தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஓசியா 8:1

உன் வாயிலே எக்காளத்தை வை; அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, என் நியாயப்பிரமாணத்துக்கு விரோதமாகத் துரோகம்பண்ணினபடியினால், கர்த்தருடைய வீட்டின்மேல் சத்துரு கழுகைப்போல் பறந்துவருகிறான்.

 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்திற்கு விரோதமான துரோகம் செய்யக் கூடாது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் தேவ சபைகள் பெருக செய்ய வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்,

 11நாளாகமம் 12:1-8 

ரெகொபெயாம் ராஜ்யத்தைத் திடப்படுத்தித் தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின், அவனும் அவனோடே இஸ்ரவேலர் அனைவரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை விட்டுவிட்டார்கள்.

அவர்கள் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினபடியினால், ராஜாவாகிய ரெகொபெயாமின் ஐந்தாம் வருஷத்தில் எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் ஆயிரத்து இருநூறு இரதங்களோடும், அறுபதினாயிரம் குதிரைவீரரோடும் எருசலேமுக்கு விரோதமாய் வந்தான்.

அவனோடேகூட எகிப்திலிருந்து வந்த லூபியர், சூக்கியர், எத்தியோப்பியரான ஜனங்கள் எண்ணிக்கைக்கு அடங்காதவர்களாயிருந்தார்கள்.

அவன் யூதாவுக்கு அடுத்த அரணான பட்டணங்களைப் பிடித்து, எருசலேம்மட்டும் வந்தான்.

அப்பொழுது செமாயா தீர்க்கதரிசி ரெகொபெயாமிடத்துக்கும், சீஷாக்கினிமித்தம் எருசலேமிலே வந்து கூடியிருக்கிற யூதாவின் பிரபுக்களிடத்துக்கும் வந்து, அவர்களை நோக்கி: நீங்கள் என்னை விட்டுவிட்டீர்கள், ஆகையால் நான் உங்களையும் சீஷாக்கின் கையிலே விழும்படி விட்டுவிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

அப்பொழுது இஸ்ரவேலின் பிரபுக்களும் ராஜாவும் தங்களைத் தாழ்த்தி: கர்த்தர் நீதியுள்ளவர் என்றார்கள்.

அவர்கள் தங்களைத் தாழ்த்தினதைக் கர்த்தர் கண்டபோது, கர்த்தருடைய வார்த்தை செமாயாவுக்கு உண்டாகி, அவர் சொன்னது: அவர்கள் தங்களைத் தாழ்த்தினார்கள், ஆகையால் அவர்களை அழிக்கமாட்டேன்; என் உக்கிரம் சீஷாக்கைக்கொண்டு எருசலேமின்மேல் ஊற்றப்படாதபடிக்கு, அவர்களுக்குக் கொஞ்சம் சகாயத்தைக் கட்டளையிடுவேன்.

ஆனாலும் என்னைச் சேவிக்கிறதற்கும், அந்நிய தேசங்களின் ராஜ்யங்களைச் சேவிக்கிறதற்கும் இருக்கிற வித்தியாசத்தை அவர்கள் அறியும்படிக்கு அவனைச் சேவிக்கிறவர்களாவார்கள் என்றார்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் ராஜாவாகிய ரெகொபெயாம் ராஜ்யத்தை திடப்படுத்தித் தன்னை பலப்படுத்திக் கொண்ட பின்பு அவனோடே கூட இஸ்ரவேலர் அனைவரும் நியாயப்பிரமாணத்தை விட்டு விட்டார்கள்.  

பிரியமானவர்களே, இதனை போல் நம்மில் அநேகர் கரத்தரால் திடப்படுத்தப்பட்டு, பலப்படுத்தப்பட்ட பின்பு நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாக நடந்து பாவஞ்செய்து அதனை விட்டு விடுகிறவர்களாகிறோம்.  ஆனால் இதனை வாசிக்கிற கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே அப்படி யாராவது இருப்பீர்களானால் கவனமாய் வாசித்து தங்கள் பொல்லாத இருதயத்தை மாற்றிக்கொண்டால் நலமாயிருக்கும்.  என்னவென்றால் முந்தின வசனங்களை நாம் வாசிக்கும்போது,  அவ்விதம் நியாயப்பிரமாணம் மறந்து கர்த்தருக்கு விரோதமாக துரோகம் பண்ணினதினால் ஐந்தாம் வருஷத்தில் எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் அவனுடைய

