தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 45:6
தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் தேவனுடைய காரியங்களைக் குறித்து ஏக சிந்தையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் ஒவ்வொருவரும், தேவன் நம்மிடம் பேசுகிற சத்தம் கேட்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
2 நாளாகமம் 1: 7-12
அன்று ராத்திரியிலே தேவன் சாலொமோனுக்குத் தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்றார்.
சாலொமோன் தேவனை நோக்கி: தேவரீர் என் தகப்பனாகிய தாவீதுக்குப் பெரிய கிருபை செய்து, என்னை அவன் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீர்.
இப்போதும் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் தகப்பனாகிய தாவீதுக்கு அருளின உமது வாக்குத்தத்தம் உறுதிப்படுவதாக; தேவரீர் பூமியின் தூளத்தனை ஏராளமான ஜனத்தின்மேல் என்னை ராஜாவாக்கினீர்.
இப்போதும் நான் இந்த ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருக்கத்தக்க ஞானத்தையும் அறிவையும் எனக்குத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உம்முடைய ஜனத்தை நியாயம் விசாரிக்கத்தக்கவன் யார் என்றான்.
அப்பொழுது தேவன் சாலொமோனை நோக்கி: இந்த விருப்பம் உன் இருதயத்தில் இருந்தபடியாலும், நீ ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும், உன் பகைஞரின் பிராணனையும், நீடித்த ஆயுசையும் கேளாமல், நான் உன்னை அரசாளப்பண்ணின என் ஜனத்தை நியாயம் விசாரிக்கத்தக்க ஞானத்தையும் விவேகத்தையும் நீ கேட்டபடியினாலும்,
ஞானமும் விவேகமும் தந்திருக்கிறதுமல்லாமல், உனக்குமுன் இருந்த ராஜாக்களுக்காகிலும் உனக்குப்பின் இருக்கும் ராஜாக்களுக்காகிலும் இல்லாத ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும் உனக்குத் தருவேன் என்றார்.
மேற்கூறபட்ட வசனங்களில் சாலொமோன் கர்த்தருக்கு ஆயிரம்சர்வாங்க தகனபலிகளையிட்ட பின்பு, கர்த்தர் சாலொமோனிடத்திலே தரிசனமாகிறார். அந்த தரிசனத்தில் கர்த்தர் உன் விருப்பம் என்ன என்று கேட்டதற்கு; அவன் ஞானமும், அறிவும் கர்த்தரிடத்தில் கேட்டதற்கு: இந்த விருப்பம் உன் இருதயத்தில் இருந்தபடியாலும், நீ ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும், உன் பகைஞனின் பிராணனையும், நீடித்த ஆயுசையும் கேளாமல், நான் உன்னை அரசாளப்பண்ணின என் ஜனத்தை நியாயம் விசாரிக்கதக்க ஞானத்தையும் விவேகத்தையும் கேட்டபடியினாலும், ஞானமும் விவேகமும் தந்திருக்கிறதுமல்லால் உனக்கு முன் இருந்த ராஜாக்களுக்காகிலும், உனக்கு பின் இருக்கும் ராஜாக்களுக்காகிலும் இல்லாத ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும் உனக்கு தருவேன் என்றார். இப்படி சாலொமோன் கிபியோனிலிருக்கிற மேட்டுக்கு போய் , ஆசரிப்புக் கூடாரத்தின் சந்நிதியிலிருந்து எருசலேமுக்கு வந்து இஸ்ரவேலை அரசாண்டான்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்டவைகளின் கருத்து திருஷ்டாந்தத்திற்கு என்று எழுதப்பட்டிருக்கிறது. அதென்னவென்றால் நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவாகிய ஞானம் பெற்றுக்கொண்டு, அதனால் விவேகம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக கர்த்தர் சாலொமோனை வைத்து திருஷ்டாந்தப்படுத்துகிறார். ஆனால் சாலொமோன் கர்த்தருக்கு அவருடைய சந்நிதியில் பலியிட்ட பின்பு