தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 100:2
மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் மகிழ்ச்சியோடு கர்த்தருக்கு ஆராதனை செய்வோம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் வேலைக்காக நம்மை பரிசுத்தப்படுத்திக்கொண்டு தகுதியாக்கிக் கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1 நாளாகமம் 15:15-16
பின்பு லேவி புத்திரர் கர்த்தருடைய வார்த்தையின்படியே, மோசே கற்பித்தபிரகாரம் தேவனுடைய பெட்டியை அதின் தண்டுகளினாலே தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டுவந்தார்கள்.
தாவீது லேவியரின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரராகிய பாடகரைத் தம்புரு சுரமண்டலம் கைத்தாளம் முதலிய கீதவாத்தியங்கள் முழங்க, தங்கள் சத்தத்தை உயர்த்தி, சந்தோஷமுண்டாகப் பாடும்படி நிறுத்தவேண்டுமென்று சொன்னான்.
மேற்கூறப்பட்ட வசனங்களின் பிரகாரம் தாவீது சொன்னபடியே லேவி புத்திரர் கர்த்தரின் வார்த்தையின் படியே, மோசே கற்பித்தபிரகாரம் தேவனுடைய பெட்டியை அதின் தண்டுகளினாலே தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டு வந்தார்கள். அப்போது தாவீது லேவியரின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரராகிய பாடகரை சுரமண்டலம் தம்புரு கைத்தாள முதலிய கீத வாத்தியங்கள் முழங்க தங்கள் சத்தத்தை உயர்த்தி, சந்தோஷம் உண்டாக பாடும்படி நிறுத்த வேண்டும் என்று சொன்னான். அப்படியே லேவியர்
1 நாளாகமம் 15:17,18
அப்படியே லேவியர் யோவேலின் குமாரனாகிய ஏமானையும், அவன் சகோதரரில் பெரகியாவின் குமாரனாகிய ஆசாப்பையும், மெராரியின் புத்திரரான தங்கள் சகோதரரில் குஷாயாவின் குமாரனாகிய ஏத்தானையும்,
இவர்களோடுங்கூட இரண்டாவது வரிசையாகத் தங்கள் சகோதரராகிய சகரியா, பேன், யாசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், பெனாயா, மாசெயா, மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்னும் வாசல் காவலாளரையும் நிறுத்தினார்கள்.
மேற்கூறிய வாசல் காவலாளரையும் நிறுத்தினார்கள். பாடகராகிய ஏமானும், ஆசாப்பும், ஏத்தானும், பஞ்சலோகக் கைத்தாளங்களைத் தொனிக்கப்பண்ணி பாடினார்கள். மேலும்
1 நாளாகமம் 15:20
சகரியா, ஆசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், மாசெயா, பெனாயா என்பவர்கள் அல்மோத் என்னும் இசையில் பாடி, தம்புருகளை வாசித்தார்கள்.
இதில் எழுதபட்டவர்கள் அல்மோத் என்னும் இசையில் பாடி தம்புருக்களை வாசித்தார்கள். அல்லாமலும் 1நாளாகமம் 15:21-ம் வசனத்தில் உள்ளவர்கள் செமனீத் என்னும் இசையில் பாடி சுரமண்டலங்களை நேர்த்தியாய் வாசித்தார்கள். மேலும் லேவியருக்குள்ளே கெனானியா என்பவன் சங்கீத தலைவனாயிருந்தான்;அவன் நிபுணானபடியால் , கீத வித்தையை படிப்பித்தான். பெரகியாவும், எல்க்கானாவும் பெட்டிக்கு முன்பாகக் காவல் காத்து வந்தார்கள்.
1 நாளாகமம் 15:24
செபனியா, யோசபாத், நெதனெயேல், அமாசாயி, சகரியா, பெனாயா, எலியேசர் என்னும் ஆசாரியர் தேவனுடைய பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதினார்கள்; ஓபேத்ஏதோமும், எகியாவும் பெட்டிக்கு வாசல் காவலாளராயிருந்தார்கள்.
இதில் எழுதப்பட்டவர்கள் பெட்டிக்கு வாசல் காவலாளராயிருந்தார்கள். இப்படி தாவீதும், இஸ்ரவேலின் மூப்பரும், ஆயிரத்துச் சேர்வைக்காரரும் கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியை ஓபேத் ஏதோமின் வீட்டிலிருந்து மகிழ்ச்சியோடே கொண்டுவர போனார்கள். கர்த்தருடைய உடனபடிக்கை பெட்டியை சுமக்கிற லேவியருக்கு தேவன் அனுக்கிரகம்பண்ணினபடியால், அவர்கள் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுகடாக்களையும் பலியிட்டார்கள். தாவீதும் பெட்டியை சுமக்கிற லேவியரும், பாடகரும், பாடகரின் வேலையை விசாரிக்கிற கெனானியாவும், மெல்லிய புடவையான சால்வையை தரித்தார்கள்; தாவீது சணல் நூல் ஏபோத்தை தரித்திருந்தான். அப்படியே இஸ்ரவேலனைத்தும் கர்த்தரின் உடன்படிக்கைப் பெட்டியை கெம்பீரத்தோடும், எக்காளங்கள், பூரிகைகள் கைத்தாளங்களின் தொனியோடும், தம்புருக்களையும், சுரமண்டலங்களையும் வாசிக்கிற சத்தத்தோடும் கொண்டு வந்தார்கள். கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி தாவீதின் நகரமட்டும் வந்த போது சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணி வழியாய் பாரத்து, தாவீது ராஜா ஆடிப்பாடி வருகிறதைக்கண்டு அவனை தன் இருதயத்தில் அவமதித்தாள்.
பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, நம்முடைய துக்கத்தை சந்தோஷமாக மாற்றுகிறவர். எப்படியெனில் அவர் நம்மில் வரும் போது எல்லா இசை கருவிகளும் அவருடைய சரீரத்தின் அவயவங்கள். அவர் சத்தம் நம்மில் இசையோடு தொனித்துக்கொண்டிருக்கும். இதனை திருஷ்டாந்தப்படுத்தவே பாடகர்களும், வாசற் காவலாளரும் கீத வாத்தியங்கள், தம்புரு, சுரமண்டலம் இவைகள் எல்லாம் எழுதப்பட்டிருக்கிறது. மேலும் அவர்தான் அந்த உடன்படிக்கை பெட்டி, அதனை நாம் சுமந்து வந்தால் எல்லா இசைகளும் முழங்கும்; ஆடல்பாடலின் சத்தம் தொனிக்கும். இவற்றை கண்டால் அவமதிக்கிறவர்களும் உண்டு. நாம் யாரும் கர்த்தரை அவமதிக்கக்கூடாது; அப்படியாக அவமதித்தால் யாராக இருந்தாலும் அவர்களுடைய ஜீவன் இருக்கும் நாளளவும் நன்மையை கண்டடைய முடியாது. ஆதலால் நாம் பாடல் சத்தத்தோடு கர்த்தரை துதித்து அவர் வசனங்களை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியோடு கர்த்தருக்கு ஆராதனை செய்யும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.