப்பொழுது அவன் ஆண்டவனே, இது இரவலாக வாங்கப்பட்டதே என்று கூவினான்.  தேவனுடைய மனுஷன் அது எங்கே விழுந்தது என்று கேட்க; அவன் அந்த இடத்தை காண்பித்தபோது, ஒரு கொம்பை வெட்டி அதை அங்கே எறிந்து, அந்த  இரும்பை மிதக்க செய்து, அதை எடுத்துக்கொள் என்ற போது, அதை அவன் தன் கையை நீட்டி அதை எடுத்துக்கொண்டான்.  

பிரியமானவர்களே, முந்தின வசனங்களை நாம் தியானிக்கும் போது, நாம் கர்த்தரின் ஊழியக்காரர்கள் மூலம் ஆவிக்குரிய வளர்ச்சியில் வளர்ந்து வரும்போது, என்றைக்கும் ஒரே நிலையில் இருந்துவிடாதபடி, அதிலிருந்து நம்முடைய ஆத்துமா தனிபட்ட வளர்ச்சியடைய கிறிஸ்துவோடு ஐக்கியப்பட்டு, நமக்கும் தேவனுக்குமுரிய ஐக்கியத்தை அதிகமாக நாம் வைத்துக்கொண்டு வளர வேண்டுவது மிகவும் அவசியம் என்பதனை திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  பழைய ஏறபாட்டில் தீர்க்கதரிசிகளின் உதவியை நாடினார்கள்; ஆனால் இந்நாட்களில் நம்முடைய தீர்க்கதரிசி கர்த்தராகிய கிறிஸ்து என்பதனை உணர்ந்துக்கொண்டு, எப்போதும் அவருடைய இரக்கத்திற்காக நாம் காத்திருக்கவேண்டும்.  அப்படியானால் அவர் நமக்கு நிச்சயமாக இரங்குவார்.  அல்லாமலும் பிறரிடம் உள்ள கிருபைகள் நாம் வாங்கி வைத்தோமானால் அது ஆத்துமா ஆதாயம் செய்யும் போது அந்த ஆத்துமாவில் உள்ள போராட்டததினால், நாம் ஜெயம் பெற்றுக்கொள்ள முடியாதபடி  கிருபை இழந்து விடகூடும்.  ஆனால் கிறிஸ்துவினால் அவர் தம்முடைய கிருபைகளை நமக்கு நேரடியாக நம்முடைய கரத்தில் தருகிறார்.  அவ்விதமாக நம்முடைய வாழ்வில் கர்த்தரோடு நாம் ஐக்கியதையோடு விளங்கினால் கர்த்தர் நாம் இழந்த கிருபைகளை நமக்கு தந்தருளுவார்.  இப்படியாக நாம் கர்த்தரின் கிருபைகளை பெற்றுக்கொள்வோம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.