தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யோவான் 10:9

நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக. ஆமென்.

அல்லேலூயா.

 சீயோன் நகரம் நம்மிடத்தில் எவ்விதம் மகிமைப்படும்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் சீயோனை தேவன் நம்மளில் கட்டுகிற விதத்தை குறித்து சில காரியங்களை தியானித்தோம். இந்த நகரம் பன்னிரண்டு வாசல்கள், வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள். அந்த வாசல்களின் மேல் இஸ்ரவேல் சந்ததியாகிய பன்னிரண்டு நாமங்களும் எழுதப்பட்டிருந்தன. 

நகரத்தின் மதிலுக்கு பன்னிரண்டு அஸ்திபார கற்களிருந்தன. அவைகள் மேல்  ஆட்டுகுட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலருடைய பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன. கழிந்த நாளில் நகரத்தின் மதிலுக்கு பன்னிரண்டு அஸ்திபார கற்களும், சீயோனின் மூலைகல்லோடு எவ்விதத்தில் இணையும் என்பதை குறித்து தியானித்தோம். இந்த நாளில் அந்த நகரத்திற்கு பன்னிரண்டு வாசல்கள் காணப்படுகிறது. பன்னிரண்டு  தூதர்களிருந்தார்கள் என்பதை தியானிக்க போகிறோம்.

அந்த நகரம் கட்டும்படியாக தேவன் யாக்கோபை திருஷ்டாந்தப்படுத்துகிறார். என்னவெனில் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பதை நாம் கழிந்த நாட்களில் தியானித்தோம். ஆபிரகாமுக்கு முதலாக தேவன் கொடுத்த வாக்குத்தத்தம் ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அதே போல் ஈசாக்கின் மகனாகிய யாக்கோபை தேவன் வர்த்திக்க செய்கிறார். யாக்கோபிடத்தில் தேவன் எகிப்தில் உன்னை  பெரிய ஜாதியாக்குவேன் என்று சொல்லுகிறதை பார்க்கிறோம். அந்த பெரிய ஜாதியாக்கும் படியாக தேவன் யாக்கோபையும் அவன் குமாரர் பன்னிரண்டு பேரும் எகிப்தில் கோசேன் நாட்டில் வந்து சேர்ந்து அங்கே இஸ்ரவேல் ஜனங்கள் நிலங்களையும் வாங்கி, அங்கே பலுகி பெருகுகிறதை நாம் பார்க்க முடிகிறது. 

அந்த எகிப்தில் வைத்தே தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குதத்ததை நிறைவேற்றுகிறதை பார்க்கிறோம். ஆனால்,

எபிரெயர் 11:15-16 

தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்களானால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்குச் சமயங்கிடைத்திருக்குமே.

அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே.

அந்த நகரம் தான் சீயோன் நகரம். இந்த நகரம் யாக்கோபின் பன்னிரண்டு கோத்திர பிதாக்களில், யூதா கோத்திரத்தில் இருந்து இந்த நகரம் எழும்புகிறது. அதை கழிந்த நாளில் நாம் தியானித்துக் கொண்டோம்.

பன்னிரண்டு வாசல்கள் இந்த நகரத்திற்கு இருக்கிறது என்பது நமக்கு தேவ வசனம் சொல்லப்படுகிறது. தேவன் வாசம் பண்ணும் படியாக தாவீதின் குமாரனாகிய சாலோமோனை வைத்து தேவன் எருசலேம் தேவாலயம் கட்டப்படுகிறது. அந்த ஆலயம் மிகுந்த மகிமையால் நிறையப் படுகிறது. ஆனால் சாலோமோன் அந்த ஆலயத்தை அருவருப்பாக்கி, அந்நிய ஸ்திரீகளுக்காக  தேவனுடைய ஆலயத்தில் மோவாபியரின் அருவருப்பாகிய காமோசுக்கும், அம்மோன் புத்திரரின் அருவருப்பாகிய மோளோகுக்கும் மேடையைக் கட்டினான். மேலும் அந்த ஆலயத்தில் தேவன் விரும்பாத காரியங்கள் ஜனங்கள் செய்ததால் அந்த தேவாலயத்தை இடித்து போடுங்கள், நான் ஆலயத்தை மூன்று நாளைக்குள் கட்டுவேன்  என்று இயேசுகிறிஸ்து சொல்லுகிறதை பார்க்கிறோம். இந்த ஆலயம் தான் பரிசுத்த ஆவியானவர். புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரம்,

வெளிப்படுத்தல் 21:11-13

அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது.

அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன.

வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன.

இந்த பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்கள் எழுதும் படியாகவே தேவன் யாக்கோபை முன்குறித்திருக்கிறார் என்பது தெரியவருகிறது. பரிசுத்த நகரத்திற்கு பன்னிரண்டு வாசல். வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. இந்த பன்னிரண்டு தூதர்களும் பன்னிரண்டு விதமான கனிகளை தரும் ஜீவ விருட்சமாகிய, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.

நகரத்தின் வாசல்கள் மேல் இஸ்ரவேல் சந்ததியாருடைய நாமங்கள் எழுதப்பட்டிருக்கிறது என்றால்,

எசேக்கியல் 48:31-35

நகரத்தின் வாசல்கள், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய நாமங்களின்படியே பெயர் பெறக்கடவது; வடக்கே ரூபனுக்கு ஒரு வாசல், யூதாவுக்கு ஒரு வாசல், லேவிக்கு ஒருவாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.

