தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 111: 5-6
தமக்குப் பயந்தவர்களுக்கு ஆகாரம் கொடுத்தார்; தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார்.
ஜாதிகளின் சுதந்தரத்தைத் தமது ஜனங்களுக்குக் கொடுத்ததினால், தமது கிரியைகளின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக. ஆமென். அல்லேலூயா.
இன்றே மனந்திரும்புங்கள் அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்:-
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாட்களில் யாக்கோபின் சந்ததிகளாகிய இஸ்ரவேல் கோத்திரம்,நித்திய இரட்சிப்புக்காக தேவன் நடத்தின கிரியைகளை குறித்து நாம் தியானித்தோம். மேலும் இஸ்ரவேல் எகிப்தில் வைத்து மரணமடைகிறான். யாக்கோபு எகிப்திலே பதினேழு வருஷம் இருந்தான்.அவன் மரணமடையும் நாட்கள் நெருங்கி வருவதை அறிந்த யாக்கோபு தன் மகனாகிய எகிப்தின் அதிபதியாயிருக்கிற யோசேப்பிடம் என்னை எகிப்திலே அடக்கம் பண்ணாதிருப்பாயாக என்றான்.
ஆதியாகமம் 47:30
நான் என் பிதாக்களோடே படுத்துக்கொள்ளவேண்டும்; ஆகையால், நீ என்னை எகிப்திலிருந்து எடுத்துக்கொண்டுபோய், அவர்களை அடக்கம்பண்ணியிருக்கிற நிலத்திலே என்னையும் அடக்கம்பண்ணு என்றான். அதற்கு அவன்: உமது சொற்படி செய்வேன் என்றான்.
இஸ்ரவேலுடைய வாழ்க்கையில் தேவன் அவனை எவ்வளவோ ஆசீர்வதித்தார். ஆனால் அவனுடைய வாழ்வின் கடைசி நாட்களில் அவன் எகிப்திற்கு அடிமையாயிருக்கிறான். தேவன் இஸ்ரவேலோடே இருந்தப்படியால், பார்வோனுடைய கண்களில் தயவு கிடைக்கப் பண்ணி யோசேப்பு தன் தகப்பனையும், சகோதரர்களையும் மிகவும் அதிகமாக பராமரித்தான். அதனால் அவர்கள் விரும்பின பிரகாரம் கோசேன் நாட்டில் தங்குவதற்கு பார்வோனும் சம்மதித்திருந்தான். அந்த கோசேன் நாடு மிகவும் செழிப்பான இடமாக இருந்தது. மற்றும் ஆடுமாடுகளை மேய்ப்பதற்கு நல்ல மேய்ச்சல் புறமாயிருந்தது மற்றும் விவசாயம் செய்வதற்கு ஏற்ற நல்ல நிலமாகயிருந்தது. அதனால் கானானிலிருந்து தேவன் யாக்கோபையும் அவன் குமாரர்களாகிய பதினொரு கோத்திர பிதாக்களையும் எகிப்திற்கு கொண்டு வந்து திருஷ்டாந்தமாக அந்த நிலத்தைக் கொடுத்து, ஆடு மாடுகளை மேய்ப்பதற்கும் நிலத்தை பயிரிடும் நிலமாகத் தேவன் அதனை அவர்களுக்கு காட்டுனது காரணம் என்னவென்றால்,எகிப்தின் அடிமையிலிருக்கிற தங்கள் ஆவி,ஆத்துமா,சரீரம் தேவனுடைய வசனமாகிய ஆகாரத்தால் பயிரிடப்பட்டது. தேவனுடைய கிருயையை தேவன் செய்து அங்கே இருந்து இஸ்ரவேலர் பெருகும் படியான காரியங்களை தேவன் செய்கிறார்.
