தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 44:21-22

யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை.

உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக,ஆமென். 

அல்லேலூயா.

தேவ வசனத்திற்கு கீழ்ப்படிதல், பயபக்தி, நித்திய இரட்சிப்புக்கு காரணமாகும்:-

கர்த்தருக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் தேவன் இஸ்ரவேலுக்கு தன்னை வெளிப்படுத்துவதை யோசேப்பை வைத்து திருஷ்டாந்தபடுத்தி மேலும் நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்த பாவம்,அக்கிரமம் இவற்றை எல்லாம் நாம் தேவனிடத்தில் அறிக்கை செய்து பாவமன்னிப்பு பெற்று மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும்போது தேவன் தம்மை நமக்கு வெளிபடுத்துகின்றார் என்பதை பற்றிய தேவ வசனத்தை கழிந்த நாளில் தியானித்தோம். இவ்விதமாக தேவன் தம்மை வெளிப்படுத்துகிறாரென்றால் நாம் தேவனிடத்தில் இரட்சிப்பு பெற்றுக்கொள்ள வேண்டும். நாம் பெற்ற இரட்சிப்பை நாம் அனுதினமும் காத்துக்கொண்டு தேவனுக்கு நாம் எப்போதும் கீழ்ப்படிய வேண்டும். அதைதான்,

எபிரெயர் 5:7-10

அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,

அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு,

தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி,

மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்.

இதிலிருந்து நமக்கு தெரிய வேண்டுவது என்னவென்றால் கிறிஸ்துவோடு உடன்படிக்கை எடுத்த நாமோ, மிகவும் பயபக்தியோடும், கீழ்ப்படிதலோடும் நடந்து, தேவனிடத்தில் வேண்டுதல் செய்வோமானால் கீழ்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்கு ஏதுவாகயிருக்கும் 

மேலும்,யோசேப்பினுடைய வாழ்க்கையில் அவனுடைய மனைவியாகிய போத்தி பிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்து மனாசே, எப்பிராயீம் என்னும் இரண்டு குமாரரை யோசேப்புக்கு பெற்றெடுத்தாள் மூத்தவனுக்கு மனாசே என்றும் இளையவனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான்.

யாக்கோபும் அவனுடைய குடும்பத்தார் யாவரும் பெயர்செபாவிலிருந்து புறப்பட்டு எகிப்திற்கு போகும் போது கோசேன் நாட்டிலே தன்னை யோசேப்பு சந்திக்க வரும்படி சொல்ல,யூதாவைத் தனக்கு முன்பாக அவனிடத்தில் யாக்கோபு அனுப்பினான்.அவர்கள் கோசேனிலே சேர்ந்தார்கள். 

யோசேப்பு தன் இரதத்தை ஆயத்தப்படுத்தி அதின் மேல் ஏறி  தன் தகப்பனாகிய இஸ்ரவேலை சந்திக்கும்படி போய் அவனைக் கண்டு அவனுடைய கழுத்தை கட்டிக் கொண்டு வெகுநேரம் அவன் அழுதான்.

ஆதியாகமம் 46:30

அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பைப் பார்த்து: நீ இன்னும் உயிரோடிருக்கிறாயே, நான் உன் முகத்தைக் கண்டேன், எனக்கு இப்போது மரணம் வந்தாலும் வரட்டும் என்றான்.

பின்பு யோசேப்பு தன் சகோதரர்களிடம் சொல்கிறான். நான் பார்வோனிடத்தில் போய் கானான் தேசத்திலிருந்த என் சகோதரர்களும் என் தகப்பனாரும் என்னிடத்தில் வந்திருக்கிறார்கள். .அவர்கள் மேய்ப்பர்கள். ஆடு மாடுகளை மேய்க்கிறது அவர்கள் தொழில். அவர்கள் தங்கள் ஆடுமாடுகளையும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் கொண்டு வந்தார்கள் என்று அவருக்கு சொல்கிறேன்.

பார்வோன் உங்களை அழைத்து என்ன தொழில் என்று கேட்டால், 

ஆதியாகமம் 46:34

நீங்கள், கோசேன் நாட்டில் குடியிருக்கும்படி, அவனை நோக்கி: எங்கள் பிதாக்களைப்போல, உமது அடியாராகிய நாங்களும் எங்கள் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் மேய்ப்பர்களாயிருக்கிறோம் என்று சொல்லுங்கள்; மேய்ப்பர்கள் எல்லாரும் எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கிறார்கள் என்றான்.

இவ்விதமாக யோசேப்பு சொன்னது போல் பார்வோனிடத்தில் போய் அவன் சொல்லி தகப்பனும், சகோதரர்களும் கோசேன் நாட்டில் இருக்கிறார்கள் என்று சொல்லி, யோசேப்பு தன்னுடைய ஐந்து சகோதரர்களை பார்வோனுக்கு முன்பாக கூட்டிக்கொண்டு விட்டான்.

