அந்நியனும் பரதேசிகளும் யார்?

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Jun 30, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபேசியர் 2:19-20

ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோட, ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து,

அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளென்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

அந்நியனும் பரதேசிகளும் யார்?

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் மனந்திரும்புங்கள் அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள் என்பதை குறித்து தியானித்தோம்.  இந்நாட்களில் தாமதமில்லாமல் நாட்களை வீணாக செலவழிக்காதபடி தக்க  வேளையில் தேவனுடைய வார்த்தைகளை நாம் கேட்டவுடனே நாம் மனந்திரும்புவோமானால் நமக்கு மிகவும் ஆசீர்வாதமாயிருக்கும் .கழிந்த நாளில் யாக்கோபை பற்றி சில காரியங்களை தேவன் திருஷ்டாந்ததோடு  எடுத்து காட்டி, நாம் எப்படி எகிப்தின் அடிமையிலிருந்து மீட்கப்பட வேண்டும் என்று நாம் சில காரியங்களை குறித்து தியானித்தோம்.

யாக்கோபு பார்வோனிடத்தில் வந்தபோது பார்வோன், யாக்கோபை நோக்கி: உன் வயது என்ன என்று கேட்டதற்கு, யாக்கோபு நான் பரதேசியாய் சஞ்சரித்த நாட்கள் நூற்று முப்பது வருஷம்,என் ஆயுசு நாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது. அவைகள் பரதேசியாய் சஞ்சரித்த என் பிதாக்களுடைய ஆயுசு நாட்களுக்கு வந்து எட்டவில்லை என்று சொன்னான்.

இதிலிருந்து நமக்கு தெரியவருகிறது என்னவென்றால் நம் முற்பிதாக்கள் எல்லோரும் பரதேசிகளாய் இருந்தார்கள். அது என்னவெனில் அவர்களுக்குள் முழுமையான சுத்திகரிப்பு இல்லாததால் அவர்கள் எல்லோரும் தங்களை பரதேசிகள் என்று அறிக்கையிட்டார்கள். ஏனென்றால் கழிந்த நாளில் நாம் தியானித்தோம் இரத்தம் சிந்துதலில்லாமல் பாவமன்னிப்பு உண்டாகாது. ஆனால் அவர்கள் மரிக்கும் போது,

 எபிரெயர்: 11:13

இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்.

இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சுய தேசத்தை நாடி போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள்.

அந்த சுயதேசம், கானான் தேசமாகிய பாலும், தேனும் ஓடுகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ,அவர்கள் நாடி போகிறோம் என்று தான் அறிக்கையிடுகிறார்கள்.

ஆனால் யாக்கோபுக்கும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. அதனால் அவன் பார்வோனிடம் நான் பரதேசியும், என் நாட்கள் கொஞ்சமும், சஞ்சலமுமாயிருக்கிறது என்றான்.

ஆனால், அவர்களை காட்டிலும் நாம் எவ்வளவோ விசேஷித்தவர்களாகயிருக்கிறோம் என்று நாம் சிந்திக்க வேண்டும். அவர்கள் தூரத்திலே அந்த தேசத்தை கண்டு விசுவாசத்தோடே மரித்தார்கள். ஆனால் நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்மளில் தரித்தும், அவர் நமக்குள்ளில் பிரவேசித்தும், நம்மளில் தங்கியும் சுயதேசமாக ,தேவன் நம்மை மாற்றி இருந்தாலும் அநேகம் பேர் நான் பரதேசி என்று சொல்வார்கள்.

அன்பானவர்களே பரதேசி யார்?

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்பது நமக்கு தெரிய வேண்டும். இவ்விதமாக  நமக்குள்ளில் மாம்ச கிரியை இருக்கிறவர்கள் தான் பரதேசிகள் .அவர்களுடைய வாழ்க்கை, கொஞ்சமும் சஞ்சலமுமாயிருக்கும்.

ஆனால், நாமோ என்றென்றைக்கும் அவரோடு பிழைத்து இருக்கும்படியாக அவருடைய ஜீவனை நமக்காக தந்து,நாம் நித்திய ஜீவனை சுதந்தரித்து கொண்டோமானால் ,நாம் தீர்காயுசுடையவர்கள் .நம் சஞ்சலம் நம்மைவிட்டு மாறிப்போகும்.

உலகம், மாமிசம், பிசாசு இவற்றை ஜெயிக்காதவர்களுடைய வாழ்க்கை துக்கமும், சஞ்சலமாயிருக்கும். நாம் தேவனுடைய வீடாக மாறுவோமானால்,எப்போதும்  கிறிஸ்துவுக்குள் சந்தோஷமாகயிருக்க முடியும்.

இதை வாசிக்கிற தேவஜனமே, அவரவர் ஒன்று தங்களை சிந்தியுங்கள் நம்மளில் விசுவாசமும், அந்த விசுவாசம் கிரியையில் இருக்குமானால், நாம் தேவனை தரிசிக்கிறோம். எப்போதும் நம் இருதயம் சுத்தமாயிருக்க வேண்டும். மாம்ச கறைகள், உலக கவலைகள் அகற்றப்பட்டு விட்டால் நான் பரதேசிகள் அல்ல என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

மரணமும், ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கிறது. அதனால் தேவஜனமே இதனை வாசித்து ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை சீர்படுத்திக் கொள்வோமானால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்போம். இனி மேல் உண்மையாக, உள்ளம் தேவ அன்பால் நிறைந்தால் மாத்திரம், நாம் பரதேசிகள் அல்ல ,என்று தீர்மானியுங்கள்.

