தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 51:11 

அப்படியே கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தக்களிப்புடன் பாடி சீயோனுக்குத் திரும்பிவருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய வாழ்வு எப்போதும் சந்தோஷமும், மனமகிழ்ச்சியுமாயிருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்காய் நம்மை பிரதீஷ்டிக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்

11நாளாகமம் 7:4-11

அப்பொழுது ராஜாவும் சகல ஜனங்களும் கர்த்தருடைய சந்நிதியில் பலிகளைச் செலுத்தினார்கள்.

ராஜாவாகிய சாலொமோன் இருபத்தீராயிரம் மாடுகளையும், லட்சத்திருபதினாயிரம் ஆடுகளையும் பலியிட்டான்; இவ்விதமாய் ராஜாவும் சகல ஜனங்களும் தேவனுடைய ஆலயத்தைப் பிரதிஷ்டைபண்ணினார்கள்.

ஆசாரியர்கள் தங்கள் பணிவிடைகளைச் செய்து நின்றார்கள்; தாவீதுராஜா லேவியரைக்கொண்டு, கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதித்துப்பாடும்படியாக செய்வித்த கர்த்தரின் கீதவாத்தியங்களை அவர்களும் வாசித்து சேவித்து நின்றார்கள்; ஆசாரியர்கள் அவர்களுக்கு எதிராக நின்று பூரிகைகளை ஊதினார்கள்; இஸ்ரவேலர் எல்லாரும் நின்றுகொண்டிருந்தார்கள்.

சாலொமோன் உண்டாக்கின வெண்கலப்பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும் போஜன பலிகளையும் நிணத்தையும் கொள்ளமாட்டாதிருந்தபடியினால், கர்த்தருடைய ஆலயத்துக்கு முன்னிருக்கிற பிராகாரத்தின் நடுமையத்தைச் சாலொமோன் பரிசுத்தப்படுத்தி, அங்கே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளின் நிணத்தையும் செலுத்தினான்.

அக்காலத்தில்தானே சாலொமோனும், ஆமாத்தின் எல்லையிலிருந்து எகிப்தின் நதிமட்டும் வந்து, அவனோடேகூட இருந்த மகா பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் அனைத்தும் ஏழுநாளளவும் பண்டிகையை ஆசரித்து,

எட்டாம்நாளை விசேஷித்த ஆசரிப்புநாளாய்க் கொண்டாடினார்கள்; ஏழுநாள் பலிபீடத்துப் பிரதிஷ்டையையும், ஏழுநாள் பண்டிகையையும் ஆசரித்தார்கள்.

ஏழாம் மாதத்தின் இருபத்துமூன்றாம் தேதியிலே தங்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போக ஜனங்களுக்கு விடைகொடுத்தான்; கர்த்தர் தாவீதுக்கும், சாலொமோனுக்கும், தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த நன்மைக்காகச் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுமாய்ப் போனார்கள்.

இவ்விதமாய் சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜ அரமனையையும் கட்டித் தீர்த்தான்; கர்த்தருடைய ஆலயத்திலும் தன் அரமனையிலும் சாலொமோன் செய்ய மனதாயிருந்ததெல்லாம் அநுகூலமாயிற்று.