பார்வோன் அவர்களிடம் தொழில் என்ன என்று விசாரிக்க,அவர்களும் தாங்கள் மந்தை மேய்க்கிறவர்கள் என்று பார்வோனிடத்தில் சொன்னதுமன்றி,கானான் தேசத்திலே பஞ்சம் கொடியதாயிருக்கிறது;உமது அடியாரின் மந்தைகளுக்கு மேய்ச்சல் இல்லாமையால், இத்தேசத்திலே தங்க வந்தோம்.உமது அடியாராகிய நாங்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கும்படி தயவு செய்ய வேண்டுமென்று வேண்டிக் கொண்டார்கள்.

அப்பொழுது பார்வோன் அதற்கு சம்மதித்து யோசேப்பிடத்தில் உன் தகப்பனையும், சகோதரரையும் தேசத்திலே உள்ள நல்ல இடத்தில் குடியேறும்படி செய்.அவர்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கலாம் அவர்களுக்குள்ளே திறமையுள்ளவர்கள் உண்டென்று உனக்கு தெரிந்தால் அவர்களை என் ஆடு மாடுகளை விசாரிக்கிறதற்கு தலைவராக நியமிக்கலாம் என்றான்.

யாக்கோபும் அவன் குடும்பமும்  எகிப்திற்கு வரும்போது கோசேன் நாட்டில் தங்கி அங்கிருந்து யூதாவை யோசேப்பிடத்தில் அனுப்பி, சந்திக்க கோசேனுக்கு வரும்படி சொல்லி அனுப்புவதை பார்க்கிறோம்.

யாக்கோபு கானானில் இருந்து அவன் பிள்ளைகளாகிய பதினொரு கோத்திரபிதாக்களுக்கும் எகிப்திற்கு புறப்படுவது என்னவென்றால் யோசேப்பு வண்டி அனுப்பினதால் யாக்கோபு திருப்தியாக செல்கிறதை பார்க்கிறோம். ஆனால் கோசேன் வரை செல்கிறார்கள்.அங்கு யூதாவை அனுப்பி,யோசேப்பு இஸ்ரவேல் சபையை சந்திக்க வருகிறதை பார்க்கிறோம்.இஸ்ரவேல் சபை எகிப்திற்கு போவதற்கு காரணம் யோசேப்புக்கு செய்த துரோகம் தான்  என்பது தெரியவருகிறது.மேலும் ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் படியாகவும் நாம் இஸ்ரவேலாக இருந்துவிட்டு தேவ துரோகம் செய்வோமானால் நம்மையும் தேவன் இவ்விதம் எகிப்துக்கு அனுப்புவார்.

ஆனால், எகிப்தின் வாழ்க்கையில் கோசேன் நாட்டிற்கு அழைத்து செல்வது, யாரை அவமதித்தார்களோ, அவனைக் காணும்படியாகவும், அவனை உயிரோடு இருக்கிறவனாகவும் காணும் படியாக தேவன் அங்கு கிருபை செய்கிறார்.மேலும் பார்வோனுடைய கண்களிலும் தயவு கிடைக்கப்பண்ணி நல்ல இடமாகிய ராமசேஸ் அவர்களுக்காக ஆயத்தப்பண்ணபட்டிருக்கிறது.

அதேபோல் நாம் பெயர்அளவில் மாத்திரம் யாக்கோபை போல் கிறிஸ்தவர்களாக இருப்போமானால் ஒரு நாளில் நம்மை நியாயதீர்க்க அழைத்து செல்கிறார் என்று தெரியாதபடி நம் பார்வைக்கு ஆசீர்வாதமாக இருக்கிறது போல நமக்கு தோன்றும் நம்முடைய தேவன் நாம் செய்த பாவத்துக்கு தண்டனை தந்து நம்மை சீர்படுத்தி,சத்துருவின் கையிலிருந்து நம்மை இரட்சிக்கிற தேவன் என்பதை காட்டும் படியாகவே எகிப்திற்கு அழைத்து போய் நம்மை நன்மையை காட்டுவது போல் காட்டி, அங்கு  நமக்காக உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை வெளிப்படுத்தி அவர் மூலம் நமக்கு கிறிஸ்துவின் சரீரமாகிய சபையை நமக்கு உறுதிப்படுத்தும் படியாகவே, தேவன் யோசேப்பை வைத்து நமக்கு திருஷ்டாந்தபடுத்துகிறார்.

