தேவனுக்கே மகிமையுண்டாவதாக
வெளிப்படுத்துதல் 21:4
அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.
அல்லேலூயா.
கர்த்தர் சீயோனை கட்டுதல்:-
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேத பகுதியில் தேவன் தந்த வாக்குத்தத்தம் சுதந்தரித்து கொள்வதை குறித்து பார்த்தோம். வாக்குத்தத்தம் தந்த தேவன் வாக்கு மாறாதவர். ஆனால் வாக்குத்தத்தம் நாம் தேவனிடத்தில் இருந்து பெற்றுக் கொண்டு நித்திய சுதந்திரத்தை அடைய வேண்டுமானால் பொறுமையோடு, காத்திருந்து அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் நாம் தேவ கற்பனைகளை விட்டுவிடாமல் நம் வாழ்க்கையை கற்பனைகளினால் சீர்திருத்தி கொள்ள வேண்டும். நாம் சீர்திருத்தா விட்டால் தேவன் நம்மை உடைத்து, உருவாக்கும் போது நாம் பொறுமையோடு சோர்ந்து போகாமல் நம்மை ஒப்புக் கொடுப்போமானால் தேவன் நம்மிடத்தில் சொன்ன காரியங்களை செய்து நிறைவேற்றுகிற தேவனாக விளங்குகிறார்.
மேலும் கழிந்த நாட்களில் யாக்கோபு (இஸ்ரவேல் சபை) தேவன் எவ்விதம் சீர்ப்படுத்தி சந்ததியை பெருக பண்ணுகிறார் என்பதை குறித்து தியானித்தோம். நாம் நம்முடைய தனிப்பட்ட வாழ்விலும் தேவன் அதைத்தான் செய்கிறார் என்பதை தியானித்துக் கொண்டு இருக்கிறோம்.
எரேமியா தீர்க்கதரிசி புஸ்தகத்தில் ஒரு ஜாதியையும், ஒரு ராஜ்யத்தையும் குறித்து சொல்வதுண்டு என்று எழுதப்பட்டிருக்கிறதை நாம் தியானித்தோம்.
அன்பானவர்களே இந்த நாளில் நாம் தியானிக்க போகிற காரியம் என்னவென்றால் யாக்கோபு, தான் தன்னுடைய பன்னிரண்டு குமாரரையும் கூடி வரும்படி செய்து (குறிப்பாக சபையை) கடைசி நாட்களில் உங்களுக்கு நேரிடும் காரியங்களை அறிவிக்கிறேன். என்று சொல்லி சில காரியங்களை அறிவிக்கிறான். கடைசி நாட்கள் என்று சொல்லும் போது குமாரனுடைய நாட்கள் என்பது நமக்குத் தெரிய வருகிறது. மேலும் இஸ்ரவேல் சபையில் பன்னிரண்டு விதமான கற்கள் இருக்கிறது என்பதும் தெரிகிறது. நகரத்தின் மதிலுக்கு பன்னிரண்டு அஸ்திபார கற்களிருந்தன. அவைகளின் மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன. நாம் ஒவ்வொருவரும் கற்களாக தேவன் சொல்லுகிறார். இந்த கற்களுக்கு மூலைக் கல் கிறிஸ்து அவர்தான் சீயோனின் மூலைக் கல் மேலும் பன்னிரண்டு விதமான கற்களால் தேவன் சீயோனில் சேர்த்து கட்டுகிறார். அவ்விதம் தான் சீயோனுக்கு அஸ்திபாரம் போடுகிறார்.
இதிலிருந்து நமக்கு தெரியவருவது இந்த கற்கள் எல்லாம் பிரகாசமான கற்கள் இவ்விதமான கற்களாக நாம் காணப்பட வேண்டுமானால் மிகவும் தூய்மையும், கற்பனை கைக்கொள்கிறவர்களும், கீழ்ப்படிகிறவர்களும்,
அன்புள்ளவர்களும் கற்புள்ளவர்களும், சகலத்தையும் தேவனுக்கென்று அர்ப்பணித்தவர்கள் மாத்திரமே இவ்வித ஆசீர்வாதமாக இருக்க முடியும் இது என்னவென்றால் நம் உள்ளத்தில் எழும்புகிற தேவனுடைய ராஜ்யம்.
மேலும் இவ்விதம் தங்கள் வாழ்க்கையை மாற்றுகிறவர்கள் பரிசுத்த ஆலயமாக விளங்குவார்கள்.
