தேவனுக்கே மகிமையுண்டாவதாக

2 நாளாகமம் 15:2

அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மை விட்டு கர்த்தர் விலகவும் மாட்டார், கைவிடவும் மாட்டார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளம் தேவனுடைய ஆலயமாக விளங்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம் 28:19-21 

இந்த மாதிரியின்படி சகல வேலைகளும் எனக்குத் தெரியப்படுத்த, இவையெல்லாம் கர்த்தருடைய கரத்தினால் எனக்கு எழுதிக்கொடுக்கப்பட்டது என்றான்.

தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை நோக்கி: நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி; நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்; கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார்.

இதோ, தேவனுடைய ஆலயத்துவேலைக்கெல்லாம் ஆசாரியர் அவருடைய வகுப்புகள் இருக்கிறது; அந்த எல்லாக் கிரியைக்கும் சகலவித வேலையிலும் நிபுணரான மனப்பூர்வமுள்ள சகல மனுஷரும், உன் சொற்படியெல்லாம் கேட்கும் பிரபுக்களும், சகல ஜனங்களும் உன்னிடத்தில் இருக்கிறார்கள் என்றான்.

மேற்கூறிய வசனங்களில் ராஜாவாகிய தாவீது கர்த்தருடைய கரத்தினால் எழுதிக்கொடுத்து தெரியப்படுத்தின கர்த்தருடைய ஆலயத்தின் மாதிரியை எல்லாம் தன் குமாரனாகிய சாலொமோனுக்கு கொடுத்த பின்பு அவனிடம் தாவீது கூறிய வார்த்தையாவது; நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி; நீ பயப்படாமலும், கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்; கர்த்தருடைய ஆலயத்தை கட்டுகிறதற்கடுத்த  சகல கிரியைகளையும் நீ முடித்து தீருமட்டும், அவர் உன்னை விட்டு விலகவுமாட்டார், உன்னை கைவிடவுமாட்டார்.  இதோ தேவனுடைய ஆலயத்து வேலைக்கெல்லாம் ஆசாரியர் லேவியருடைய வகுப்புக்கள் இருக்கிறது; அந்த எல்லா கிரியைக்கும் சகலவித வேலையிலும் நிபுணரான மனிபூர்வமுள்ள சகல மனுஷரும், உன் சொற்படியெல்லாம் கேட்கும் பிரபுக்களும், சகல ஜனங்களும் உன்னிடத்தில் இருக்கிறார்கள் என்றான்.  

பிரியமானவர்களே,  மேற்கூறப்பட்ட கர்த்தருடைய வார்த்தைகளை நாம் கவனிக்கும் போது நம்மில் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நடக்க வேண்டும்; அப்போது தான் நாம் அவருடைய ஆலயமாகிறோம்.  இது அவரோடு நாம் எடுக்கிற அவருடைய இரத்தத்தால் ஆகிய புது உடன்படிக்கையின் போது நமக்குள் கிறிஸ்து வெளிப்படுகிறார். இவ்விதமான கிரியைகள் நடக்கும் போது நம்முடைய தேவன்  எப்போதும் நம்மோடுகூட இருப்பார்; அவர் ஒருபோதும் நம்மைவிட்டு விலகவுமாட்டார், நம்மை கைவிடவுமாட்டார் என்பதும்; அவரால் ஆசாரியராகவும் லேவியராகவும் மாற்றப்படுகிறவர்களும், மற்றும்  எல்லா மனபூர்வமான மனுஷர்களும், கர்த்தரின் சொற்படியெல்லாம் கேட்கும் அபிஷேகம் பண்ணபட்டவர்களும் எல்லாரும் கர்த்தரிடத்தில் இருக்கிறார்கள் என்பதனை விளக்குகிறார்.  ஆதலால் நாம் கர்த்தரிடத்தில் எப்போதும் இருப்போமானால் கர்த்தரும் நம்மிடத்தில் இருப்பார்.  இவ்விதமாக நாம் எப்போதும் கர்த்தரிடத்தில் இருக்கும்படியாக நம்மை முழுமையும் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.