தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 48:18-19
ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.
அப்பொழுது உன் சந்ததி மணலத்தனையாகவும், உன் கர்ப்பப்பிறப்பு அதின் அணுக்களத்தனையாகவும் இருக்கும்; அப்பொழுது அதின் பெயர் நம்மை விட்டு அற்றுப்போகாமலும் அழிக்கப்படாமலும் இருக்கும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.
அல்லேலூயா
கர்த்தர் வாக்குத்தத்தம் நிறைவேற்றுகிறவர்:- திருஷ்டாந்தம்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் இரட்சிப்பின் வஸ்திரம் காத்துகொள்ளவும்,மேலும் இரட்சிப்பை கர்த்தரிடத்தில் இருந்து பெற்றுக் கொள்ளும் படியாக சில வழிகளை நாம் தியானித்தோம். அதற்கு முன்னால் யோசேப்புக்கு இரண்டு குமாரர் மனாசே, எப்பிராயீம் என்பவர்கள் எகிப்தில் வைத்து பிறந்தார்கள் என்றும் பார்த்தோம். ஆனால் யாக்கோபாகிய யோசேப்பின் தகப்பனை, பஞ்சத்தால் கானான் தேசம் இருக்கும்போது யோசேப்பு தன் சகோதரர் மூலம் தகப்பனை எகிப்திற்கு கொண்டு வருகிறதை பார்க்க முடிகிறது.
இவையெல்லாம் நம் வாழ்க்கையில் எவ்வித கிரியைகள் எல்லாம் உண்டாயிருக்கும் என்றும், அவைகள் வாழ்க்கையில் வரும் போது எப்படி தப்பித்து கொள்ள வேண்டும் என்றும், கர்த்தர் தப்பித்துக் கொள்ளும் படியான போக்கை எப்படி நமக்கு வசனம் மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறார் என்பதை, வேத வசனத்தால் நம்மை நிதானித்து அறிந்து, எந்த சத்துருவின் கையிலும் விழுந்து விடாதபடி எச்சரிப்போடு கூட காணப்படவேண்டும்.
மேலும் யாக்கோபு, மரிப்பதற்கு முன்பாக தன்னை திடப் படுத்துகிறதை பார்க்கிறோம். இஸ்ரவேல் திடப்படுத்துகிறது என்றால் மீட்பை சுதந்தரிப்பதற்கு கர்த்தர் ஒரு யாக்கோபை நமக்கு முன்பாக எடுத்துக்காட்டி திருஷ்டாந்தப்படுத்துகிறார்.
பின்பு தேவன் யாக்கோபுக்குப் லூஸ் என்ற இடத்தில் தரிசனமாகி கூறிய வாக்குத்தத்தத்தை யோசேப்பினிடத்தில் சொல்லி விட்டு, நான் உன்னிடத்தில் எகிப்துக்கு வரும் முன்னே உனக்கு பிறந்த இரண்டு குமாரரும் என்னுடைய குமாரர்; ரூபன், சிமியோன் என்பவர்களை போல உன்னுடைய குமாரர் எப்பிராயீம், மனாசே என்னுடையவர்கள்.
இவர்களுக்கு பின் உனக்கு பிறந்தவர்கள் உன்னுடையவர்கள் அவர்கள் தங்கள் தங்கள் சகோதரருடைய பெயரால் அழைக்கப்பட்டு அவர்களுக்குரிய சுதந்தரத்தில் பங்கடைவார்கள்.
பின்பு யாக்கோபு தன் மனைவி ராகேல் வழியில் தன்னோடிருக்கையில் மரணமடைந்ததை யோசேப்புக்கு அறிவிக்கிறான்.
பின்பு இஸ்ரவேல், யோசேப்பின் குமாரரை பார்த்து இவர்கள் யார் என்று கேட்டான் அதற்கு யோசேப்பு இவர்கள் எனக்கு இவ்விடத்தில் பிறந்தவர்கள். அப்பொழுது யாக்கோபு அவர்களை என்னிடத்தில் கொண்டு வா நான் அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று சொல்லுகிறதை பார்க்க முடிகிறது.
ஆதியாகமம் 48:10
முதிர்வயதினால் இஸ்ரவேலின் கண்கள் மங்கலாயிருந்தபடியால், அவன் நன்றாய்ப் பார்க்கக் கூடாதிருந்தது. அவர்களை அவனண்டையிலே சேரப்பண்ணினான்; அப்பொழுது அவன் அவர்களை முத்தஞ்செய்து அணைத்துக்கொண்டான்.
பின்பு இஸ்ரவேல் யோசேப்பிடம் நான் உன் முகத்தை காண்பேன் என்று நினைக்கவில்லை ஆனால் தேவன் உன் பிள்ளையையும் காண எனக்கு அருள் செய்தார் என்றான்.
அப்பொழுது யோசேப்பு தன் பிள்ளைகளை பின்னாக விட்டு அவன் தன் தகப்பனை தரைமட்டும் குனிந்து வணங்குகிறான்.