 மேற்கூறிய வசனங்களில் கர்த்தருடைய ஆலயமானது, ராஜாவாகிய சாலொமோனால் பிரதீஷ்டை பண்ணின பின்பு, கர்த்தருடைய மகிமை தேவாலயத்தை நிரப்பினது; அப்போது ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கக்கூடாமற் போனது, நாம் கிறிஸ்துவினால் ஆலயமாகிறபோது, அவர் ஒருவர் மட்டும் தான் நமக்கு ஆசாரியராகயிருக்க முடியும்.  அதனை கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப்படுத்திக் காட்டுகிறார்.  மேலும் பிரதீஷ்டைப் பண்ணின பின்பு ஆசாரியர்கள் தங்கள் பணிவிடைகளை செய்து நின்றார்கள்.  தாவீது ராஜா லேவியரைக் கொண்டு, கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரை துதித்துப்பாடும்படியாக செய்வித்த கர்த்தரின் கீத வாத்தியங்களை அவர்களும் வாசித்து சேவித்து நின்றார்கள்.; ஆசாரியர்கள் அவர்களுக்கு எதிராக நின்று பூரிகைகளை ஊதினார்கள்; இஸ்ரவேலர் எல்லாரும் நின்று கொண்டிருந்தார்கள்.  அல்லாமலும் சாலொமோன் உண்டாக்கின வென்கல பலிபீடம சர்வாங்க தகனபலிகளையும் போஜன பலிகளையும் நிணத்தையும்கொள்ளமாட்டதிருந்தபடியினால்,கர்த்தருடைய ஆலயத்திற்கு முன்னிருந்த பிரகாரத்தின் நடுமையத்தை சாலொமோன் பரிசுத்தப்படுத்தி,அங்கே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினான்.  அல்லாமலும் அவன் ஆமாத்தின் எல்லையிலிருந்து எகிப்தின் நதிமட்டும் வந்து அவனோடிருந்த மகா பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் அனைத்தும் ஏழு நாளளவும் பண்டிகையை ஆசரித்து, எட்டாம் நாளை விசேஷித்த ஆசரிப்பு நாளாய் கொண்டாடினார்கள்.  ஏழு நாள் பலிபீடத்தை பிரதீஷ்டையையும், ஏழு நாள் பண்டிகையையும் ஆசரித்தார்கள்.  பின்பு ஏழாம் மாதத்தின் இருபத்து மூன்றாம்தேதியிலே தங்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போக ஜனங்களுக்கு விடைக்கொடுத்தான்; கர்த்தர் தாவீதுக்கும், சாலொமோனுக்கும், இஸ்ரவேலுக்கும் செய்த நன்மைக்காக சந்தோஷமும் மனமகிழ்ச்சியுமாய் போனார்கள்.  இவ்விதம் கர்த்தருக்காய் சாலொமோன் ஆலயத்தையும் ராஜஅரமனையையும் கட்டி தீர்த்தான்; கர்த்தருடைய ஆலயத்திலும் தன் அரமனையிலும் சாலொமோன் செய்ய மனதாயிருந்ததெல்லாம் அநுகூலமாயிற்று. 

பிரியமானவர்களே மேற்கூறிய பகுதிகளை நாம் தியானிக்கும்போது, சில நாட்களுக்கு முன்பு நாம் கர்த்தரின் சந்நதியில் தியானித்த வேத வசனம் தான் மீண்டும் கர்த்தர் நம்மை புதுபித்துக் கொள்ளும்படியாக கூறுகிறார்.  நம்மை கர்த்தருக்காய் பிரதீஷ்டை பண்ணி விட்டால் நம்முடய உள்ளத்தை பரிசுத்தப்படுத்தும் போது துதியும் ஸ்தோத்திரத்தின் சத்தமும் நிறைந்ததாகவும், தேவ வசனம் கேட்கவும், பேசவும் தக்கதாக இருக்க வேண்டும். நாம் கர்த்தருக்காய் அனுதினமும் பிரதீஷ்டையோடு கர்த்தருக்கு ஆராதனை செய்கிறவர்களாக இருக்க வேண்டும். அப்போது நம் உள்ளம் கிறிஸ்துவுக்குள் மிகவும் சந்தோஷமும், மனமகிழ்ச்சியுமாயிருக்கும்.  இப்படியாக கர்த்தரின் ஆலயமும், ராஜாவாகிய கிறிஸ்துவின் அரமனையும் நம்மில் செயல்படும்போது , நாம் செய்கிற சகல காரியமும் நமக்கு அனுகூலமாயிருக்கும்.  இப்படியாக நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.