தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 27:21

வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தர் நமக்கு தந்த கிருபையாகிய நித்திய ஜீவனை இழந்துவிடக்கூடாது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,மணவாட்டி சபையாகிய நாம் அந்நிய உபதேசங்களில் பங்குபெறக்கூடாது என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்

 11நாளாகமம் 9:1-2 

சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனின் கீர்த்தியைக் கேள்விப்பட்டபோது, விடுகதைகளினாலே சாலொமோனைச் சோதிக்கிறதற்காக, மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும் எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடத்தில் வந்தபோது, தன் மனதிலிருந்த எல்லாவற்றையும் குறித்து அவனிடத்தில் சம்பாஷித்தாள்.

அப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவைகளையெல்லாம் விடுவித்தான்; அவளுக்கு விடுவிக்காதபடிக்கு ஒன்றாகிலும் சாலொமோனுக்கு மறைபொருளாயிருக்கவில்லை.

மேற்கூறிய வசனங்களில் சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனின் கீர்த்தியைக் கேள்விப்பட்டு, அவனை சோதிக்கிறதற்க்காக மிகுந்த பரிவாரத்தோடு கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும் எருசலேமுக்குள் வந்தாள்; அவள் சாலொமோனிடத்தில் வந்து தன் மனதில் இருந்த எல்லாற்றையும் சம்பாஷித்தாள்.  அவள் கேட்ட எல்லாவற்றிற்கும் பதில் விடுத்தான்; விடுவிக்காமல் ஒன்றாகிலும் சாலொமோனுக்கு மறைப்பொருளாயிருக்கவில்லை.  சேபாவின் ராஜஸ்திரி

 11நாளாகமம் 9:3-7  

சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுடைய ஞானத்தையும், அவர் அரமனையையும்,

அவன் பந்தியின் போஜனபதார்த்தங்களையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், அவன் உத்தியோகஸ்தரின் வரிசையையும், அவர்கள் வஸ்திரங்களையும், அவனுடைய பானபாத்திரக்காரரையும், அவர்கள் வஸ்திரங்களையும், கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமைகொண்டு,

ராஜாவை நோக்கி: உம்முடைய வர்த்தமானங்களையும் உம்முடைய ஞானத்தையும் குறித்து, நான் என் தேசத்திலே கேட்ட செய்தி மெய்யாயிற்று.

நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அவர்கள் வார்த்தைகளை நம்பவில்லை; உம்முடைய பெரிய ஞானத்தில் பாதியாகிலும் அவர்கள் எனக்கு அறிவிக்கவில்லை; நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் அதிகம் உண்டாயிருக்கிறது.

உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள்.

மேலே உள்ள எல்லாவற்றையும் அவள் கண்ட போது அவள் ஆச்சரியத்தால் பிரமைக்கொண்டு, ராஜாவிடம் சொன்னது உம்முடைய ஞானத்தை குறித்து கேள்விபட்ட எல்லாம் மெய்யாயிற்று.  நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அவர்கள் வார்த்தைகளை நம்பவில்லை.  உம்முடைய பெரிய ஞானத்தில் பாதியாகிலும் அவர்கள் எனக்கு அறிவிக்கவில்லை; நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் அதிகம் உண்டாயிருக்கிறது.  மேலும் அவள் சொன்னது உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள்; உமக்கு முன்பாக நின்று உம்முடைய ஞானத்தைக்கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள். மற்றும் 

11நாளாகமம் 9:8 

உம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீர் ராஜாவாயிருக்கும்படிக்கு, உம்மைத் தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கப்பண்ண, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; உம்முடைய தேவன் இஸ்ரவேலை என்றென்றைக்கும் நிலைநிறுத்தும்படிக்குச் சிநேகிக்கிறதினாலே, அவர் நியாயமும் நீதியும் செய்கிறதற்கு உம்மை அவர்கள்மேல் ராஜாவாக வைத்தார் என்றாள்.