பிரியமானவர்களே நாம் ஒன்று சிந்திக்க வேண்டும். என்னவென்றால் நம்முடைய மீட்பு நமக்கு தேவன் சுதந்தரமாக தந்திருக்கிறார். நம்மை தேவன் சில நேரங்களில் நம்முடைய தவறுதலின் நிமித்தம் உடைத்து உருவாக்குவார். உடைத்து உருவாக்கும் போது, நாம் சோர்ந்து போகாதபடி தேவன் நம்மை நன்மைகளால் நிறைக்கிறார் என்று நாம் தேவனில் களிகூர்ந்து தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, சந்தோஷமாக தேவனை மகிமைப்படுத்துகிறவர்களாக இருக்க வேண்டும்.
இவற்றை தான் ,தேவன் எரேமியா தீர்க்கதரிசியோடு சொல்கிறார்.
எரேமியா 18:2
நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப்போ; அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார்.
அவன் குயவன் வீட்டிற்கு போகும் போது குயவனுடைய கையில் மண்பாண்டம் கெட்டுப் போயிற்று, அப்பொழுது அதை திருத்தமாய் செய்யும்படிக்கு தன் பார்வைக்கும் சரியாய் கண்டபடி குயவன் அதை திரும்ப வேறே பாண்டமாக வனைந்தான்.
அப்பொழுது எரேமியாவுக்கு கர்த்தருடைய வசனம் அவனுக்கு உண்டாகி, இஸ்ரவேல் குடும்பத்தாரே, இந்தக் குயவன் செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக் கூடாதோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறது போல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்.
எரேமியா 18:7-9
பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு ஜாதிக்கு விரோதாகவும், ஒரு ராஜ்யத்துக்கு விரோதமாகவும் சொன்னமாத்திரத்தில்,
நான் விரோதமாய் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன்.
கட்டுவேன், நாட்டுவேன் என்றும், ஒரு ஜாதியையும் ஒரு ராஜ்யத்தையும் குறித்து நான் சொல்லுகிறதுமுண்டு.
இவ்விதமாக தேவன் ஒவ்வொருவரையும், தேசத்தையும் சரியாக ,தேவ சித்தம் செய்யும்படியாக உடைத்து உருவாக்குகிறார். உடைத்து உருவாக்கி நித்திய சுதந்திரத்தை அடையும்படி செய்கிறார்.
இதைத்தான் நம் முற்பிதாக்களாகிய ஆபிரகாம்,
ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களை வைத்து தேவன் திருஷ்டாந்தப்படுத்தி, நமக்கு விளக்கிக் காட்டுகிறார். இவ்வித நியாயத்தீர்ப்பு நம் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டு நம்மை சீர்படுத்துவோமானால் நமக்கு அது மிகவும் பிரயோஜனமாயிருக்கும்.
அதைத்தான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனாகிய கர்த்தர் என்று நமக்கு சொல்லப்படுகிறது. மேலும் இஸ்ரவேலை வழிநடத்தி வந்த தேவனாகையால், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என்று சொல்லபடுகிறது.
மேலும் அவர் நம்மளில் இந்த காரியங்களை செய்வதினால் அவர் நம் தேவன் என்று சொல்லப்படுகிறது.
என்னவெனில் தேவன் நம்மை சீர்படுத்தி, உருவாக்குவாரானால் இனி காணவோ, அனுபவிக்கவோ முடியாது என்று நாம் நினைவில் இருக்கிற காரியங்களை தேவன் உடைத்து விட்டு, காணவும் ,அதனால் பயனடைய செய்வார் என்பது நிச்சயம். நம்முடைய தேவன் சொன்னதை செய்கிறவர். சில நேரங்களில் நமக்கு அந்த காரியம் கிடைக்கவில்லையே என்று சிந்திப்போம். அவ்விதம் கிடைக்காமல், பயனடையாமல் இருப்போமானால் அது நம்முடைய குறைவு என்பதை நாம் தேவனிடத்தில் ஒப்புக் கொடுத்து நம் குறைகளை அறிக்கைப்பண்ணி, தேவன் நம்மளில் நினைக்கிற நோக்கத்தை, நாம் செய்வோமானால் நிச்சயமாக தேவன் யாக்கோபுக்கு செய்தது போல ,நமக்கும் செய்வார்.
என்னவெனில் இஸ்ரவேல் (யாக்கோபு ) யோசேப்பை நோக்கி: உன் முகத்தை காண்பேன் என்று நினைக்கவில்லை; ஆனாலும் இதோ உன் சந்ததியையும் காணும்படி தேவன் எனக்கு அருள்செய்தார் என்றான்.
இவ்விதமாக தேவன் நமக்கும் ஆத்மீக சந்ததிகளை நாம் நினைக்காத அளவு நமக்குத் தருகிற தேவன்.
வேத வசனம் எல்லாம் உலக கிரியைகளை குறித்ததல்ல, அநேகர் உலக காரியங்களுக்கு ஒப்பிடுவார்கள்.
அன்பானவர்களே நம் வாழ்க்கையில் இனி மேலாவது தவறு செய்யக்கூடாதபடி பாதுகாக்க வேண்டும். நம்முடைய தேவன் பரலோகத்திலுள்ளவர் பரலோகத்துக்குரியவைகளை மாத்திரமே பேசுவார்.