யோசேப்பு தன் தகப்பனாகிய யாக்கோபை பார்வோனிடத்தில் அழைத்துக் கொண்டுபோய் நிறுத்துகிறான்.யாக்கோபு பார்வோனை ஆசீர்வதிக்கிறான். பின் பார்வோன் யாக்கோபிடத்தில் உன் வயது என்ன என்று கேட்கும் போது பரதேசியாய் சஞ்சரித்த நாட்கள் நூற்றி முப்பது வருஷம்.என் ஆயுசு நாட்கள் கொஞ்சமும், சஞ்சலமுமாயிருக்கிறது. அவைகள் பரதேசிகளாய் சஞ்சரித்த என் பிதாக்களுடைய ஆயுசு நாட்களுக்கு வந்து எட்டவில்லை என்று பார்வோனுடனே சொன்னான்.

ஆதியாகமம் 47:10

பின்னும் யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்து, அவன் சமுகத்தினின்று புறப்பட்டுப் போனான்.

பார்வோன் கட்டளையிட்டபடியே யோசேப்பு தன் தகப்பனுக்கும், தன் சகோதரருக்கும் எகிப்து தேசத்திலே நல்ல நாடாகிய ராமசேஸ் என்னும் நாட்டிலே சுதந்தரம் கொடுத்து, அவர்களைக் குடியேற்றினான்.

யோசேப்பு அவன் குடும்பத்தார் யாவரையும் நன்றாக ஆகாரம் கொடுத்து ஆதரித்து வருகிறான்.

ஏனென்றால் இப்போது சாப்பிடுகிற ஆகாரத்தால் நெருக்கம்  வரும்போது இந்த ஆகாரமாகிய தேவ வசனம் அப்போது பிரயோஜனமாயிருக்கும் என்று திருஷ்டாந்தபடுத்துகிறார். கானானில் இருந்தவர்கள் ஏன் எகிப்திற்கு வந்தார்கள் என்று சிந்திக்க வேண்டும்.இப்படி நம்மளில் எத்தனை பேரை தேவன் எகிப்தில் கொண்டு வைத்திருக்கிறார். இதன் அர்த்தம் என்னவென்றால் நாம் தேவனுக்கு சித்தமில்லாத காரியங்களை செய்யும்போது நம்முடைய ஆவிக்குரிய கண்கள் அடைக்கப்பட்டவர்களாக, எகிப்தின் கிரியைகளை நாம் செய்வோம்.இதற்கு காரணம் நாம் தான் என்று தெரிய வர வேண்டும்.

ஏனென்றால்,

உபாகமம் 28:58

உன் தேவனாகிய கர்த்தர் என்னும் மகிமையும் பயங்கரமுமான நாமத்திற்குப் பயப்படும்படிக்கு, நீ இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் நடக்கக் கவனமாயிராவிட்டால்,

உபாகமம் 28:68

இனிக் காணாதிருப்பாய் என்று நான் உனக்குச் சொன்னவழியாய், கர்த்தர் உன்னைக் கப்பல்களிலே எகிப்திற்குத் திரும்பக் கொண்டுபோகப்பண்ணுவார்; அங்கே உங்கள் சத்துருக்களுக்கு வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் விற்கப்படுவீர்கள்; உங்களைக் கொள்வாரும் இல்லாதிருப்பார்கள் என்றான்.

இதுதான் யாக்கோபின் சந்ததிகளாகிய இஸ்ரவேல் கோத்திரத்திற்கு நடந்தது.அங்கிருந்து அவர்கள் பல வருஷம் நெருக்கப்பட்டு கர்த்தரை நோக்கி கூக்குரலிட்டபோது கர்த்தர் கூக்குரலின் சத்தத்தை கேட்டார்.யோசேப்பு மறைந்து வேறொரு ராஜா எகிப்தில் தோன்றிய பறகு இவர்கள் நெருக்கப்படுகிறார்கள். கர்த்தர் இவ்வித ஒரு நெருக்கத்தையும்  அதிலிருந்து சபையில் ஆராதிக்கும் படியாக தருணத்தையும் திட்டமிட்டு செய்கிறார்.இப்போது சிந்திப்போம் எத்தனை பேர் எகிப்தின் கிரியைகள் செய்து தேவனால் நாம் நெருக்கபடுகிறோம்.இந்த காரியம் தேவன் இஸ்ரவேலருக்கு கீழ்ப்படிதலை கற்றுக்கொடுத்து நித்திய இரட்சிப்புக்கு ஜனங்களை ஒருக்கி நம்மை தேவனுடைய நல்பாதையில் நடத்தும்படியாக திருஷ்டாந்தப்படுத்துகிறார். கீழ்ப்படியாதவர்கள், பக்தியில்லாதவர்கள், முறுமுறுத்தவர்கள் அழிந்துபோகிறார்கள். அதனால், தேவ பிள்ளைகளாகிய நாமோ தினமும் தேவசத்தம் கேட்டு கீழ்ப்படிந்து, பயபக்தியோடு தேவனை சேவித்து, விசுவாசத்தோடு நல்ல போராட்டம் போராடி நித்திய ஜீவனை காத்து கொள்ள யாவரும் முன்வருவோமாக. கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார். ஜெபிப்போம்.                                                   

-தொடர்ச்சி நாளை.