தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 61:10
கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.
அல்லேலூயா.
கர்த்தர் தருகிற மாற்று வஸ்திரம்:- திருஷ்டாந்தம்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நாம் முந்தின நாளில் தியானித்ததான வேதப் பகுதியில் நாம் இனி அந்நியனும், பரதேசிகளுமாயிராமல் பரிசுத்தவான்களோடு ஒரே நகரத்தாரும்,தேவனுடைய வீட்டாருமாக இருக்க வேண்டும் என்ற கருத்தால் தியானித்தோம். எப்படியெனில் நம்முடைய முற்பிதாக்களுக்கு அநேக வழிமுறைகள் தேவன் காட்டி கானானுக்கு பிரவேசிக்கும் பாதையை காட்டி நமக்கு தேவன் திருஷ்டாந்தபடுத்தியிருக்கிறதை பார்க்க முடிகிறது. மேலும் பன்னிரண்டு கோத்திரபிதாக்களுக்கும் எல்கைகளை சீட்டு போட்டு பிரித்து பங்கிட்டு கொடுக்கிறதை வாசிக்க முடிகிறது.சில பேருக்கு காடுகளை வெட்டி திருத்தும் படியாக மலைப்பகுதிகளை கொடுக்கிறதை வாசிக்க முடிகிறது. இவை எல்லாம் நாம் எப்படி நம்முடைய நிலம் (இருதயம்)கொத்தி சீர் படுத்த வேண்டும் என்பதும் நம்முடைய ஆத்துமா ஆதாயம் எப்படியிருக்க வேண்டும்.மேலும் தேவன் நம்முடைய ஆத்துமாவில் கிரியையை நடப்பித்து மற்ற ஆத்துமாக்களை எப்படி தன்னண்டையில் இழுத்து கொள்கிறார் என்பதை நமக்கு பழைய ஏற்பாடு பகுதியில் மோசே, யோசுவாவை வைத்து விளக்கி காட்டி திருஷ்டாந்தப்படுத்துகிறதை பார்க்க முடிகிறது.
மேலும், யோசேப்பு பென்யமீன் சாக்கில் வெள்ளிபானபாத்திரம் வைத்தது எதற்காக என்று சில நாட்களுக்கு முன்பாக நாம் தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிக்க போகிற காரியங்கள் என்னவெனில்,இஸ்ரவேல் புத்திரருக்கு கர்த்தர் யோசேப்பை வைத்து கொடுத்தது என்னவென்றால் ஒவ்வொருவனுக்கும் மாற்று வஸ்திரங்களையும் பென்யமீனுக்கோ முந்நூறு வெள்ளிக்காசையும், ஐந்து மாற்று வஸ்திரங்களையும் கொடுத்தான்.
மாற்று வஸ்திரம் என்று சொல்லும் போது முந்தின வஸ்திரம் களைந்து போட வேண்டும். புதிய வஸ்திரம் தரிக்க வேண்டும். இதன் அர்த்தம் என்னவென்றால், பழைய வாழ்க்கை, மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை இவைகளை களைந்து போட்டு புதியவைகளை இஸ்ரவேல் புத்திரர் தரித்துக்கொள்ள வேண்டும். என்பதற்காக தேவன் இவ்விதம் மாற்று வஸ்திரம் கொடுத்து திருஷ்டாந்தபடுத்துகிறார்.
அல்லாமலும் பென்யமீனுக்கு ஐந்து மாற்று வஸ்திரங்களையும் முந்நூறு வெள்ளிக்காசும் கொடுக்கப்படுகிறதை நாம் வாசிக்க முடிகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் கர்த்தர் பென்யமீன் கோத்திரத்தில் செய்ய போகிற காரியங்களை குறித்து திருஷ்டாந்தபடுத்துகிறார்.
எப்படியெனில் கர்த்தர் மோசேயின் மூலம் இஸ்ரவேல் பன்னிரண்டு கோத்திரத்துக்கு நிலங்களையும் எல்கைகளையும் பங்கிட்டு கொடுத்ததில், மோசேயின் மரணத்திற்குப் பிறகு ஏழு கோத்திரத்துக்கு பங்கிட வேண்டியதாயிருந்தது. அப்பொழுது யோசுவா இஸ்ரவேல் மீதி கோத்திரபிதாக்களிடம் சொல்கிறான்: கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்து கொள்ள போகிறதற்கு அசதியாயிராதேயுங்கள் என்று சொல்கிறான்.
