தேவனுக்கே மகிமையுண்டாவதாக

கொலோசெயர் 1:16

ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் கரத்தால் பெற்றுக்கொண்டதை கர்த்தருக்கு கொடுத்து வளரவேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்மில் சதாகாலமும் ஸ்தோத்திரம் உண்டாக வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 நாளாகமம் 29:11-16 

கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்; கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது; தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர்.

ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்.

இப்போதும் எங்கள் தேவனே, நாங்கள் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, உமது மகிமையுள்ள நாமத்தைத் துதிக்கிறோம்.

இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்.

உமக்கு முன்பாக நாங்கள் எங்களுடைய பிதாக்கள் எல்லாரைப்போலும் அரதேசிகளும் பரதேசிகளுமாயிருக்கிறோம்; பூமியின்மேல் எங்கள் நாட்கள் ஒரு நிழலைப்போல இருக்கிறது; நிலைத்திருப்போம் என்னும் நம்பிக்கையில்லை.

எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய பரிசுத்த நாமத்திற்கென்று உமக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு, நாங்கள் சவதரித்திருக்கிற இந்தப் பொருள்கள் எல்லாம் உமது கரத்திலிருந்து வந்தது; எல்லாம் உம்முடையது.

மேற்கூறிய வசனங்களில் ராஜாவாகிய தாவீது சபையனைத்தின் கண்களுக்கு முன்பாக,அவர்கள் மனபூர்வமாக கர்த்தருக்கென்று காணிக்கை கொடுத்ததால் கர்த்தருக்கு சதாகாலமும் ஸ்தோத்திரம் உண்டாவதாக என்று கர்த்தரை மகிமைப்படுத்திக்கொண்டு, கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்; கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது; தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர்.  ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைபடுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்.  இப்படியாக தாவீது கர்த்தரை மகிமைப்படுத்தி; அவரை துதிக்கிறதைப் பார்க்கிறோம்.   இவ்விதமாக மனபூர்வமாக ஜனங்கள் காணிக்கைக் கொடுப்பதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? என்று கர்த்தரிடத்தில் எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம். மேலும் தாவீது சொன்னது நாங்கள் எங்கள் பிதாக்களைப்போல அரதேசிகளும், பரதேசிகளுமாயிருக்கிறோம்.  பூமியின் மேல் எங்கள் நாட்கள் ஒரு நிழலைப்போல் இருக்கிறது.  எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய ஆலயத்திற்கென்று நீர் சவதரித்திருக்கிற இந்த பொருட்கள் எல்லாம் உமது கரத்திலிருந்து வந்தது; எல்லாம் உம்முடையது. 

பிரியமானவர்களே,  மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது, நம்மில் கிறிஸ்து சபையாக எழும்புவதற்கான சகல காரியங்களும் தேவனிடத்தில் தான் இருக்கிறது.  அதனை நாம் பெற்றுக்கொள்ள நம் சுயநீதியை தேடாமல் தேவநீதியை தேடுகிறவர்களாகயிருப்போமானால் நம்மில் தேவமகிமை விளங்கும்.  அப்போது தேவனுடைய ஆலயமாக நம்மை கர்த்தர் விளங்கப்பண்ணுகிறார்.  இந்த மகத்துவம் உண்டாவதற்கு நாம் தகுதியில்லை; ஏனென்றால் நாம் எல்லாரும் அரதேசிகளும், பரதேசிகளுமாயிருந்தோம்.  ஆனால் தேவனுடைய கரத்தால் நமக்கு கிடைக்கிறது.  அதனை கர்த்தருக்கே  முழுமையாக நம்மை கொடுக்க வேண்டும்.  என்னவென்றால் கர்த்தருடைய கரத்தால் எதை வாங்குகிறோமோ; அதனை அவருக்கே நாம் திருப்பிக்கொடுக்கவேண்டும் என்று தேவ வசனம் சொல்கிறது.  ஏனென்றால் எல்லாம் அவரால் சிருஷ்டிக்கப்பட்டது, அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.  ஆதலால் நமக்குள்ள சகலமும் கர்த்தரின் கையில் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.