கீழ்ப்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோல், அதில் யோசேப்புக்கு ஒருவாசல், பென்யமீனுக்கு ஒரு வாசல், தாணுக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.

தென்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோல், அதில் சிமியோனுக்கு ஒரு வாசல் இசக்காருக்கு ஒருவாசல், செபுலோனுக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.

மேற்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோல், அதில் காத்துக்கு ஒருவாசல், ஆசேருக்கு ஒரு வாசல், நப்தலிக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.

சுற்றிலும் அதின் அளவு பதினெண்ணாயிரங்கோலாகும்; அந்நாள்முதல் நகரம் யேகோவா ஷம்மா என்னும் பெயர்பெறும், (தேவன் நம் கூட உண்டு).

பிரியமானவர்களே, முதலில் நம் வாழ்க்கையில் யாக்கோபின் சந்ததிகளாக நாம் காணப்படுவோம். அவ்வித ஒரு எகிப்தின் அடிமையிலான பாராம்பரிய வாழ்க்கையாக தேவாலயத்தில் பிரவேசிக்கும் போது முதலில் ஆத்துமாவின் விடுதலை (இரட்சிப்பை) குறித்து அறிந்து கொள்ள முடியாது என்பதை தான் தேவன் யாக்கோபை நமக்கு திருஷ்டாந்தபடுத்துகிறார். முதலில் நாம் கிறிஸ்தவர்கள் என்று ஆகும் போது நம்மளில் காணப்படும் பன்னிரண்டு வாசல்களை தேவன் காட்டுகிறார். ஆனால் தேவன் நம் இருதயத்தில் வெளியில் தான் நிற்கிறார். அதுதான் வாசல்களின் அருகே தேவ தூதர்களிருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அந்த வாசல்களின் மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரங்களின் நாமங்கள் எழுதப்பட்டிருக்கிறது. இந்த பன்னிரண்டு நாமங்களின் கிரியைகளை நாம் கழிந்த நாளிலே தியானித்தோம். இவைகள்  நம்முடைய பாரம்பரிய கிரியைகள் ஆனால் அந்த நகரத்தின் மதிலுக்கு பன்னிரண்டு அஸ்திபார கற்களிருந்தன. அவைகள் மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன.

இதிலிருந்து இந்த நகரம் புதிய அனுபவத்தில், அப்போஸ்தலருடைய உபதேசங்கள், கிரியை செய்ய ஆரம்பிக்கும். அப்போது பழையவைகள், எல்லாம் ஒழிந்து போகும் புதியவைகள் உண்டாகும்.

அதைத்தான் இயேசு சொல்கிறார் இந்த ஆலயத்தை இடித்து போடுங்கள் என்று பழைய அனுபவத்தை மாற்றி, பதிய கிருபையினால் நம்மை நிறைப்பதற்காக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அன்று அப்போஸ்தலர்களிடம் சொன்ன தேவன், இன்று நம்மோடு பேசுகிறார். அதைத்தான்,

II கொரிந்தியர்: 5:17

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.

நாம் இவ்விதம் கிறிஸ்துவின்  சத்திய சுவிசேஷத்திற்கு நாம் கீழ்ப்படிந்து, நம் பழைய பாரம்பரிய செயல்கள், கழிந்த நாளில் கூறப்பட்ட நம்முடைய கோத்திர பிதாக்களுடைய பாரம்பரிய செயல்களை எல்லாம் விட்டு கிறிஸ்துவோடு ஒப்புரவாகுவோமானால்,

II கொரிந்தியர்: 5:21

நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.

இவ்விதம் ஒப்புக்கொடுப்போமானால் நம் பாவத்துக்காக அவர் பாவமாக்கி, பரிசுத்தமாக நாம் நடப்பதற்கு அவர் பரிசுத்த இரத்தம் நமக்காக தருகிறார். இவ்விதமாக நம் எல்லோரும் தேவனிடத்தில் ஒப்புரவாகும் படியாக ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை தந்திருக்கிறார். 

இவ்விதமாக தேவ சித்தத்திற்கு ஒப்புக் கொடுப்போமானால், வாசலின் வெளியே நின்ற கிறிஸ்து நம் இதயமாகிய வாசலுக்குள் பிரவேசிக்கிறார். மேலும், 

எபேசியர் 2:21-22

அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது;

அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டு வருகிறீர்கள்.

பிரியமானவர்களே இவ்விதம் தேவனிடத்தில் ஒப்புக்கொடுப்போமானால் நம் பற்பல கிரியைகள் செய்யாமற் ஒரே ஆவியானவர் கிறிஸ்துவின் ஆலயமாக நாம் விளங்குவோம்.

இப்படி கிறிஸ்துவின் மகிமையால் நிறையும் போது, இந்த பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துகளாயின. ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்கு போல சுத்த பொன்னாயிருந்தது. 

வெளிப்படுத்தல் 21:22

அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்.

நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.

இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள்; பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.

இவ்விதமான ஆசீர்வாதத்தை இந்த நாட்களில் நாம் பெற்றுக்கொள்ள யாவரும் ஜெபிப்போம். கர்த்தர் யாரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பாராக. 

-தொடர்ச்சி நாளை.