தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 49:22

இதோ, ஜாதிகளுக்கு நேராக என் கரத்தை உயர்த்தி, ஜனங்களுக்கு நேராக என் கொடியை ஏற்றுவேன்; அப்பொழுது உன் குமாரரைக் கொடுங்கைகளில் ஏந்திக்கொண்டு வருவார்கள்; உன் குமாரத்திகள் தோளின்மேல் எடுத்துக்கொண்டு வரப்படுவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் சபைகள் பெருக கிறிஸ்துவினால் பாடுபட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்தவேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவாகிய தேவனுடைய வீடு கர்த்தரின் வசனத்தால் ஆசீர்வதிக்கப்படும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம் 14:1-3

தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதினிடத்தில் ஸ்தானாபதிகளையும், அவனுக்கு ஒரு வீட்டைக் கட்டுகிறதற்குக் கேதுருமரங்களையும், தச்சரையும், கல்தச்சரையும் அனுப்பினான்.

கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, இஸ்ரவேல் என்னும் தம்முடைய ஜனத்தினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான்.

எருசலேமிலே தாவீது பின்னும் அநேக ஸ்திரீகளை விவாகம்பண்ணி, பின்னும் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதினிடத்தில் ஸ்தானாபதிகளையும், அவனுக்கு ஒரு வீட்டை கட்டுவதற்குக் கேதுரு மரங்களையும்  தச்சரையும், கல் தச்சரையும் அனுப்பினான்.  கர்த்தர் தன்னை இஸ்ரவேலின் மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, இஸ்ரவேல் என்னும் தம்முடைய ஜனத்தினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துக்கொண்டான். எருசலேமிலே தாவீது இன்னும் அநேக ஸ்திரீகளை விவாகம் பண்ணி குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றெடுத்தான்.  எருசலேமிலே அவனுக்கு பிறந்த நாமங்களாவன 

1 நாளாகமம் 14:4-7 

எருசலேமிலே அவனுக்குப் பிறந்த குமாரரின் நாமங்களாவன: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன்,

இப்கார், எலிசூவா, எல்பெலேத்,

நோகா, நெப்பேக், யப்பியா,

எலிஷாமா, பெலியாதா, எலிப்பெலேத் என்பவைகள்.

இவைகளின் கருத்துக்கள் என்னவென்றால் கிறிஸ்து அநேக சபைகளை உருவாக்கி, அதன் மூலம் குமாரத்திகளையும், குமாரரையும் பெற்றெடுப்பது தான் தேவனின் செயல் என்பதனை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  அதற்காக தாவீது சமஸ்த இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டதை அறிந்த பெலிஸ்தர் தாவீதை தேடும்படி வந்தார்கள்; அதை  தாவீது கேட்ட போது அவர்களுக்கு விரோதமாக புறப்பட்டான்.  பெலிஸ்தர் ரெப்பாயீம் பள்ளதாக்கிலே பாளயமிறங்கினார்கள்.  மேலும் தாவீது கர்ததரிடத்தில் பெலிஸ்தருக்கு விரோதமாக போகலாம் என்று விசாரித்ததற்கு; கர்த்தர்  போகலாம் அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.  தாவீது பாகால் பிராசீமுக்கு வந்த போது தாவீது அங்கே அவர்களை முறியடித்து தண்ணீர்உடைந்தோடுகிறது போல தேவன் என் கையினால் என் சத்துருக்களை உடைந்தோட பண்ணினார் என்றான்; அந்த ஸ்தலத்திற்கு பாகால் பிராசீம் என்று அவர்கள் பெயரிட்டார்கள்.  

பிரியமானவர்களே,  கிறிஸ்துவின் சந்ததி என்றால் அவர் மேல் நாம் அஸ்திபாரம் போட்டால் நம்மில் எல்லா பெலிஸ்திய செயலாகிய பொன்னும், வெள்ளியையும் முற்றிலும் அகற்றி நம்மை கர்த்தருக்காய் ஒப்புக்கொடுத்தால் மட்டுமே கிறிஸ்துவினால் நாம் ஜீவன் பெற்று, நாம்  சபையோடு சேர்ந்தால் நித்திய ஜீவனை நாம் சுதந்தரத்துக் கொண்டு அவருக்காக கிறிஸ்துவினால் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்று எடுக்க முடியும். இதனைத்தான் கர்த்தர் தாவீதை வைத்து சபையின் வர்த்தனையை திருஷ்டாந்தப்படுத்துகிறார். இப்படியாக நாம் சபைகள் பெருகும்படியாக கர்த்தருக்காக உழைப்போம், ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.