ஏராளமான படைகளோடு யூதாவுக்கு அடுத்த அரணான பட்டணங்களைப் பிடித்து, எருசலேம் மட்டும் வந்தான். இதனை திருஷ்டாந்தப்படுத்தியது எதற்காகவென்றால் நம் ஆத்துமா வஞ்சிக்கப்பட்டு பழைய பாவ பாரம்பரிய வாழ்க்கையோடு சேர்ந்துக் கொள்கிறோம்.  நாம் நடந்துக்கொள்கிற தவறான பாதையை நாமாகவே உணர்ந்துக்கொள்ள முடியாது.  ஏனென்றால் கர்த்தர் நம்முடைய கண்களை அடைத்து விடுகிறார். இப்படியாக நமக்கு விரோதமாக சத்துருக்களை கர்த்தர் எழுப்புவார்; அப்போது இன்னும் அதிகமாக ஆத்மீக பலன் நஷ்டப்பட்டு, சிறைப்பட்டு போவோம். ஆனால் நாம் எப்படி சிறைப்பட்டு போகிறோம் என்று தெரியாமல் சிறைப்பட்டு இருப்போம். ஆதலால் கர்த்தர் செமாயா தீர்க்கதரிசியை ரெகொபெயாமிடத்திலும், எருசலேமில் கூடியிருக்கிற யூதாவின் பிரபுக்களிடத்திலும் அனுப்பி சொல்கிறார்; நீங்கள் என்னை விட்டுவிட்டதால் , நானும்  உங்களை சீஷாக்கின் கையில் விழும்படி விட்டுவிட்டேன் என்கிறார். இவ்விதமாகவே நாமும் கர்த்தருக்கு விரோதமாக துரோகம் செய்தால் நம்மையும் சத்துருவாகிய எகிப்தின் கையில் ஒப்புக்கொடுப்பார்.  ஆனால் நாம் நம்முடைய தவறுதலுக்காக கர்த்தரிடத்தில் மன்றாடி, நம்மை தாழ்மைப்படுத்தி; கர்த்தர் நீதியுள்ளவர் என்று அறிக்கையிட்டு ஒப்புக்கொடுத்தால், கர்த்தர் நம்மேல் வைத்திருந்த உக்கிரக கோபம் நம்மேல் ஊற்றப்படாதபடிக்கு கொஞ்சம் சகாயத்தை கட்டளையிடுவார்.  ஆனாலும் கர்த்தர் சொல்வது கர்த்தரை சேவிக்கிறதற்கும், அந்நிய தேவர்களை சேவிக்கிறதற்கும் உள்ள வித்தியாசத்தை அறியும்படிக்கு அவனை சேவிக்கிறவர்களாவார்கள்.  இதனைப்போல் அநேகர் தங்கள் வாழ்க்கையில் கர்த்தருக்காய் தங்களை ஒப்புக்கொடுத்து விட்டு, அபிஷேகிக்கப்பட்டு தேவனுடைய ராஜ்யம் தங்களில் திடப்பட்டபின்பு தங்கள் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கும்படி சாத்தான் இருதயத்தை தூண்டும் போது அவர்களும்  சாத்தானுடைய வலையில் விழுந்து விடுகிறார்கள். ஆனால் நாம் கர்த்தரிடத்தில்  திரும்பி வருவோமானால் அவர் தம்முடைய உக்கிரக கோபத்தை நம்மேல் ஊற்றாமல் கொஞ்சம் சகாயத்தை கட்டளையிடுவேன் என்கிறார். அதென்னவென்றால் கர்த்தர் சொல்வது என்னை சேவிக்கிறதற்கும், அந்நிய தேசங்களின் ராஜ்யங்களை சேவிக்கிறதற்கும் இருக்கிற வித்தியாசத்தை அறிந்து கொள்ளும்படிக்கு அவனைச் சேவிக்கிறவர்களானார்கள் என்றார். ஆதலால் நாம் அறிந்துக்கொண்டு மனப்பூர்வமாக பாவஞ்செய்தால் கர்த்தர் முழுமையும் நம்மை மன்னிக்காமல் கர்த்தர் யார் என்பதை நாம் தெரிந்துக்கொள்ளும் வரையில் அவர் தாமதிக்கிறார்.  என்னவென்றால் நாமாகவே கர்த்தரை சேவிக்கிறதற்குள்ள வித்தியாசத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான் அவர் நோக்கமாயிருக்கிறது.  ஆதலால் ஒருபோதும் கர்த்தரின் நியாயபிரமாணத்திற்கு விரோதமாக துரோகம் செய்யாதபடிக்கு நம்மை காத்துக்கொள்ளும்படியாக கர்த்தரின் பாதத்தில் நம்மை தாழ்த்தி ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.