தான் கர்த்தர் தரிசிக்கிறான். அந்த தரிசனத்தில் கர்த்தர் சாலொமோனுடைய இருதயத்தை ஆராயும்படியாக நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்றார். ஆனால் சாலொமோனோ தனக்கு, தன் குடும்பத்திற்கு என்று எதையும் கேட்காமல் தேவனுடைய ஜனங்களை நடத்தும்படியாக ஞானத்தையும், அறிவையும் கேட்டபடியினால் கர்த்தர் அவன் கேட்ட பரலோகத்தின் ஆசீர்வாதங்களாகிய ஞானமும் விவேகத்தை மட்டுமல்லாமல் , பூமிக்குரிய ஆசீர்வாதமாகிய ஐசுவரியம், சம்பத்து கனத்தையும் தருவேன் என்றார். ஆனால் நம்மில் அநேகர் தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை தேடாமல், நம்முடைய சுயநலனுக்குரிய காரியங்களை கேட்கிறதினால், அநேக ஜனங்களுடைய ஆத்துமா மண்ணோடு மண் ஒட்டியிருக்கிறது. ஆனால் அவர்களோ தங்கள் ஆத்துமா அழிந்து போகிறதை உணராமல் பூமிக்குரிய ஆசீர்வாதங்கள் கிடைத்தவுடனே, கர்த்தர் நமக்கு நன்மை செயதார் என்று நினைத்துக்கொள்கிறதினால் ஒவ்வொரு காரியமாக நாம் விழுந்து விடுகிறோம். ஆனால் எங்கு விழுகிறோம் என்று தெரியாமல் கர்த்தர் நம்முடைய கண்களை கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து விடுகிறார். இந்த காரியம் நமக்கு எப்போது தெரியும் என்றால் நம்முடைய கடைசி நாளில் தான் தெரியும். இதனைக்குறித்து
நீதிமொழிகள் 5:12-14
ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம்பண்ணினதே!
என் போதகரின் சொல்லை நான் கேளாமலும், எனக்கு உபதேசம்பண்ணினவர்களுக்கு என் செவியைச் சாயாமலும் போனேனே!
சபைக்குள்ளும் சங்கத்துக்குள்ளும் கொஞ்சங்குறைய எல்லாத் தீமைக்குமுள்ளானேனே! என்று முறையிடுவாய்.
அதன் பின்பு நம்மை யாராலும் விடுவிக்க முடியாது. இதனைப்போல் சாலொமோனுடைய வாழ்வில் தேவன் அவன் கேட்காத ஐசுவரியத்தையும் சம்பத்தையும், கனத்தையும் கொடுத்து சோதிக்கிறார். அவ்விதம் சோதித்ததில் அவன் கர்த்தருடைய கற்பனைகளை விட்டு விலகிப்போகிறான். ஆதலால் கர்த்தர் அவனை சிங்காசனத்திலிருந்து மாற்றுகிறார். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தேவன் பிசாசினால் சோதிக்குபடி ஆவியானவராலே வனாந்தரத்திற்கு கொண்டுப்போகபடுகிறார். அப்படி அவர் மூன்று முறை சோதிக்கப்படுகிறார். இந்த மூன்று சோதனையும் தேவனுடைய சபையை(ஜனங்கள்) நடத்துகிற சோதனையாக இருந்தது. மூன்றாம் சோதனை தேவனுடைய ராஜ்யத்தை விட்டு உலக ராஜ்யத்தை காட்டி தன்னை பணிந்துக் கொள்ளும்படி பிசாசு சொல்லும்போது, இயேசு அப்பாலே போ சாத்தானே என்று சொல்லி அவனை துரத்துகிறார். பின்பு அவர் சொன்னது
மத்தேயு 4:10
அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
இந்த வார்த்தை சொன்னவுடனே பிசாசானவன் அவரை விட்டு விலகி போனான்; உடனே தேவதூதர்கள் வந்து அவருக்கு பணிவடை செய்கிறார்கள். ஆனால் சாலொமோனைபோல நாம் உலக ஐசுவரியம் வரும் போது தேவ கற்பனைகளை விட்டுவிடுகிறதால், கிறிஸ்து நமக்கு மாதிரி காட்டி, மேலும் நம்மில் வந்து வாழ்ந்து, நாம் சோதனையில் உலகத்தை ஜெயிக்கும்படி காண்பிக்கிறார். இதனைநாம் கருத்தில்க் கொண்டு ஒவ்வொரு நாளிலும் தேவனுடைய காரியங்களில் கருத்தாய் வாழ்வோமானால் கர்த்தர் நம்முடைய ஆத்துமாவில் கிறிஸ்துவின் ஜீவன் தந்து அவருடைய சிங்காசனத்தில் என்றென்றும் வாழும்படியான கிருபை தந்து நம்மை உயிரோடே பாதுகாப்பார். இவ்விதமாக என்றென்றும் கிறிஸ்துவினோடு வாழும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.