மேலும் தேவன் ஆபிரகாம், ஈசாக்கு யாக்கோபு என்பவர்களிடத்தில் சொன்ன வாக்குதத்தத்தை நிறைவேற்றுகிறார். இஸ்ரவேலுடைய மீட்பு எகிப்தில் தான் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியால் தேவன் மீட்டு இரட்சிக்கிறார் என்பதை திருஷ்டாந்தப்படுத்தி காட்டவே தேவன் இஸ்ரவேல் சபையை எகிப்திற்கு கொண்டு வந்து இஸ்ரவேல் (யாக்கோபு) எகிப்தில் மரிக்கவும்,மரிப்பதற்கு முன்னாக இனி காண முடியாது என்று நினைத்த யோசேப்பை காணவும், அந்நாட்களில் தன்னை கானானில் தான் அடக்கப்பண்ண வேண்டும் என்று யோசேப்பினிடத்தில் கேட்கவும், அதற்கு யோசேப்பு சம்மதித்து, அப்பொழுது இஸ்ரவேல் கட்டிலின் தரைமாட்டிலே தொழுதுக் கொண்டான். இவ்விதமாக தேவன் யாக்கோபை மீட்டு இரட்சிக்கிறார் என்பது தெரியவருகிறது. எனவே,
ஏசாயா 41:8-10
என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதன் ஆபிரகாமின் சந்ததியே,
நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்துவந்து, நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன்.
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
பிரியமானவர்களே முந்தின தேவ வசனத்தை நாம் வாசிக்கும் போது தேவன் நம்மை அழைத்து தெரிந்து கொண்டு நம்மை பார்த்து: பயப்படாதே, திகையாதே நான் உன் தேவன் உன்னை பலப்படுத்தி சகாயம் பண்ணுவேன். என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன் என்று சொல்லுகிறார்.
இவ்விதமாக இஸ்ரவேலை பார்த்து நான் தெரிந்து கொண்ட யாக்கோபே, என்று சொல்லுகிறார்.
ஆனால், இங்கு யாக்கோபை, பெயர் சொல்லி அழைத்தும் அவன் பிழைத்து பெருக முடியாதபடி அவனுக்கு ஆகார பஞ்சம் வருகிறது. அதன் காரணமாக அவன் எகிப்திற்கு அடிமையாகிறான். இதன் காரணம் என்னவென்றால் மாம்ச கிரியைகள் அவனிடத்தில் காணப்பட்டு இருந்ததால் அவன் அடிமையாக்கபட்டு அங்கிருந்து தேவன் அவனை யோசேப்பு மூலம் விடுவித்து கடைசி நேரத்தில் தான் திடப்படுகிறதைப் பார்க்கிறோம்.
இதே போல் அன்பானவர்களே நம்மளிலும் அநேகம்பேர் உலகத்தோடும், மாம்சத்தோடும், இச்சைகளோடும் தங்கள் வாழ்க்கையை நடத்தி, தேவனோடும் நடந்து கொள்ளவேண்டும். தேவனுடைய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்ள வேண்டுமென்று தங்கள் வாழ்க்கையில் முக்கியமான நேரங்களை உலகத்தோடு கறைப்படுத்திக்கொண்டு தங்கள் கடமைகள் (உலக விதமான) எல்லாம் முடிந்த பிறகு தேவனுடைய கற்பனைகளை கைக்கொள்ளாலாம் என்று நினைத்து தங்கள் வாழ்க்கையை வீணாக்குகிறார்கள். அன்றைக்கு யாக்கோபை கடைசி நேரம் வரையும் அவர் தாங்கி, அவனோடே பேசியும் பலகாரியங்களை அவன் தவறாக தீர்மானம் பண்ணினபோதிலும் அவனை இக்கட்டுகளுக்கு நீங்கலாக்கி இரட்சிக்கிறார். அதற்கு காரணமென்னவென்றால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே இளங்காளை, வெள்ளாட்டுகடா இவைகளின் இரத்தம் புஸ்தகத்தின் மேலும் ஜனங்களின் மேலும் தெளிக்கப்பட்டதால், உள்ளான ஒரு புதிதாக்குதல் இல்லாமலிருந்தது. ஆனால்,
எபிரெயர் 9:22-23
நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.
