தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 86:11 

கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம் உள்ளத்திற்குள் இருக்கிற விளக்கு தண்டை நம்மிடத்திலிருந்து கர்த்தர் நீக்காமல் இருக்கும்படியாக சத்தியத்தை விட்டு விலகாதபடி  நம்மை காக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில் மணவாட்டி சபையாகிய நாமே நம்மை முதலில் கர்த்தருக்கென்று காணிக்கையாக ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்  

2 இராஜாக்கள் 12:16-21 

குற்றப்பிராயச்சித்தப் பணமும் பாவப்பிராயச்சித்தப் பணமும் கர்த்தருடைய ஆலயத்திற்காகக் கொண்டுவரப்படவில்லை; அது ஆசாரியரைச் சேர்ந்தது.

அதற்குப்பின்பு சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் வந்து, காத்தூரின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடித்தான்; அதின்பின்பு எருசலேமுக்கு விரோதமாய்ப் போக ஆசகேல் தன் முகத்தைத் திருப்பினான்.

அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோவாஸ், தன் பிதாக்களாகிய யோசபாத் யோராம் அகசியா என்னும் யூதாவின் ராஜாக்கள் பரிசுத்தம்பண்ணி வைத்த எல்லாவற்றையும், தான் பரிசுத்தம்பண்ணி வைத்ததையும், கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனையிலுமுள்ள பொக்கிஷங்களில் அகப்பட்ட பொன் யாவையும் எடுத்து சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலுக்கு அனுப்பினான்; அப்பொழுது அவன் எருசலேமை விட்டுத் திரும்பிப்போனான்.

யோவாசின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

யோவாசின் ஊழியக்காரர் எழும்பி கட்டுப்பாடுபண்ணிக்கொண்டு, சில்லாவுக்குப் போகிற வழியிலிருக்கிற மில்லோ வீட்டிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்.

சிமியாதின் குமாரன், யோசகார் சோமேரின் குமாரன் யோசபாத் என்னும் அவனுடைய ஊழியக்காரர் அவனைக் கொன்றார்கள்; இறந்துபோன அவனைத் தாவீதின் நகரத்தில் அவனுடைய பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய அமத்சியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் கர்த்தருக்குரிய காணிக்கைகளில் அவருடைய ஊழியக்காரர்களுக்குரிய காணிக்கை எது என்பது எழுதப்பட்டிருக்கிறது. பின்னும் நாம் சிந்திக்க வேண்டிய காரியம் என்னவென்றால் நம்முடைய ஆத்துமாவை சத்துரு சிறைபிடிக்கிறான்  என்பதனை அறிந்தால் நாம் ஒரு போதும் அவனுக்கு நம்முடைய உள்ளத்துக்குள் இருக்கிற பரிசுத்த பொருட்களை கொடுப்பதற்கு நாம் அடிமைப்படாதபடி நம்மை காத்துக் கொள்ள வேண்டும்.  அவ்விதம் நாம் வஞ்சிக்கிற ஆவிக்கு அடிமையாகி விட்டால், அவன் எப்போதும் நம்முடைய வாழ்வில் நுழைந்து நம்மை சீர்குலைத்து விடுவான்.  ஆதலால் நாம் எப்போதும் சத்துருவோடு எதிர்க்க திராணியுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால் யோவாஸ் முதலில் கர்த்தருக்கு பிரியமானவைகளை செய்து வந்ததை பார்க்கிறோம்.  ஆனால் யூதாவின் ராஜாக்கள் பரிசுத்தம் பண்ணிவைத்திருந்த அனைத்தையும் சீரிய ராஜாவுக்கு கொடுத்தனுப்பின பின்பு, அவன் தன்னுடைய வாழ்வில் பரிசுத்தத்தை இழந்து விடுகிறான். பின்னும் அவன் செய்தது 

2 நாளாகமம் 24:17-25 

யோய்தா மரணமடைந்தபின்பு யூதாவின் பிரபுக்கள் வந்து, ராஜாவைப் பணிந்துகொண்டார்கள்; அப்பொழுது ராஜா அவர்களுக்குச் செவிகொடுத்தான்.

அப்படியே அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தை விட்டுவிட்டு, தோப்பு விக்கிரகங்களையும் சிலைகளையும் சேவித்தார்கள்; அப்பொழுது அவர்கள் செய்த இந்தக் குற்றத்தினிமித்தம் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் கடுங்கோபம் மூண்டது.

அவர்களைத் தம்மிடத்திற்குத் திரும்பப்பண்ணக் கர்த்தர் அவர்களிடத்திலே தீர்க்கதரிசிகளை அனுப்பினார்; அவர்கள் ஜனங்களைத் திடச்சாட்சியாகக் கடிந்துகொண்டார்கள்; ஆனாலும் அவர்கள் செவிகொடுக்கவில்லை.