ஆதியாகமம் 48:13,14
பின்பு, யோசேப்பு அவ்விருவரையும் கொண்டுவந்து, எப்பிராயீமைத் தன் வலது கையினாலே இஸ்ரவேலின் இடது கைக்கு நேராகவும், மனாசேயைத் தன் இடதுகையினாலே இஸ்ரவேலின் வலதுகைக்கு நேராகவும் விட்டான்.
அப்பொழுது இஸ்ரவேல், மனமறிய, தன் வலதுகையை நீட்டி, இளையவனாகிய எப்பிராயீமுடைய தலையின்மேலும், மனாசே மூத்தவனாயிருந்தும், தன் இடதுகையை மனாசேயுடைய தலையின்மேலும் வைத்தான்.
பின்பு அவன் யோசேப்பை ஆசீர்வதித்து என் பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு என்பவர்கள் வணங்கிய தேவனும் நான் பிறந்ததிலிருந்து என்னை ஆதரித்து வந்த தேவனும்
எல்லாத் தீமைக்கும் நீங்கலாக்கி என்னை மீட்ட தூதனுமானவர் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக, என்பேரும் என் பிதாக்களாகிய ஆபிரகாம் ஈசாக்கு என்பவர்களின் பேரும் இவர்களுக்கு இடப்படக்கடவது; பூமியில் இவர்கள் மிகுதியாய்ப் பெருகக்கடவர்கள் என்றான்.
இவ்விதமாக தான் தேவன் நம்மை நியாயந்தீர்த்து அனுதினம் சீர்ப்படுத்தி, நம்மை செம்மைபடுத்தும் படியாக தேவனுடைய கருத்தை ஒப்புக் கொடுப்போமானால் நம்மை இவ்விதமாக(சபையாக)பெருக செய்கிறவராக இருப்பார்.
ஆனால் யோசேப்பு, தகப்பன் யாக்கோபு வலதுகையை இளைய மகனாகிய எப்பிராயீம் தலையின் மேல் வைத்ததையும் இடது கையை மனாசேயின் தலைமேல் வைத்ததும்; யோசேப்புக்கு பிரியமில்லாத படியால் தன் தகப்பனை பார்த்து
ஆதியாகமம் 48:18,19
என் தகப்பனே, அப்படியல்ல, இவன் மூத்தவன், இவனுடைய தலையின்மேல் உம்முடைய வலதுகையை வைக்கவேண்டும் என்றான்.
அவன் தகப்பனோ தடுத்து: அது எனக்குத் தெரியும், என் மகனே, எனக்குத் தெரியும்; இவனும் ஒரு ஜனக்கூட்டமாவான், இவனும் பெருகுவான்; இவனுடைய தம்பியோ இவனிலும் அதிகமாய்ப் பெருகுவான்; அவனுடைய சந்ததியார் திரளான ஜனங்களாவார்கள் என்றான்.
இதனை நாம் தியானிக்கும் போது நம்முடைய தேவன் ஆத்மீக சந்ததியை பெருகப் பண்ணுகிறவராக காணப்படுகிறார். மேலும் தேவன் யாரை பெருக சித்தம் வைத்திருக்கிறாரோ, அவர்களை பெருக பண்ணுவார் ,நம் நினைவுகளை செய்கிற தேவன் அல்ல.
இவ்வித ஆசீர்வாதங்களை நாம் சுதந்தரிக்க வேண்டுமானால் நம்முடைய இருதயம் தரைமட்டும் தாழ்த்தி நாம் ஒப்புக் கொடுக்க வேண்டும். அப்போது அவர் எப்படி நம்மை ஆசீர்வதிக்க சித்தமுள்ளவராயிருக்கிறாரோ அவ்விதம் நம்மை பெருகபண்ணி ஆசீர்வதிப்பார்.
சங்கீதம் 108:6
உமது பிரியர் விடுவிக்கப்படும் பொருட்டு, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எங்கள் ஜெபத்தைக்கேட்டருளும்.
தேவன் அவரது வலது கரத்தினால் நம்மை இரட்சிக்கிறவர்.
நீதிமொழிகள் 3:16
அதின் வலது கையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது.
பின்பு யாக்கோபு, யோசேப்பிடம் நான் மரணமடைய போகிறேன்; தேவன் உங்களோடே இருப்பார் அவர் உங்கள் பிதாக்களின் தேசத்துக்கு உங்களை திரும்பவும் போக பண்ணுவார் என்றும்,
உன் சகோதரருக்குக் கொடுத்ததை பார்க்கிலும், நான் என் பட்டயத்தாலும், என் வில்லினாலும் எமோரியர் கையிலிருந்து சம்பாதித்த ஒரு நிலத்தை உனக்கு அதிகமான பங்காக கொடுத்தேன் என்றான்.
இவ்விதமாக தேவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்போமானால், நம்முடைய வழிகளை சீர்ப்படுத்தி செம்மைப்படுத்துவோமானால், தேவன் நமக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தை காணும் படி கிருபை செய்கிறார். ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.