தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 62:1
சீயோனினிமித்தமும் எருசலேமினிமித்தமும் நான் மவுனமாயிராமலும், அதின் நீதி பிரகாசத்தைப்போலவும், அதின் இரட்சிப்பு எரிகிற தீவட்டியைப்போலவும் வெளிப்படுமட்டும் அமராமலும் இருப்பேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் வேலையை செய்யும்படியாக, அவரால் பரிசுத்தமான அபிஷேதம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய விளக்கு (கிறிஸ்து) அணையாமல் பாதுகாக்கவேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 இராஜாக்கள் 9:1-5
அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலிசா தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஒருவனை அழைத்து: நீ இடைக்கட்டிக்கொண்டு, இந்தத் தைலக்குப்பியை உன் கையில் எடுத்துக்கொண்டு, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போ.
நீ அங்கே சேர்ந்தபோது, நிம்சியின் மகனான யோசபாத்தின் குமாரன் யெகூ எங்கே இருக்கிறான் என்று பார்த்து, அங்கே உட்பிரவேசித்து, அவனைத் தன் சகோதரரின் நடுவிலிருந்து எழுந்திருக்கப்பண்ணி, அவனை உள்ளான ஒரு அறையிலே அழைத்துக்கொண்டுபோய்,
தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து: உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லி, கதவைத் திறந்து தாமதியாமல் ஓடிப்போ என்றான்.
அப்படியே தீர்க்கதரிசியின் ஊழியக்காரனாகிய அந்த வாலிபன் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போனான்.
அவன் உட்பிரவேசித்தபோது, சேனாபதிகள் அங்கே உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது அவன்: சேனாபதியே, உமக்குச் சொல்லவேண்டிய ஒரு வார்த்தை உண்டு என்றான். அதற்கு யெகூ: எங்களெல்லாருக்குள்ளும் யாருக்கு என்று கேட்டதற்கு, அவன், சேனாபதியாகிய உமக்குத்தான் என்றான்.
மேற்கூறிய வசனங்களில் தீர்க்கதரிசியாகிய எலிசா, தீர்க்கத்தரிசிகளின் புத்திரரில் ஒருவனை அழைத்து: நீ இடைக்கட்டிக் கொண்டு, இந்த தைலகுப்பியை உன் கையில் எடுத்துக்கொண்டு, கீலேயாத்திலிருக்கிற ராமோத்திற்கு போய், அங்கே சேர்ந்தபோது, நிம்சியின் மகனான யோசபாத்தின் குமாரன் யெகூவினிடத்தில் போய், அவனை அவன் சகோதரர் நடுவிலிருந்து எழுந்திருக்கப்பண்ணி, அவனை உள்ளான ஒரு அறையிலே அழைத்துக்கொண்டுப் போய் தைலக்குப்பியை எடுத்து அவன் தலையின் மேல் வார்த்து; உன்னை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினேன் என்று கர்த்தர் சொல்கிறார் என்று சொல்லி, கதவை திறந்து தாமதியாமல் ஓடி போ என்றான். அப்போது தீர்க்கதரிசியாகிய ஊழியக்காரனாகிய அந்த வாலிபன் ராமோத்திற்கு போய், அங்கே உட்பிரவேசித்தபோது, சேனாபதிகள் அங்கே உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது அந்த வாலிபன், சேனாபதியே உமக்கு சொல்ல வேண்டிய ஒரு வார்த்தை உண்டு என்றான். அதற்கு யெகூ யாருக்கு என்று கேட்டதற்கு;அவன் சேனாபதியாகிய உமக்குத்தான் என்றான். பின்பு அவன் எழுந்து அறைவீட்டிற்குள் பிரவேசித்து
2 இராஜாக்கள் 9:6-10
அவன் எழுந்து, அறைவீட்டிற்குள் பிரவேசித்தான்; அவன் அந்தத் தைலத்தை அவன் தலையின்மேல் வார்த்து, அவனை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன்னைக் கர்த்தருடைய ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினேன்.
நான் என் ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழியையும், கர்த்தருடைய சகல ஊழியக்காரரின் இரத்தப்பழியையும், யேசபேலின் கையிலே வாங்கும்படிக்கு நீ உன் ஆண்டவனாகிய ஆகாபின் குடும்பத்தை அழித்துவிடக்கடவாய்.
ஆகாபின் குடும்பமெல்லாம் அழியும்படிக்கு, நான் ஆகாபுக்குச் சுவரில் நீர் விடும் ஒரு நாய் முதலாய் இராதபடிக்கு, இஸ்ரவேலிலே அவனுடையவர்களில் அடைபட்டவனையும் விடுபட்டவனையும் கருவறுத்து,
ஆகாபின் குடும்பத்தை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் குடும்பத்துக்கும், அகியாவின் குமாரனாகிய பாஷாவின் குடும்பத்துக்கும் சரியாக்குவேன்.
யேசபேலை யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் தின்றுவிடும்; அவளை அடக்கம்பண்ணுகிறவன் இல்லையென்கிறார் என்று சொல்லி, கதவைத் திறந்து ஓடிப்போனான்.
மேற்கூறப்பட்ட வசனங்களின் கருத்துக்கள் என்னவென்றால் கர்த்தர் ஆகாபின் வீட்டாரை அழிக்கும்படியாக யெகூவை அபிஷேகம் பண்ணும்படி, தேவனுடைய மனுஷனாகிய எலிசாவைக் கொண்டு, தீர்க்கத்தரிசியாகிய ஊழியக்காரனை யெகூவினிடத்தில் அனுப்புகிறார்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வாக்கியங்களின் கருத்துக்கள் என்னவென்றால், கர்த்தர் தம்முடைய வார்த்தைகள் நிறைவேற்றும் வரையில் அமராமலும் இருப்பார் என்பது புரிகிறது. மேலும் கர்த்தர் நம்மை அபிஷேகம் பண்ணுகிறாரென்றால்,நமக்குள்ளாக கிறிஸ்து அபிஷேகம் பண்ணப்படுகிறார்; என்னவென்றால் கர்த்தர் நமக்குள்ளாக இருக்கிற ஆகாப், யேசபேலுடைய பாகாலுடைய பலிபீடங்களை தகர்க்கும் படியாகயும், அவைகளின் வல்லமையை முற்றிலும் நம்மை விட்டு மாற்றி நம்மை முழுமையும் உலக சிற்றின்ப்பங்களிலும், உல்லாச வாழ்க்கையிலிருந்தும் மாற்றும்படியாகவும், கர்த்தர் நம்மை அவருடைய சித்தம் நிறைவேற்றும் படியாக உள்ளான மனுஷனில் அபிஷேகத்தை கட்டளையிடுகிறார். ஆதலால் கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கர்த்தருடைய அபிஷேகம் பெற்றிருந்தோமானால், அவர் நம்மேல் வைத்திருக்கிற சித்தத்தை நாம் நிறைவேற்றவும், அவருக்காய் நாம் வைராக்கியத்தோடு கரத்தரின் வேலையை செய்கிறவர்களாகவும் இருக்க வேண்டும். மற்றும் ஒவ்வொரு நாளிலும் நம்மை பரிசுத்தப்படுத்தி கொண்டிருந்தோமானால் மட்டுமே நமக்கு கர்த்தர் பரிசுத்தமான அபிஷேகம் நல்குவார். நாம் கர்த்தருக்காய் செய்கிற வேலையில் ஜாக்கிரதையாயிருக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.