இஸ்ரவேலுக்கு தன்னை வெளிப்படுத்துகிற தேவன்:-

சகோதரி. பி.கிறிஸ்டோபர் வாசினி
Jun 26, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 45:17

இஸ்ரவேலோ கர்த்தராலே நித்திய இரட்சிப்பினால் இரட்சிக்கப்படுவான்; நீங்கள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பீர்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாகஆமென்.

அல்லேலூயா.

இஸ்ரவேலுக்கு தன்னை வெளிப்படுத்துகிற தேவன்:-

கர்த்தருக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேத பகுதியில் தேவன் இஸ்ரவேலை ஆதரிக்கிற விதத்தை நமக்கு திருஷ்டாந்தபடுத்துகிறதை பார்க்கிறோம்.மற்றும் இஸ்ரவேலுக்கு தன்னை வெளிப்படுத்துகிறார் என்பதை கர்த்தர் யோசேப்பை நமக்கு திருஷ்டாந்தப்படுத்தி இஸ்ரவேல் கோத்திர பிதாக்களுக்கு தேவன் தம்மை வெளிப்படுத்துகிறதை பார்க்கிறோம்.

கர்த்தர் கோத்திரபிதாக்களை கானானிலிருந்து எகிப்திற்கு அனுப்பி , பின் எகிப்திலிருந்து யோசேப்பு மூலம் கானானுக்கு அனுப்பி,இரண்டாவதாக கானானிலிருந்து எகிப்திற்கு வரவழைக்கும் படியாக சில காரியங்களை தேவ ஞானத்தினால் செய்து அங்கிருந்து மீண்டும் கானானுக்கு அனுப்பி விட்டு வழியில் போகும்போதே விசாரணைகாரனை அனுப்பி, வெள்ளிபான பாத்திரம் கண்டெடுக்கும் படியாக தேவன் சில கிரியைகளை நமக்கு காண்பித்து இவ்விதமாக திருஷ்டாந்தப்படுத்தி இஸ்ரவேலுக்கு தன்னை வெளிப்படுத்துகிறார்.

இவ்விதமாக யோவான்ஸ்நாபகனை தேவன் கிறிஸ்துவுக்கு‌ முன்பாக ஒளியைக் குறித்து சாட்சிக் கொடுக்கும்படியாக அனுப்புகிறதை பார்க்கிறோம். முதலில் தேவன் வார்த்தையை நம் உள்ளத்தில் அனுப்புகிறார். அந்த வார்த்தையில் ஜீவன் இருந்தது.அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.

அந்த ஒளியைக் குறித்து யோவான் சாட்சிக் கொடுக்கிறது எப்படியெனில்,

யோவான் 1:15

யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.

முதலில் தேவனுடைய வார்த்தை கொடுக்கப்படுகிறது. அந்த வார்த்தையில் ஜீவன் இருந்தது.அந்த ஜீவன் தான் மனுஷருக்கு ஒளியாகயிருக்கிறது.

அதை தான்,

யோவான் 1:16

அவருடைய பரிபூரணத்தினால் நாமெல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்.

அன்பான தேவ ஜனமே இதனை வாசித்து ஒவ்வொரு தேவ வார்த்தைகளையும் நம் உள்ளம் ஏற்றுக்கொண்டு ஸ்தோத்திரம் செலுத்துங்கள்.அப்பொழுது ஒளியாகிய கிறிஸ்து நமக்குள் வெளிப்படுவார்.இந்த ஒளிதான் கிறிஸ்துவின் ஜீவன் இந்த ஜீவனை பெற்றவர்கள் நித்திய ஜீவனை அடைவார்கள். எப்படியெனில் இந்த ஜீவன் கிருபையும்,சத்தியமும் இந்த கிருபையிலும்,சத்தியத்திலுமும் நாம் வாழ்வோமானால்,நம் வாழ்க்கை அனுதினம் பரிசுத்தமாக்கப்படும்.

எப்படியெனில்,

யோவான் 1:26-27

யோவான் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார்.

அவர் எனக்குப் பின்வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர்; அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல என்றான்.

