தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 5:11 

உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா சத்துருவின் கையிலிருந்து விடுதலையாகி இரட்சிக்கப்படுவது எப்படி? 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் உள்ளத்தை நல்ல எண்ணங்களால் கர்த்தர் நிரப்புகிறார் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால், 

11நாளாகமம் 20:20-25 

அவர்கள் அதிகாலமே எழுந்திருந்து, தெக்கொவாவின் வனாந்தரத்திற்குப் போகப் புறப்பட்டார்கள்; புறப்படுகையில் யோசபாத் நின்று: யூதாவே, எருசலேமின் குடிகளே, கேளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்திபெறுவீர்கள் என்றான்.

பின்பு அவன் ஜனத்தோடே ஆலோசனைபண்ணி, பரிசுத்தமுள்ள மகக்துவத்தைத் துதிக்கவும், ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்னாக நடந்துபோய், கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றும் உள்ளதென்று கர்த்தரைப் பாடவும், பாடகரை நிறுத்தினான்.

அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்.

எப்படியெனில், அம்மோன் புத்திரரும் மோவாபியரும், சேயீர் மலைத்தேசக்குடிகளைச் சங்கரிக்கவும் அழிக்கவும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள்; சேயீர் குடிகளை அழித்துத் தீர்ந்தபோது, தாங்களும் தங்களில் ஒருவரையொருவர் அழிக்கத்தக்கவிதமாய்க் கைகலந்தார்கள்.

யூதா மனுஷர் வனாந்தரத்திலுள்ள சாமக்கூட்டண்டையிலே வந்து, அந்த ஏராளமான கூட்டமிருக்கும் திக்கை நோக்குகிறபோது, இதோ, அவர்கள் தரையிலே விழுந்துகிடக்கிற பிரேதங்களாகக் கண்டார்கள்; ஒருவரும் தப்பவில்லை.

யோசபாத்தும் அவனுடைய ஜனங்களும் அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிட வந்தபோது, அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும் பிரேதங்களிலிருந்து உரிந்துபோட்ட ஆடை ஆபரணங்களும், தாங்கள் எடுத்துக்கொண்டு போகக் கூடாதிருந்தது; மூன்று நாளாய்க் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது.

மேற்கூறப்பட்ட வசனங்களில் திருஷ்டாந்தமாகக் கர்த்தர் விளக்குகிறது என்னவென்றால் இரட்சிக்கப்பட்டு கர்த்தரை ஆவியோடும், உண்மையோடும் தொழுதுக்கொள்ளுகிறவர்கள் அதிகாலையில் கர்த்தரை தேடுகிறவர்களாக இருக்க வேண்டும், அதுவுமட்டுமல்லாமல் அவரை மிகவும் நம்புகிறவர்களாகயிருக்க வேண்டும்.  அப்போது நாம் நிலைப்படுவோம்.  மற்றும் கர்த்தரின் வார்த்தைகளை கூறுகிற தீர்க்கதரிசிகளை நம்ப வேண்டும்.  அப்போது நாம் சித்திப்பெறுவோம்.  அல்லாமலும் நாம் ஒவ்வொருவரும் மகத்துவமுள்ள நாமத்தை துதித்து கர்த்தரின் அபிஷேகத்தினால் நிறைந்தவர்களாக ; கர்த்தரை துதியுங்கள், அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதென்று அவரை பாடி துதிக்கும் போது நம்முடைய ஆத்துமாவுக்கு விரோதமாக பதிவிருந்த அம்மோன் புத்திரராகிய புற ஜாதிகளின் கிரியையும், பெருமைகாரனாகிய மோவாபியரையும், சேயீர் மலை தேசத்தாராகிய சத்துருவையும் கர்த்தர் அவருடைய ஆவியினால் விழப்பண்ணுகிறார்.  இவ்விதமாக நம் ஆத்துமா சத்துருவின் கையிலிருந்து விடுதலையாகி இரட்சிக்கப்படுகிறது.  இப்படியாக நம்முடைய ஆத்துமா சத்துருவின் கையிலிருந்து விடுதலையாகி இரட்சிக்கும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.