அப்போஸ்தலர் 13:17-20

இஸ்ரவேலராகிய இந்த ஜனத்தினுடைய தேவன் நம்முடைய பிதாக்களைத் தெரிந்துகொண்டு, எகிப்து தேசத்தில் அவர்கள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்தபோது ஜனங்களை உயர்த்தி, தமது புயபலத்தினாலே அதிலிருந்து அவர்களைப் புறப்படப்பண்ணி,

நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்தில் அவர்களை ஆதரித்து,

கானான் தேசத்தில் ஏழு ஜாதிகளை அழித்து, அவர்களுடைய தேசத்தை இவர்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டுக்கொடுத்து,

பின்பு ஏறக்குறைய நானூற்றைம்பது வருஷகாலமாய் சாமுவேல் தீர்க்கதரிசிவரைக்கும் அவர்களுக்கு நியாயாதிபதிகளை ஏற்படுத்திவந்தார்.

1 பேதுரு நிருபம் நாம் வாசிக்கும் போது சபையில், பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது என்று பேதுரு எழுதுகிறதை பார்க்கமுடிகிறது. அதற்கு காரணமென்னவென்றால் மறுபடியும் ஜெநிபிக்கபட்டவர்கள், தங்கள் இச்சைகளின் படி நடக்கிறதினால் அவர்கள் பரதேசிகள் என்று எழுதப்பட்டிருக்கிறது.

1 பேதுரு 1:13-16

ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்தபுத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.

நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து,

உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.

நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.

மேலும் சபையாம் குடும்பங்களுக்கு பரதேசிகள் என்று எழுதுவது காரணமென்னவென்றால், மக்கள் முன்னோர்கள் நடந்த பிரகாரம் பாரம்பரிய கிரியைகளுக்கு உடன்பட்டு, மேலும் அலங்காரங்களோடு நடந்தார்கள் என்று விளங்குகிறது. அதனால், பூரண நம்பிக்கையை குறித்தும் தேவ வார்த்தை எழுதுகிறான் என்பது தெரியவருகிறது. மற்றும்,

1 பேதுரு 2:11-12

பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி,

புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.

மேற்கூறிய தேவனுடைய வசனம் எதை கூறுகிறது என்றால் மாம்ச இச்சையோடும், மாம்ச கிரியைகளோடும் வாழ்கிறவர்கள் அந்நியர்களும் பரதேசிகளும் என்று விளங்குகிறது. ஆனால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் மாம்ச கிரியைகளை அழிக்கும்படியாகவே வெளிப்படுகிறார்.

ரோமர் 8:13

மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.

இந்த செயல்பாடுகள் நம் முற்பிதாக்களுக்கும் கிடைக்க வில்லை. அதனால் நமக்கோ அந்த நன்மையான பாக்கியத்தை தேவன் தந்து நம்மை தேவ ஆவியினால் நடத்திச் செல்கிறார். ஒவ்வொரு நாளும் அவர் கிருபையினால் நம்மை நிறைக்கிறார்.

ஆனால், விசுவாசத்தோடு மரித்த நம் முற்பிதாக்கள் எப்போது உயிர்தெழுந்தார்கள் என்றால், இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட போது மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஆவியை விட்டார்.

மத்தேயு 27:51-53

அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது கன்மலைகளும் பிளந்தது.

கல்லறைகளும் திறந்தது, நித்திரை அடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.

அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து அநேகருக்குக் காணப்பட்டார்கள்.

பிரியமானவர்களே, மேற்கூறிய காரியங்களை நாம் பார்க்கும் போது பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள். இயேசு உயிர்த்தெழுந்த பின்பு தான் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசித்தார்கள். அதனால் அவர்கள் பூமியில் வாழ்ந்த நாட்கள் எல்லாம் பரதேசிகளும் தான் என்பதை நமக்கு விளக்கிக் காட்டுகிறது.

ஆனால், நாமோ இவ்வுலகத்தில் வாழும் போதே கிறிஸ்து அவர் ஜீவனை நமக்கு தந்து நம்மை பூமியில் வைத்தே பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்க செய்கிறார். அதனால் நாம் அந்நியனும் அல்ல, பரதேசியுமல்ல  நாம் தேவனுடைய சொந்த ஜனமாயிருக்கிறோம்.

ஆனால் பிரியமானவர்களே இதுவரையும் யாராவது அப்படி பரதேசி என்று நினைத்தீர்களானால் தேவனிடத்தில் சேரும் சிலாக்கியத்தை கிறிஸ்துவின் இரத்தத்தால் பெற்றுக்கொள்ளுங்கள். அப்படியானால் இந்நேரமே அவர் உங்களைக் காப்பாற்றுவார் என்பதில் மாற்றமில்லை.

எல்லாவிதத்திலும் உங்கள் யாவரையும் காப்பாற்றுவார்.  ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.  

- தொடர்ச்சி நாளை.