ஆதலால், பரலோகத்திலுள்ளவைகளுக்குச் சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்படவேண்டியதாயிருந்தது; பரலோகத்திலுள்ளவைகளோ இவைகளிலும் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்படவேண்டியதாமே
இதற்கு தான் விசேஷித்த பலியாக தமக்காக கிறிஸ்து பலியானார். நமக்கு கிறிஸ்து பலியானதால் நாம் நினைக்கிறது போல் நமக்கேற்ற நாள் கிடைக்கும் போது நம்மை இரட்சிக்கிறவர் அல்ல. நம்முடைய கடமைகளை எல்லாம் முடியட்டும் என்று தேவன் நமக்காக காத்திருக்கிறது. நாம் மரிக்கும் முன்பாக நமக்கு இரட்சிப்பு தருகிறவர் அல்ல.
ஏனென்றால் அநேகம் பேர் சொல்லுவார்கள் இயேசு கிறிஸ்து வலது பக்கம் நின்ற கள்ளனை அவன் மரிக்கும் முன்பு இரட்சித்தார் என்று சொல்லுவார்கள். அன்பானவர்களே அப்படி யாரும் தங்கள் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து கள்ளனை நோக்கி: நீ இன்றைக்கு என்னோடு கூட பரதீசிலிருப்பாய் என்று எப்போது சொன்னார். அவர் பாவிகளுக்காக மரிக்கும் முன்பு சொன்னார் ஆனால் நமக்காக அவர் மரித்து இரத்தம் சொரிந்து விட்டார். அந்த இரத்தம் எப்போதும் நமக்காக இருக்கும் போது உங்கள் சுகபோகங்கள் எல்லாம் முடித்து வந்தால் இரட்சித்து அவரோடு சேர்த்துக் கொள்வார் என்று தவறாக நினைக்காதீர்கள். அதைத்தான்,
யாக்கோபு 1:8
இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.
ஆனால் யாக்கோபு கடைசி நேரத்தில் தன்னை திடப்படுத்திக் கொள்கிறான்.
பின்பு யாக்கோபுடைய நிலைமை வருத்தமாயிருக்கிறது என்று யோசேப்புக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது யோசேப்பு தன் இரண்டு குமாரரையும் கூட்டிக்கொண்டு தகப்பனிடத்தில் போகிறான்.
அப்பொழுது இஸ்ரவேல் தன்னை திடப்படுத்திக்கொண்டு, கட்டிலில் மேல் உட்கார்ந்தான்.
ஆதியாகமம் 48: 3 - 4
யாக்கோபு யோசேப்பை நோக்கி: சர்வவல்லமையுள்ள தேவன் கானான் தேசத்திலுள்ள லூஸ் என்னும் இடத்தில் எனக்குத் தரிசனமாகி, என்னை ஆசீர்வதித்து:
நான் உன்னைப் பலுகவும் பெருகவும் பண்ணி, உன்னைப் பல ஜனக்கூட்டமாக்கி, உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தை நித்திய சுதந்தரமாகக் கொடுப்பேன் என்று என்னோடே சொன்னார்.
இவ்விதமாக யாக்கோபு தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தை யோசேப்பினிடத்தில் அறிவிக்கிறான்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, தேவ வசனத்தை வாசித்து விட்டு விடாதபடி ஒவ்வொருவரும் நம்மை நாமே சோதித்து அறிந்து நம் வாழ்க்கையில் இருக்கிற உலக சுகபோக இன்பங்களை மறந்து, அவையெல்லாம் விட்டு தேவனிடத்தில் இன்றே மனந்திரும்புங்கள் அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள். கர்த்தர் உங்கள் எல்லா ஜெபங்களையும் அங்கீகரித்து ஆசீர்வதிப்பார். ஜெபிப்போம். -தொடர்ச்சி நாளை.