தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 45:3-4
உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு,
வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு நாமம் தரித்தேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக,ஆமென்.
அல்லேலூயா.
தேவன் இஸ்ரவேலை ஆதரிக்கிறவர்:-திருஷ்டாந்தம்:
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,முந்தின நாட்களில் நாம் தியானித்துக் கொண்டிருக்கிற வேத பகுதியில் தேவன் நம் ஆத்துமா அழிந்து போகாதபடிக்கு,நம்மை உயிரோடே காக்கும்படியாக தேவன் நம் மேல் சித்தங்கொண்ட யாக்கோபின் புத்திரராகிய நம்மை இரட்சித்து காக்கும் படியாக இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திர பிதாக்களை முன் காட்டி எகிப்தின் வாழ்க்கையும், வேத வசனம் கிடைக்காத ஆகார பஞ்சத்திலும் தேவன் நம்மை போஷிக்கும் படியாக யோசேப்பை எகிப்திற்கு கொண்டு போனார். யாக்கோபும், அவனுடைய சந்ததிகளும் காக்கும்படியாக,தேவன் நமக்கு ஒரு மீட்பை தரும் படியாக முற்பிதாக்களை கொண்டு நமக்கு திருஷ்டாந்தபடுத்துகிறதை பார்க்கிறோம்.
மேலும்,ஜாதிகளின் சுதந்தரத்தை நமக்கு சொந்தப் படுத்துகிறதை பார்க்கிறோம்.
சங்கீதம் 2:7-9
தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;
என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;
இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார்.
பிரியமானவர்களே இந்த சங்கீதப்பகுதி நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பற்றியதான சங்கீதம்.நம்முடைய தேவன் ஜாதிகளை துரத்தி தேசத்தை சுதந்தரிக்கும் படியாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அபிஷேகம் பண்ணி வைத்திருக்கிறார். என்பதை பற்றிய கருத்துக்கள் இந்த சங்கீதப்பகுதியில் எழுதப்பட்டிருக்கிறது.தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குதத்ததை நிறைவேற்றும் படியாகவே யாக்கோபின் சந்ததியை எகிப்திற்கு அனுப்புகிறதை பார்க்கிறோம்.
மேலும்,எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய அரண்மனையிலே யோசேப்பை உயர்த்தி காட்டுகிறார்.தேவன் எகிப்தின் கிரியை தம்முடைய தாசன் மூலம் அழிக்கும்படியாகவே முன் குறித்து ஆபிராகமிடத்தில் பேசினதுமன்றி யாக்கோபின் நான்கு குமாரர்களை அங்கு கொண்டு சென்றதை நாம் பார்க்கிறோம். இதன் முன் நோக்கம் என்னவென்றால் நாம் எல்லோரும் யாக்கோபின் சந்ததிகளாக இவ்வுலகில் பிறக்கிறோம்.ஆனால் தேவன் நம்மை யாக்கோபிடத்தில் இருந்து மீட்டு இரட்சிக்கிறார்.
ஏசாயா 44:21-23
யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை.
உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.
வானங்களே, களித்துப் பாடுங்கள்; கர்த்தர் இதைச் செய்தார்; பூதலத்தின் தாழ்விடங்களே, ஆர்ப்பரியுங்கள்; பர்வதங்களே, காடுகளே, காட்டிலுள்ள சகல மரங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் யாக்கோபை மீட்டு, இஸ்ரவேலிலே மகிமைப்படுகிறார்.
கர்த்தர் யாக்கோபை நோக்கி,. நீ இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படுவாய் என்று சொல்கிறதை பார்க்கிறோம். அப்படி இஸ்ரவேல் என்று தேவன் நம்மை அழைக்க வேண்டுமானால் முந்தின நாட்களில் அதன் விளக்கம் எழுதப்பட்டிருக்கிறது.மேலும் யோசேப்பு சகோதரர்களிடம்,
ஆதியாகமம் 45:8-10
ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவர் குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், எகிப்துதேசம் முழுதுக்கும் அதிபதியாகவும் வைத்தார்.
