தேவனுக்கே மகிமையுண்டாவதாக

மாற்கு 16:15,16

பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.

விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் உயிர்தெழுந்த கிறிஸ்துவை குறித்து சுவிசேஷமாய் அறிவிக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் கிருபையில் பிரவேசிக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம் 16:19-22 

அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத்தொகைக்குட்பட்ட சொற்பஜனங்களும் பரதேசிகளுமாயிருந்தார்கள்.

அவர்கள் ஒரு ஜனத்தை விட்டு மறு ஜனத்தண்டைக்கும், ஒரு ராஜ்யத்தை விட்டு மறு தேசத்தாரண்டைக்கும் போனார்கள்.

அவர்களை யொடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள் நிமித்தம் ராஜாக்களைக் கடிந்துகொண்டு:

நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்குசெய்யாமலும் இருங்கள் என்றார்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை வைத்து நமக்கு திருஷ்டாந்தப்படுத்தி கூறுவது என்னவென்றால், கிறிஸ்துவாகிய மணவாட்டி சபை நம் உள்ளத்தில் பிரவேசிப்பார் என்பதனை குறிப்பிட்டு,  மணவாட்டி சபையாகிய நாம் எப்படி கர்த்தருக்காக வாழவேண்டும் என்பது தான் தேவன் நமக்கு காட்டிய திருஷ்டாந்தம் ; அதென்னவென்றால் அக்காலத்தில் அவர்கள் கொஞ்சம் தொகைக்குட்பட்ட சொற்ப ஜனங்களும், பரதேசிகளுமாயிருந்தார்கள்.  கிறிஸ்துவாகிய மணவாட்டி சபை உள்ளத்தில் வராதவர்கள் பரதேசிகள் என்று எழுதப்பட்டிருக்கிறது.  இப்போதும் புதிய ஏற்பாட்டின் பகுதியிலும் பரதேசிகளுக்கு என்று எழுதப்பட்டிருக்கிறது என்றவென்றால் ஜனங்கள் கர்த்தரின் வசனத்தை கேட்டும், அதன்படி நடக்காமல், பூரண கிருபை பெற்றுக்கொள்ளாத நாம் யாவரும் பரதேசிகள்.  ஏனென்றால் அவர்கள் ஆவியின்படி நடவாமல் மாம்சத்தின் படி நடக்கிறவர்களைக் குறித்து இவ்விதமாக எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் கர்த்தரின் வசனம் 

எபேசியர் 2:19,20 

ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து,

அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்;

மேற்கூறிய வசனங்களில் நாம் அந்நியரும், பரதேசிகளுமாயிராமல் பரிசுத்தவான்களோடு ஒரே நகரத்தாரும், தேவனுடைய வீட்டாருமாயிருக்க வேண்டும் என்று கர்த்தரின் வசனம் சொல்கிறது. அதனை போல் இஸ்ரவேலரும் ஒரு ஜனத்தை விட்டு மறு ஜனத்தண்டைக்கும், ஒரு ராஜ்யத்தை விட்டு மறு தேசத்தாரண்டைக்கும் போனார்கள்.  அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடம்கொடாமல், அவர்கள் நிமித்தம் ராஜாக்களை கடிந்துக் கொண்டு, நான் அபிஷேகம் பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்கு தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார்.  

பிரியமானவர்களே, கர்த்தர் நமக்காக சொல்வது; இஸ்ரவேல் புத்திரர் மறு ஜனத்தாரண்டைக்கு போனதையும், தங்கள் ராஜ்யத்தை விட்டு மறு தேசத்தாரண்டைக்கும் போனதையும், கர்த்தரால் அபிஷேகிக்கப்பட்ட மேசேயையும், ஆரோனையும் கர்த்தர் எகிப்தியருக்கிடையில் அனுப்பினதையும், இஸ்ரவேலரை எகிப்தியர்கள் ஒடுக்கின ஒடுக்குதலை கண்டு, அவர்கள் நிமித்தம் கர்த்தர் அநேக அற்புதங்களை செய்து, அவர்களை எகிப்திலிருந்து விடுவித்து அவர்களை நடத்தி வந்த பாதைகளிலெல்லாம் எந்த ராஜாக்களும் அவர்களுக்கு தீங்கு செய்யாமலும், அவர்களை தொடாமலும், அவர்களை கடிந்துக்கொண்டு அவர்களுக்கு கட்டளையிட்டு சொந்த தேசத்திற்கு கொண்டு வந்து சேர்த்து நமக்கு திருஷ்டாந்தப்படுத்தி; நாம் கர்த்தரால் அபிஷேகம் பண்ணபட்டவர்களாக இருப்போமானால், நாம் இனி அந்நியர்களும், பரதேசிகளுமல்ல என்பதும், பரிசுத்தவான்களின் ஐக்கியதையில் ஒரே வீடாக இருக்கிறோம் என்பதால் சொந்த தேசமாகிய கிறிஸ்துவினிடத்தில் முழுமனதோடு வந்தால் ஒரு தீங்குக்கும் கர்த்தர் நம்மை ஒப்புக்கொடுக்கமாட்டார்.  என்னவென்றால் அபிஷேகிக்கப்பட்ட கிறிஸ்து நம்மில் இருந்து விசுவாச ஓட்டம் தொடங்கியிருக்கிறதால் அதன் முடிவு ஆசீர்வாதமாக்கும் வரையிலும், கிழ்ப்படிகிறவர்களுக்கு அவர் அமர்ந்திருக்கமாட்டார்.  அதனைக்குறித்து தான் 

யோவான் 17:14,15 

நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.

நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.

மேற்கூறிய வசனங்கள் பிரகாரம் நம்மில் இருக்கிற உலக சிநேகம் மாற்றப்படும் போது கிறிஸ்து நம்மை தீமையினின்று விடுவிக்கிறார். பின்பு நம் வாழ்வில் ஒரு பெரிய மாற்றங்கள் வரும் என்பதனைக் குறித்து 

1 நாளாகமம் 16:23 

பூமியின் சகல குடிகளே, கர்த்தரைப்பாடி, நாளுக்குநாள் அவருடைய ரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்.

இந்த வசனத்தின் விளக்கம் என்னவென்றால் கர்த்தர் நம்மை இரட்சித்து அபிஷேகித்தாரானால் அவருடைய ரட்சிப்பைக்குறித்து நாம் சுவிசேஷமாய் ஜனங்களுக்குள்ளே அறிவிக்க வேண்டும்.  

இதனை வாசிக்கிற கர்த்தருக்குள் பிரியமானவர்களே, கர்த்தரின் சுவிசேஷ வார்த்தைகளை ஜனங்களுக்கு அறிவிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.