இதிலிருந்து நமக்கு தெரியவருகிறது என்னவென்றால் நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார் என்று யோவான் சொல்வது. ஞானஸ்நானம் யோவான்ஸ்நாபகன் கொடுக்கும்போது தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கிறவர்கள் நடுவில் ஒளியாக கிறிஸ்து வெளிப்படுவார் என்பதை காட்டுகிறது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,யோவான் கர்த்தருக்கு வழியை நம் இருதயத்தில் செவ்வை பண்ணும்படியாக தேவன் வார்த்தையினால் யோவானை அனுப்புகிறார்.அந்த வார்த்தையை விசுவாசிக்கிற ஒவ்வொருவரும் மனந்திரும்பி, பாவங்களை அறிக்கையிட்டு, ஞானஸ்நானம் பெற்று கொள்ள வேண்டும்.அவ்விதம் நம் பழைய பாவங்கள், அக்கிரமங்கள்,மீறுதல்கள் எல்லாம் அறிக்கையிட்டு ஞானஸ்நானம் பெற்று கொள்வோமானால் நாம் அன்று வரையிலும் அறியாத ஒருவர் நம் நடுவில் நிற்கிறார் என்பது நமக்கு மெய்யாகவே விளங்குகிறது.

இவைகள் யோவான் ஞானஸ்தானங் கொடுத்த பெத்தாபாராவிலே நடந்தன.

யோவான் 1:29-34

மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.

எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்.

நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும்பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்க வந்தேன் என்றான்.

பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன்.

நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்; ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவரென்று எனக்குச் சொல்லியிருந்தார்.

அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்து வருகிறேன் என்றான்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டிய காரியம் என்னவென்றால் கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை அதிகமாக நேசிக்கிறார். எப்படியெனில் யோசேப்பு கண்ட சொப்பனத்தினால் அவன் சகோதரர்கள் அவன் மேல் பொறாமைக் கொண்டு அவனை எகிப்திற்கு விற்று போடுகிறதை பார்க்கிறோம். யாக்கோபு அதிகமாக யோசேப்பை நேசித்தும் யோசேப்பு கண்ட சொப்பனத்தினால் நேசித்த மகனை பொறாமைக்கொண்டு ஆடு மேய்க்க சென்ற தன் மற்ற பிள்ளைகளிடத்தில் அனுப்புகிறதை பார்க்கிறோம். அந்த நாட்களில் தான் யோசேப்பை அவன் சகோதரர்கள் விற்கிறார்கள். எகிப்துக்கு யோசேப்பு சிறையாக விற்கப்பட்டு கொண்டு போகபடுகிறான். இவையெல்லாவற்றையும் பார்த்த நம்முடைய தேவன் தாங்கள் செய்த பாவத்தையும், அக்கிரமத்தையும் நினைக்கும் படியாகவே ஒரு கொடிய பஞ்சத்தை தேவன் தேசத்தில் அனுப்புகிறார்.

அன்பான தேவஜனமே இந்த நாட்களில் சம்பவித்துக் கொண்டிருக்கிற இந்த சிறை வாழ்க்கை மேலும் பஞ்சம், கொள்ளைநோய்,வாதை இவையெல்லாம் வருவதற்கு காரணம் என்ன என்று தேவ ஜனங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.ஏனென்றால் யாக்கோபை தேவன் ஆசீர்வதித்து கொண்டு வந்தாலும் சூரியனும், சந்திரனும்,பதினொரு நட்சத்திரங்களும் வணங்குகிறது என்று யோசேப்பு சொன்ன சொப்பனத்தினால் யாக்கோபு தன் குமாரனிடம் பொறாமைக் கொள்கிறான்.நடந்த காரியம் சிந்தித்துக் கொள்ளுங்கள் கிறிஸ்தவர்கள் ஆகிய இரட்சிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் எவ்வளவு பொறாமை மேலும் யாக்கோபை போல உள்ள ஊழியக்காரார்கள் தங்கள் பிள்ளைகளாகிய விசுவாசிகள் ஆவிக்குரிய வரங்கள் பெற்றால் எவ்வளவு பொறாமை, விசுவாசிகளான தங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்காமல் விட்டதால் எத்தனை பேர் பின்வாங்கியிருப்பார்கள்  என்று நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.இன்றைக்கு தேவன் யாக்கோபின் குமாரர்கள் தாங்கள் செய்த குற்றங்களையும், அக்கிரமத்தையும் நினைத்து பார்க்கும்படியாகவும்,மற்றும் சொப்பனம் நிறைவேற்றும்    படியாகவும்,பஞ்சத்தையும் அனுப்பி அதே யோசேப்பை வணங்கும் படியாகவும் வைக்கிறார்.