நீங்கள் சீக்கிரமாய் என் தகப்பனிடத்தில் போய்: தேவன் என்னை எகிப்து தேசம் முழுதுக்கும் அதிபதியாக வைத்தார்; என்னிடத்தில் வாரும், தாமதிக்க வேண்டாம்.
நீரும் உம்முடைய பிள்ளைகளும், அவர்களுடைய பிள்ளைகளும், உம்முடைய ஆடுமாடுகளோடும் உமக்கு உண்டாயிருக்கிற யாவற்றோடும் கோசேன் நாட்டில் வாசம்பண்ணி என் சமீபத்தில் இருக்கலாம்.
இவ்விதமாக தன் தகப்பனிடத்தில் சொல்லும் படியாக சகோதரனிடத்தில் சொல்கிறான். மேலும் உமக்கும், உம்முடைய குடும்பத்துக்கும் வறுமை வராதபடிக்கு அங்கே உம்மை பராமரிப்பேன் இன்னும் ஜந்து வருஷம் பஞ்சம் இருக்கும் என்று உம்முடைய குமாரனாகிய யோசேப்பு சொல்ல சொன்னான் என்று சொல்லுங்கள் என்று யோசேப்பு சொல்லி,என் வாய் தான் உங்களிடம் சொல்கிறது என்பதை உங்கள் கண்களும், என் தம்பியாகிய பென்யமீனின் கண்களும் காண்கிறதே என்று சொல்லி,தகப்பனை சீக்கிரமாய் இவ்விடத்துக்கு வரும்படி செய்யுங்கள்.எகிப்திலே நீங்கள் கண்ட எனக்கு உண்டாயிருக்கிற மகிமையையும் அறிவியுங்கள் என்று சொல்லி தம்பியாகிய பென்யமீனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான். பென்யமீனும் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்.
பின்பு தன் மற்ற சகோதரர்கள் யாவரையும் முத்தஞ்செய்து, அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதான்.அதற்கு பின் சகோதரர் அவனோடே சம்பாஷித்தார்கள்.
யோசேப்பின் சகோதரர்கள் வந்தார்கள் என்கிற சமாசாரம் பார்வோனின் அரண்மனையில் பிரசித்தமான போது பார்வோனின் எல்லா ஊழியக்காரரும் சந்தோஷம் அடைந்தார்கள்.
ஆனால்,பார்வோன் யோசேப்பை நோக்கி நீ உன் சகோதரரிடத்தில் சொல்ல வேண்டியது என்னவென்றால் உங்கள் கழுதைகளின் மேல் பொதியேற்றிக்கொண்டு புறப்பட்டு கானான் தேசத்துக்குப் போய்,
ஆதியாகமம் 45:18
உங்கள் தகப்பனையும் உங்கள் குடும்பத்தாரையும் கூட்டிக்கொண்டு, என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு எகிப்துதேசத்தின் நன்மையைத் தருவேன்; தேசத்தின் கொழுமையைச் சாப்பிடுவீர்கள்.
அவ்விதமே இஸ்ரவேலின் குமாரர் அப்படியே செய்தார்கள். யோசேப்பு பார்வோனுடைய கட்டளையின்படியே அவர்களுக்கு வண்டிகளை கொடுத்ததுமன்றி வழிக்கு ஆதாரத்தையும்,
அவர்களில் ஒவ்வொருவனுக்கும் மாற்று வஸ்திரங்களையும் கொடுத்தான்.பென்யமீனுக்கோ முந்நூறு வெள்ளிக்காசையும், ஐந்து மாற்று வஸ்திரங்களையும் கொடுத்தான்.
இவ்விதமாக யோசேப்பு தன் தகப்பனுக்கும் உச்சிதமான பதார்த்தங்களும், வழிக்கு தானியமும்,அப்பமும் மற்றத் தின்பண்டங்களும் ஏற்றி வேண்டிய மட்டும் அனுப்புகிறான்.
மேலும்,போகும் வழியில் சண்டை பண்ணி கொள்ளாதிருங்கள் என்று சொல்லி சகோதரரை அனுப்பினான்.அவர்கள் புறப்பட்டுப் போனார்கள்.