யாக்கோபு தன்னுடைய பன்னிரண்டு கோத்திரங்களையும் அவர்களுடைய நாளையும் குறித்து தேவ வார்த்தை,
ரூபனே, நீ சேஷ்டபுத்திரன், தண்ணீரை போல் தளம்பினவனே, நீ மேன்மையடைய மாட்டாய், நீ தகப்பனுடைய மஞ்சத்தின் மேல் ஏறினாய்; நீ அதை தீட்டுபடுத்தினாய்.
சிமியோனும், லேவியும் ஏக சகோதரர்கள் அவர்கள் பட்டயங்கள் கொடுமையின் கருவிகள். அவர்கள் தங்கள் கோபத்திலே ஒரு புருஷனை கொன்று தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை நிர்மூலமாக்கினார்களே உக்கிரமான அவர்கள் கோபமும் கொடுமையான அவர்கள் மூர்க்கமும் சபிக்கக்கடவது. யாக்கோபிலே அவர்களை பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களை சிதறவும் பண்ணுவேன்.
யூதாவே நீ சகோதரர்களால் புகழப்படுவாய் உன் கரம் சத்துருக்களின் பிடரியின் மேல் இருக்கும். உன் தகப்பன் புத்திரர் உன் முன் பணிவார்கள்.
யூதாவே பாலசிங்கம். நீ இரை கவர்ந்து கொண்டு ஏறிப் போனாய். என் மகனே சிங்கம் போலும், கிழச் சிங்கம் போலும் மடங்கி படுத்தான். அவனை எழுப்புகிறவன் யார்?
சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவை விட்டு நீங்குவதில்லை. நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேர்வார்கள்.
அவன் தன் கழுதை குட்டியைத் திராட்சச் செடியிலும் தன் கோளிகைக் கழுதை குட்டியைத் நற்குல திராட்சை செடியிலும் கட்டுவான். திராட்ச ரசத்திலே தன் வஸ்திரத்தையும் திராட்சைப் பழங்களின் இரத்தத்திலே தன் அங்கியையும் தோய்ப்பான்.
அவன் கண்கள் திராட்சரசத்தினால் சிவப்பாயும், அவன் பற்கள் பாலினால் வெண்மையாயும் இருக்கும்.
இதனை வாசிக்கிற அன்பானவர்களே, யூதா கோத்திரத்தில் இயேசு கிறிஸ்து பிறக்கிறார் என்றும் எல்லா ஜனங்களும் அவரிடத்தில் சேர்வார்கள் என்றும் அவர் தான் திராட்ச செடி. கர்த்தர் அவருடைய கழுதை குட்டியாகிய நம்மை திராட்ச செடியாகிய கிறிஸ்துவிலும் நற்குல திராட்ச செடியில் தன் கோளிகை கழுதை குட்டியிலும் யூதா கோத்திரம் கட்டும் என்றும், அவருடைய வஸ்திரத்தை திராட்சரசத்திலேயும், தன் அங்கியை திராட்சப் பழங்களின் இரத்தத்திலேயும் தோய்ப்பான்.
இது என்னவெனில் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வஸ்திரம் மகிமையால் நிறையும் என்றும், அவர் அங்கியை நம்முடைய பாவங்களுக்காக அவர் பாடு படும் போது, நம் பாவத்தின் கறைகளாலும், நாம் நற்குல திராட்ச பழங்களாக இல்லாவிட்டால் நம் பாவகறைகளாகிய இரத்தத்தால் அவர் அங்கி இரத்தக்கறைகளாகிறது. அதை தான் தன் அங்கியை திராட்ச பழத்தின் இரத்தத்திலே தோய்ப்பான் என்று எழுதப்பட்டிருக்கிறது. அதைத்தான்,
வெளிப்படுத்துதல் 19:13
இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.
செபுலோன் அவன் கடலின்துறை அருகே கப்பற் துறைமுகமாக இருப்பான், (எல்லா உலக விதமான வழியிலும் நடப்பான்).
இசக்கார் இரண்டு பொதியின் நடுவே படுத்திருக்கிற பலத்த கழுதை, நாடு வசதியானது என்றுக் கண்டு சுமக்கிறதற்கு தன் தோளை சாய்த்து பகுதி கட்டுகிறவனான், (முழுமையும் இரட்சிப்பு அடைய மாட்டான்).
தாண் இஸ்ரவேல் கோத்திரத்தில் ஒரு கோத்திரமாகி தன் ஜனத்தை நியாயம் விசாரிப்பான்.
தாண் குதிரையின் மேல் இருக்கிறவன் மல்லார்ந்து விழும்படியாய் அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற சர்ப்பத்தை போலவும், பாதையில் இருக்கிற விரியனை போலவும் இருப்பான்.