ஏழு கோத்திரங்கள் தேசத்தை சுதந்தரிக்க அசதியாயிருக்கிறதை பார்க்கிறோம்.
அதேபோல் நாமும் நம் வாழ்க்கையில் அசதியாயிராமல் இப்பொழுது கிடைத்திருக்கிற இந்த சமயத்தில் நம் தேசமாகிய கிறிஸ்துவை நாம் சொந்தமாக்கி கொள்வோம்.
ஆனால் யோசுவா சொல்கிறான்,
யோசுவா 18:4
கோத்திரத்திற்கு மும்மூன்று மனுஷரைத் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, தேசத்திலே சுற்றித்திரிந்து அதைத் தங்கள் சுதந்தரத்துக்குத் தக்கதாக விவரமாய் எழுதி, என்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களை அனுப்புவேன்.
மேலும் ஏழு பங்காக விவரித்து எழுதி என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்று யோசுவா சொல்லி அனுப்புகிறான். அவர்கள் அவ்விதமே எழுதி சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டு வந்தார்கள். அப்பொழுது யோசுவா சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் சீட்டு போட்டு,அங்கே இஸ்ரவேல் புத்திரருக்கு தேசத்தை பங்கிட்டுக் கொடுத்தான். அதில் முதல் பென்யமீன்
புத்திரருக்கு சீட்டு விழுந்தது. பென்யமீனுக்கு தேவன் கொடுத்த நிலம் யூதா புத்திரரின் எல்லைக்கும் யோசேப்பு புத்திரரின் எல்லைக்கும் நடுவாக இருந்தது ஆனால் சீட்டு பென்யமீன் புத்திரருக்கு விழுவதற்கு முன்பே,
யோசுவா 18:5
அதை ஏழு பங்காகப் பகிரக்கடவர்கள்; யூதா வம்சத்தார் தெற்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும், யோசேப்பு வம்சத்தார் வடக்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும் நிலைத்திருக்கட்டும்.
இவ்விதமாக யோசுவா சீட்டு போடுவதற்கு முன்பே சொன்னதை வாசிக்க முடிகிறது
ஆனால், இருவருடைய எல்கையின் நடுவே பென்யமீன் புத்திரருக்கு கொடுக்கப்படுகிறது இவ்விதமாகவே தாராளமாக கொடுக்கப்படுவது என்னவென்றால் தேவன் பென்யமீன் கோத்திரத்தை குறிப்பாக கண்டிருக்கிறார் என்பது தெரிய வருகிறது. ஆனால் நிலைத்திருப்பவர்கள் யூதா கோத்திரமும், யோசேப்பு வம்சமும் என்பது எழுதப்பட்டிருக்கிறது.
யோசேப்பு வம்சத்தில் எப்பிராயீம், மனாசே குறிப்பிடபட்டிருக்கிறது ஆனால் பென்யமீன் கோத்திரம் தேவன் அதிகமாக நேசிக்கிறார்.
எப்படியெனில் முதல் முதலாக ராஜாவாக அபிஷேகம் பண்ணுவது பென்யமீன் கோத்திரத்தானகிய கீசின் குமாரனாகிய சவுலை. ஆனால், அவன் கர்த்தருக்கு சித்தமானதை செய்யவில்லை அதனால் அவனை தள்ளி விடுகிறார்.
ஜனங்கள் எங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்டபோது,
1சாமுவேல் 10:18,19
இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, உங்களை எகிப்தியர் கைக்கும், உங்களை இறுகப்பிடித்த எல்லா ராஜ்யத்தாரின் கைக்கும் நீங்கலாக்கிவிட்டேன்.