அவர்கள் எகிப்திலிருந்து போய் கானான் தேசத்திலே தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்தில் வந்து, யோசேப்பு உயிரோடிருக்கிறான்.அவன் எகிப்து தேசத்துக்கெல்லாம் அதிபதியாயிருக்கிறான்,என்று அவனுக்கு அறிவித்தார்கள்.அவன் இருதயம் மூச்சை அடைத்தது; அவன் அவர்களை நம்பவில்லை,
அவர்கள் யோசேப்பு சொன்ன வார்த்தைகள் எல்லாவற்றையும் தகப்பனிடத்தில் சொல்ல தகப்பன் யோசேப்பு அனுப்பின வண்டிகளை கண்டபோதும் யாக்கோபின் ஆவி உயிர்த்தது.
ஆதியாகமம் 45:28
அப்பொழுது இஸ்ரவேல்: என் குமாரனாகிய யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறானே, இது போதும்; நான் மரணமடையுமுன்னே போய் அவனைப் பார்ப்பேன் என்றான்.
இவ்விதமான காரியங்கள் தேவன் காண்பிப்பது என்னவென்றால் யாக்கோபை எகிப்தில் வரவழைத்து, எகிப்தின் நன்மையையும் தேசத்தின் கொழுமையும் சாப்பிடும்படியாக,தேவனுடைய செயலாக இருந்தது. என்னவெனில் ஜாதிகளின் நன்மையை தேவனால் அனுக்கிரக்கிக்கபட்ட ஜனங்களுக்கு தேவன் புசிக்க கொடுக்கிறவர் இதை திருஷ்டாந்தபடுத்தவே, யாக்கோபின் மீட்பை தேவன் நமக்கு எடுத்துக் காட்டுகிறார். எப்படியெனில் கர்த்தர் ஆபிரகாமிடத்தில்,
ஆதியாகமம் 15:13,14
அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய்.
இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள்.
இவ்விதமாக தேவன் ஆபிரகாமிடத்தில் சொன்ன காரியத்தை நிறைவேற்றும் படியாகவே யாக்கோபின் சந்ததியை எகிப்திற்கு கொண்டு சென்று, யோசேப்பை முன் நிறுத்தி,பார்வோனிடத்தில் இரக்கம் கிடைக்க செய்து, அத்தேசத்து ஜாதிகளை நியாயந்தீர்க்கவும்,எகிப்தின் நன்மைகளை எபிரெயர் புசிக்கவும்,எகிப்தை தேவன் அழிக்கவும்,முன் குறித்து மேற் கூறப்பட்டிருக்கிற செயல்களை எல்லாம் செய்து கொண்டிருக்கிறதை பார்க்கிறோம்.பின்பு இஸ்ரவேலர் அதிக பொருட்களுடன் புறப்பட்டு வருவார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது.
இவ்விதமான காரியங்களை செய்வது என்னவென்றால் தேவன் சிருஷ்டித்த ஒவ்வொரு மனிதனையும் எகிப்தின் அடிமையினின்று விடுவித்து, ஆத்துமாவை இரட்சித்து, எகிப்தின் கிரியைகளை ஒவ்வொரு ஆத்துமாவின் உள்ளத்திலிருந்து அழித்து, உள்ளம் தேவனுக்கு ஒப்புக்கொடுத்து பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசமாக மாற்றும்படியாகவே தேவன் முன்குறித்து யோசேப்பை திருஷ்டாந்தபடுத்தி,தம்முடைய ஒரேபேறான குமாரன் மூலம் (கிறிஸ்து) நம்மை பாவத்திலிருந்து மீட்டு எடுக்கும் படியாக தேவன் இவ்வித காரியங்களால் நம்மை தெளிவுபடுத்துகிறார்.
இதனை வாசிக்கிற அன்பான தேவ ஜனமே நம்மை ஒவ்வொரு நாளிலும் சோதித்து அறிந்து நம் ஆத்துமாவை காத்துக்கொள்ள யாவரும் முன்வருவோமாக.ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பாராக.
-தொடர்ச்சி நாளை.