ஆதியாகமம் 46:1-2

இஸ்ரவேல் தனக்கு உண்டான யாவையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டுப் பெயர்செபாவுக்குப் போய், தன் தகப்பனாகிய ஈசாக்குடைய தேவனுக்குப் பலியிட்டான்.

அன்று இரவிலே தேவன் இஸ்ரவேலுக்குத் தரிசனமாகி: யாக்கோபே, யாக்கோபே என்று கூப்பிட்டார்; அவன் இதோ, அடியேன் என்றான்.

இந்த வார்த்தையிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் தேவன் சொப்பனத்தை நிறைவேற்றுகிற தேவன் எப்படியெனில் கர்த்தர் யாக்கோபிடம் உன் பேர் யாக்கோபு என்று அழைக்கப்படாமல் இஸ்ரவேல் என்று அழைக்கப்படும் என்று சொன்ன தேவன் இப்போதும் யாக்கோபு என்று அழைக்கிறதை பார்க்கிறோம்.

அதுமாத்திரமல்ல, 

ஆதியாகமம் 46:3

அப்பொழுது அவர்: நான் தேவன், நான் உன் தகப்பனுடைய தேவன் நீ எகிப்து தேசத்துக்குப்போகப் பயப்படவேண்டாம்; அங்கே உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்.

நான் உன்னுடனே எகிப்துக்கு வருவேன்; நான் உன்னைத் திரும்பவும் வரப்பண்ணுவேன்; யோசேப்பு தன் கையால் உன் கண்களை மூடுவான் என்று சொன்னார்.

அதற்கு பின்பு யாக்கோபு,பெயர்செபாவிலிருந்து புறப்பட்டு இஸ்ரவேலின் குமாரர் அவன் சந்ததிகள் யாவரும் எகிப்திற்கு போனார்கள்.

மேலும்,யோசேப்புக்கு எகிப்தில் பிறந்த இரண்டு குமாரர்கள்,ஆக எகிப்துக்கு போன யாக்கோபின் குடும்பத்தார் எழுபது பேர்.

என்னவெனில்,தேவன் இஸ்ரவேலை எகிப்திற்கு கொண்டுப் போய் அங்கு பெரிய ஜாதியாக்குவதும் மேலும் அங்குள்ள நன்மையை புசிக்கக் கொடுப்பதும் யாக்கோபுக்கு ஒரு மீட்பு வேண்டும் என்பதும், அவன் எகிப்தின் அடிமையில் இருக்கிறான் என்பதும்,அதிலும் எகிப்தின் வாழ்க்கையில் நாம் அறியாத ஒருவர் நம்மோடு நிற்கிறார் என்பதை காட்டும் படியாக தேவன் யாக்கோபிடத்தில் நான் உன்னோடு வருவேன் என்று சொல்லுகிறார்.

இதை தான் யோவான் ஞானஸ்நானம் கொடுத்து கொண்டு இருக்கும் போது, மக்கள் பாவமன்னிப்பு பெற்று ஞானஸ்நானம் எடுக்கும்போது யோவான் சொல்கிறார்.நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவில் உண்டு என்று சொல்லுகிறார்.

அதைத்தான் யாக்கோபின் குமாரர் தங்கள் பாவங்களை நினைவுகூர்ந்து மீண்டும் எகிப்திற்கு தேவன் அவர்களை கொண்டு வந்து அவர்கள் நடுவில் அவர் உண்டு என்பதற்கு திருஷ்டாந்தபடுத்தவே வெள்ளி பானபாத்திரம் அங்கு தானிய சாக்கின் வாயிலே வைக்கப்படுகிறது.

இவ்விதமாக,நம் பாவங்களை அக்கிரமங்களை அறிக்கை செய்து, ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் நமக்கு அவரை வெளிப்படுத்துகிறார். அதைத்தான் யோவான் சொல்கிறார்.

யோவான் 1:31

நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும்பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்க வந்தேன் என்றான்.

இவ்விதமான பாவ அறிக்கை செய்வோமானால் தேவன் நம்மையும் இரட்சிக்கிற தேவன்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.                                      

-தொடர்ச்சி நாளை.