அப்பொழுது தேவனுடைய ஆவி ஆசாரியனாகிய யோய்தாவின் குமாரனான சகரியாவின்மேல் இறங்கினதினால், அவன் ஜனத்திற்கு எதிரே நின்று: நீங்கள் கர்த்தருடைய கற்பனைகளை மீறுகிறது என்ன? இதினால் நீங்கள் சித்திபெறமாட்டீர்கள் என்று தேவன் சொல்லுகிறார்; நீங்கள் கர்த்தரை விட்டுவிட்டதினால் அவர் உங்களைக் கைவிடுவார் என்றான்.

அதினால் அவர்கள் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, கர்த்தருடைய ஆலயப்பிராகாரத்தில் ராஜாவினுடைய கற்பனையின்படி அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.

அப்படியே அவனுடைய தகப்பனாகிய யோய்தா தனக்குச் செய்த தயையை ராஜாவாகிய யோவாஸ் நினையாமல் அவனுடைய குமாரனைக் கொன்றுபோட்டான்; இவன் சாகும்போது: கர்த்தர் அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார் என்றான்.

மறுவருஷத்திலே சீரியாவின் சேனைகள் அவனுக்கு விரோதமாக யூதாவிலும் எருசலேமிலும் வந்து, ஜனத்திலிருக்கிற பிரபுக்களையெல்லாம் அழித்து, கொள்ளையிட்ட அவர்கள் உடைமைகளையெல்லாம் தமஸ்குவின் ராஜாவுக்கு அனுப்பினார்கள்.

சீரியாவின் சேனை சிறுகூட்டமாய் வந்திருந்தாலும், அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுவிட்டபடியினால், கர்த்தர் மகா பெரிய சேனையை அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் யோவாசுக்கு தண்டனை செய்தார்கள்.

அவர்கள் அவனை மகா வேதனைக்குள்ளானவனாக விட்டுப்போனார்கள்; அவர்கள் புறப்பட்டுப்போனபின்பு, அவனுடைய ஊழியக்காரர் ஆசாரியனாகிய யோய்தாவுடைய குமாரரின் இரத்தப்பழியினிமித்தம், அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் படுக்கையிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்; செத்துப்போன அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.

மேற்கூறப்பட்ட வசனங்களில் யோவாஸ் பொல்லாத காரியங்களை செய்கிறதினாலும், தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுவிட்டபடியினால், சீரியரின் சேனை சிறுகூட்டமாய் வந்திருந்தாலும் கர்த்தர் இஸ்ரவேலை சீரியரின் கையில் ஒப்புக்கொடுக்கிறார்.  அவர்கள் யோவாசுக்கு தண்டனை செய்தார். அவ்விதமாக அவனை மகா வேதனைக்குள்ளாக்கி விட்டு அவர்கள் புறப்பட்டு போன பின்பு,  அவனுடை ஊழியக்காரர் ஆசாரியனாகிய யோய்தாவுடைய குமாரரின் இரத்தபழியினிமித்தம், அவனுக்கு விரோதமாய் கட்டுபாடுபண்ணி, அவனை படுக்கை அறையிலே கொன்றுப் போட்டார்கள்; செத்து போன அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம் பண்ணினார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.   

ஆதலால் பிரியமானவர்களே நாம் கேட்கிற கர்த்தரின் சத்திய விழிகளை விட்டு நீங்கினால் நம் பரிசுத்த வாழ்வை அந்நிய ஆவி சீர்குலைத்துவிடும்.  அதன் பின்பு நாம் மனம்போன போக்கில் வாழ துவங்குவோம்.  அப்போது சத்துருவின் கையில் கர்த்தர் நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுத்து, நாம் மனம்திரும்பாத பட்சத்தில் நம்மில் இருந்து நீக்கி விடுகிறார்.  அப்போது நம் பெற்ற அபிஷகம் இழந்து, அருவருப்பானவைகளை தொடர்ந்து செய்து, பாவமாகிய சேற்றில் மீண்டும் விழுந்து, ஆத்துமா ஜீவன் இழந்து செத்துப் போவதற்கு காரணராகிறோம்.  ஆதலால் நாம் நம்முடைய வாழ்வில் எந்நேரமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.   இதனை வாசிக்கிற அன்பானவர்களே ஒரு போதும் நம்முடைய வாழ்வில் நாம் அந்நிய ஆவியால் வஞ்சிக்கப்படாதபடி காத்துக்கொள்ளும்படியாக கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.