இந்த வார்த்தைகளை  சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவாகிய சாலொமோனிடம் சொல்லிய பின்பு, ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும், மிகுதியான கந்தவர்க்கங்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்.  அப்படிபட்ட கந்தவர்க்கங்களை போல ஒருக்காலும் வரவில்லை.  அல்லாமலும் ஒப்பீரிலிருந்து பொன்னைக்கொண்டுவருகிற ஈராமின் வேலைக்காரரும், சாலொமோனின் வேலைக்காரரும் வாசனை மரங்களையும், இரத்தினங்களையும் கொண்டு வந்தார்கள்.   அந்த வாசனை மரங்களால் ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்கும், ராஜ அரண்மனைக்கும் ஊன்றுக்கால்களையும் சங்கீதக்காரருக்கு சுரமண்டலங்களையும் தம்புருக்களையும் உண்டாக்கினான்.  அப்படிபட்டவைகள் அதற்கு முன்னே யூத தேசத்தில் ஒருக்காலும் காணப்படவில்லை.  சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவுக்கு கொண்டு வந்தவைகளை பார்க்கிலும் அதிகமாய் அவள் ஆசைப்பட்டு கேட்ட எல்லாவற்றையும் அவளுக்குக் கொடுத்தான்.  பின்பு அவள் தன் பரிவாரத்தோடுங்கூட தன் தேசத்திற்கு திரும்பிப்போனாள்.  வியாபாரிகளும் வர்த்தகரும் கொண்டுவரும் பொன்னை தவிர, சாலொமோனுக்கு ஒவ்வொரு வருஷத்திலும் வந்த பொன் அறுநூற்றறுபத்தாறு தாலந்து நிறையாயிருந்தது. 

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது, நாம் கர்த்தருடைய ஆலயமாக விளங்கி தேவஞானமடையும் போது, பூமியின் எல்லையிலிருந்து சேபாவின் ராஜஸ்திரீ நாம் பெற்றிருக்கிற தேவ ஞானத்தை சோதிக்கிறாள்.  அவ்விதம் அந்த சோதனையால்  உலகத்தின் ஆவியை நம் உள்ளத்தில் புகுத்தி, உள்ளத்தை கவர்ச்சிக்கிற அனுபவத்தோடு நம் உள்ளத்தில் வருகிறாள்.   நாம் பெற்ற பரலோக ஞானத்தைக்குறித்து நமக்குள் ஒரு புகழ்ச்சியை உண்டாக்குகிறாள்.  அப்படியாக நம் உள்ளம் இச்சைகளால் இழிப்புண்டு கர்த்தர் நமக்கு தந்த ஆசீர்வாதமாகிய கிருபையின் பலனை அதிகமாய் நம்மிலிருந்து இழுத்துக்கொள்வதற்கு நாம் காரணமாகிறோம்.  அப்படியாக நாம் வஞ்சிக்கப்பட்டு விடுகிறோம். அல்லாமலும் கர்த்தருடைய ஆலயத்தில் சாலொமோனுடைய ஊழியக்காரர்களும், ஈராமின் ஊழியக்காரர்களும்  ஊன்றுகோல்களையும், தம்புருக்களையும், சுரமண்டலங்களையும் சாலொமோன் செய்வித்தான்.  இவைகள் கர்த்தர் திருஷ்டாந்தத்திற்கென்று  வைத்திருக்கிறார்;  என்னவென்றால் வாசனை மரங்களால் ஆலயத்திற்கு பணிமுட்டுகள் செய்கிறாரென்றால், நாம் கர்த்தருக்கு பயந்து அவர் கற்பனைகளில் நடந்து, கர்த்தரின் கிருபைகளால் நிரம்பினால்,  நம்மை கர்த்தர் மகிமையுள்ள ஆலயமாக்குகிறார்; நம்மில் இருக்கிற கிருபையாகிய கிறிஸ்துவே அந்த  ஊன்றுக்கோல்களும், தம்புருவும், சுரமண்டலங்களும் என்பதனை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  ஆனால் தீருவின் செயல்களை நம் உள்ளம் வாஞ்சிக்குமானால் இடறி விழுகிறோம். அப்படியே சாலொமோன் தன் வாழ்க்கையில் கர்த்தரை விட்டு இடறி விலகிப்போகிறான்.  ஆதலால் நாம் யாரும் அந்நியர் புகழ்ச்சிக்கு இடம் கொடாமலும்,  அவர்கள் செயல்களில் இச்சைக்கொண்டு, கர்த்தர் நமக்கு தந்த கிருபையை இழந்துப்போகாதபடி காத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.