நீங்களோ உங்களுடைய எல்லாத்தீங்குகளுக்கும் நெருக்கங்களுக்கும் உங்களை நீங்கலாக்கி ரட்சித்த உங்கள் தேவனை இந்நாளிலே புறக்கணித்து, ஒரு ராஜாவை எங்கள்மேல் ஏற்படுத்தும் என்று அவரிடத்தில் கேட்டுக்கொண்டீர்கள்; இப்பொழுது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் வம்சங்களின்படியேயும், ஆயிரங்களான உங்கள் சேர்வைகளின்படியேயும், வந்து நில்லுங்கள்; என்றான்.
எல்லோரையும் சேரப் பண்ணின பின்பு பென்யமீன் கோத்திரத்தானாகிய, கீசின் குமாரன் சவுலின் மேல் சீட்டு விழுந்தது .அவனை தேடின பின்பு காணாததால் ஜனங்கள் கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள். அதற்கு கர்த்தர் அவன் தளவாடங்களிருக்கிற இடத்திலே ஒளிந்துக் கொண்டிருக்கிறான் என்று கர்த்தர் சொன்னார்.
சவுலை கர்த்தர் சாமுவேலை வைத்து அபிஷேகம் பண்ணுகிறதை பார்க்கிறோம். இவ்விதமாக பென்யமீன் கோத்திரத்திற்கு முதல் ராஜரீக அபிஷேகம் பண்ணுகிறார். அந்த அபிஷேகத்தை அவன் காத்துக் கொள்ளவில்லை. இவ்விதமாக அவன் காத்துக் கொள்ளாததால் ஈசாயின் குமாரனாகிய தாவீதை தேவன் அபிஷேகம் பண்ணினார். தாவீது இஸ்ரவேலுக்கு ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டதிலிருந்து அவனுடைய கைகள் இரத்தக்கறைகளாக இருக்கிறது என்று வேத வசனம் சொல்லப்படுகிறது. அதனால் தேவன் தாவீதை வைத்து ஆலயம் கட்டாமல், உன் கர்ப்பபிறப்பாயிருக்கிற சாலொமோன் எனக்கு ஆலயத்தை கட்டுவான் என்று தேவன் சொல்லுகிறார். ஆனால் சாலொமோன் ஆலயத்தைக் கட்டினான் ஆனால் அவனும் பார்வோனுடைய குமாரத்தியை நேசித்தது மட்டுமல்லாமல் மற்றும் அந்நிய ஜாதியான அநேக ஸ்திரீகள் மேல் ஆசை வைத்தான் அதனால் தேவனை விட்டு அவன் இருதயம் வழுவி போனது. பின்பு தாவீதின் சிங்காசனத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தேவன் அபிஷேகம் பண்ணுகிறார். பின்பு,
அப்போஸ்தலர் 13:33-34
இயேசுவை எழுப்பினதினாலே தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச் செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கிறோம்.
இனி அவர் அழிவுக்குட்படாதபடிக்கு அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதைக்குறித்து: தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன் என்று திருவுளம்பற்றினார்.
இயேசுவை எழுப்பினவர், நம்மையும் அவரோடே கூட எழுப்பினார்.
பிரியமானவர்களே இவ்விதமாக இஸ்ரவேல் புத்திரர் எல்லாம் இரட்சிப்பை சுகந்தரிக்க வேண்டும் என்றும், பென்யமீனுக்கு கொடுத்த ஐந்து மாற்று வஸ்திரம் என்ன என்பதின் விளக்கம்,நம் முற்பிதாக்கள் பெற்றுக்கொண்ட வாக்குத்தத்தம், இன்றைக்கு தேவன் நமக்கு இரட்சிப்பை அருளியிருக்கிறார். இந்த இரட்சிப்பின் வஸ்திரம் இழந்து போகாதபடி நாம் காத்துக் கொள்ளவேண்டும். இரட்சிப்பின் வஸ்திரம் தரிக்காதவர்கள் இந்நாட்களில் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தாகத்தோடு நாம் தேவனிடத்தில் இருந்து அதனை பெற்றுக் கொண்டால், அது நமக்கு மிகவும் ஆசீர்வாதமும், சந்தோஷமும், சமாதானமும் உண்டாயிருக்கும்.
நாம் யாவரும் ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பாராக.
-தொடர்ச்சி நாளை.