தாண் எப்போது குதிரையின் மேல் இருக்கிறவன் விழுவான் என்று எதிர்பார்க்கிறவனாக இருப்பான், (கிருபையோடு ஜனங்களை வளர விட மாட்டான்).
ஆனால் அந்த சபையின் ஆத்துமாக்கள் எப்போதும் இரட்சிப்புக்கு காத்திருந்து தான் பெற்றுக்கொள்ள முடியும். கீழே தள்ளிப் போடுகிற அனுபவம் தான் அவனிடத்தில் உண்டு.
காத் என்பவன் மேல் ராணுவ கூட்டம் பாய்ந்து விழும். அவனோ முடிவிலே பாய்ந்து விழுவான், (அங்கு சமாதானம் இராது எப்போதும் இருதயம் யுத்தத்தில் முழ்கி இருக்கும்).
ஆசேருடைய: ஆகாரம் கொழுமையாயிருக்கும். ராஜாக்களுக்கு வேண்டிய ருசி வர்க்கங்களை அவன் தருவான்.
இது என்னவெனில் ஆகாரம் (வேதவசனம்) நம் ஆத்மாவிற்கு கொழுமையாயிருக்கும். புசிப்பதற்கு ருசியாயிருக்கும்.
ஆனால் ஆத்துமா இரட்சிப்புக்கு காத்திருக்க வேண்டும்.
நப்தலி: விடுதலை பெற்ற பெண்மான்; இன்பமான வசனங்களை வசனிப்பான்.
இந்த சபை மக்களுக்கு இன்பமான வார்த்தைகளை கொடுப்பான், (ஆத்துமா காத்திருந்து இரட்சிப்பு பெற்றுக்கொள்ள வேண்டும்).
யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீர் ஊற்றுண்டையிலுள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின் மேல் படரும்.
சபை அதிகமான ஜனங்களால் நிறையும் கனியும் கொடுப்பான் அந்த சபையை அநேகர் பகைப்பார்கள். அவன் ஜனங்களை நடத்தி செல்கிற சபையாக இருக்கும். சபையில் வசனம் பொழியும்; பூமிக்குரிய ஆசீர்வாதங்கள் உண்டாகும்; கர்ப்ப கனிகளினால் சபை ஆசீர்வாதமாகும் எப்படியெனில் சபையில் மக்கள் பெருகுவார்கள்.
பென்யமீன்: பீறுகிற ஓநாய். காலையிலே இரையை பட்சிப்பான். மாலையிலே தான் கொள்ளையிட்டதை பங்கிடுவான்.
இந்த சபை பீறுகிற ஓநாய், ஜனங்களை அவ்விதமாக நடத்தி வருவான். ஆனால் காலையில் இரையை பெற்றுக் கொள்வான். மாலை நேரத்தில் இரையை பங்கிட்டுக் கொடுப்பான், (பன்னிரண்டு வாசல்கள் பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்கள்).
இவ்விதமாக இஸ்ரவேல் கோத்திரத்தில் பன்னிரண்டு விதமான கிரியைகளோடு சபைகளாக நடத்துகிற அனுபவம். ஆனால் யூதா கோத்திரத்தில் தான் சமாதான கர்த்தர் வருகிறார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இந்த பன்னிரண்டு கோத்திரத்தையும் ஒன்றோடோன்று இணைத்து சீயோனாக அவர் மூலை கல்லாகவும், அந்த கல்லிலிருந்து பிரகாசிக்கிற வெளிச்சத்தினால் மற்ற கற்களை பிரகாசபடுத்தி, எல்லா ஜனத்தாருடைய பாரம்பரிய பொல்லாத துர் கிரியைகள், பழக்கவழக்கங்கள், மாம்ச சிந்தை, உலக சிந்தை, மாம்ச இச்சை, உலக வழிபாடுகள் மேலும் தீயதான நோக்கங்கள் எல்லாவற்றையும் அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தால் சுத்தமாக்கி மகிமை படும்படியாக தேவன் ஒரே மகிமையுள்ள நகரமாக சீயோனாக கட்டி எழுப்பி, நம்மையும் அவரோடு கூட சேர்த்து கட்டி தம்முடைய மகிமையில் வெளிப்படுகிறார்.
பிரியமானவர்களே நாம் தேவனுக்கு பிரியமும், பரிசுத்த நடக்கைகளாக எப்போதும் தேவனுடைய கற்பனைகளுக்கு கீழ்ப்படிந்து நடப்போமானால் கர்த்தர் நம்மளில்,
சங்கீதம் 102: 15-16
கர்த்தர் சீயோனைக் கட்டி தமது மகிமையில் வெளிப்படுவார்.
திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்பண்ணாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார். ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பாராக.
-தொடர்ச்சி நாளை.