தேவனுக்கே மகிமையுண்டாவதாக        

சங்கீதம் 6:4 

 திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரை விட்டு பின் வாங்கி போவாமானால் தீராத வியாதியினால் வாதிக்கப்பட்டு, கர்த்தரால் தண்டிக்கப்படுவோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் நித்திய ஜீவன் கெட்டு போகாமல் பாதுகாத்துக்கொள்ளும்படியாக ஜாக்கிரதையுள்ளவர்களாக காணப்படவேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால், 

11நாளாகமம் 21:1-11 

யோசபாத் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோராம் ராஜாவானான்.

அவனுக்கு யோசபாத்தின் குமாரராகிய அசரியா, ஏகியேல், சகரியா, அசரியா, மிகாவேல், செப்பத்தியா என்னும் சகோதரர் இருந்தார்கள்; இவர்கள் எல்லாரும் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோசபாத்தின் குமாரர்.

அவர்களுடைய தகப்பன் வெள்ளியும் பொன்னும் உச்சிதங்களுமான அநேகம் நன்கொடைகளையும், யூதாவிலே அரணான பட்டணங்களையும் அவர்களுக்குக் கொடுத்தான்; யோராம் சேஷ்டபுத்திரனானபடியால், அவனுக்கு ராஜ்யத்தைக் கொடுத்தான்.

யோராம் தன் தகப்பனுடைய ராஜ்யபாரத்திற்கு வந்து தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின்பு, அவன் தன்னுடைய சகோதரர் எல்லாரையும் இஸ்ரவேலின் பிரபுக்களில் சிலரையும் பட்டயத்தால் கொன்றுபோட்டான்.

யோராம் ராஜாவாகிறபோது, முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்.

அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபின் வீட்டார் செய்ததுபோலச் செய்தான்; ஆகாபின் குமாரத்தி அவனுக்கு மனைவியாயிருந்தாள்; அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

கர்த்தர் தாவீதுக்கும் அவன் குமாரருக்கும் என்றென்றைக்கும் ஒரு விளக்கைக் கட்டளையிடுவேன் என்று சொல்லி, அவனோடே பண்ணின உடன்படிக்கையினிமித்தம் தாவீதின் வம்சத்தை அழிக்கச் சித்தமில்லாதிருந்தார்.

அவன் நாட்களில் யூதாவுடைய கையின் கீழிருந்த ஏதோமியர் கலகம்பண்ணி, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.

அதினால் யோராம் தன் பிரபுக்களோடும் தன் சகல இரதங்களோடும் புறப்பட்டுப்போனான்; அவன் இராத்திரியில் எழுந்திருந்து, தன்னை வளைந்துகொண்ட ஏதோமியரையும் இரதங்களின் தலைவரையும் முறிய அடித்தான்.

ஆகிலும் யூதாவுடைய கையின் கீழிருந்த ஏதோமியர் இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, கலகம்பண்ணிப் பிரிந்தார்கள்; அவன் தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டபடியினால், அக்காலத்திலே லிப்னா பட்டணத்தாரும் கலகம்பண்ணினார்கள்.

அவன் யூதாவுடைய மலைகளின்மேல் மேடைகளை உண்டாக்கி, எருசலேமின் குடிகளைச் சோரம்போகப்பண்ணி, யூதாவையும் அதற்கு ஏவிவிட்டான்.

மேற்கூறப்பட்ட வசனங்கள் நம் ஆத்துமா கெட்டுப்போவதைக்குறித்து கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  என்னவென்றால் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்திற்கு ஏழு குமாரர்கள் இருந்ததில் சேஷ்டபுத்திரனாகிய  யோராமுக்கு ராஜ்யபாரம் கொடுக்கப்பட்டு; அவன் ராஜ்யபாரத்திற்கு வந்து தன்னை பலபடுத்திக் கொண்ட பின்பு, அவனுடைய எல்லா சகோதரர்களையும், இஸ்ரவேலரின் பிரபுக்களில் சிலரையும் பட்டயத்தால் கொன்று போடுகிறான். அல்லாமலும் அவன் தன் தகப்பன் வழியில் நடவாமல், இஸ்ரவேல் ராஜாக்களின் வழியில் நடந்து ஆகாபின் வீட்டார் செய்தது போல செய்து ஆகாபின் குமாரத்தியை தனக்கு மனைவியாக்கிக்கொண்டு கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தானென்றால், நம் உள்ளம் கர்த்தரை விட்டு பின் வாங்குகிறதை காட்டுகிறது .  ஆனால் கர்த்தர் தாவீதுக்கும், அவன் குமாரருக்கும் ஒரு விளக்கை என்றன்றைக்கும் கட்டளையிடுவேன் என்று அவனோடே  பண்ணின உடன்படிக்கையினிமித்தம் கர்த்தர் அந்த வம்சத்தை அழிக்க சித்தமில்லாதிருந்தார்.  அது போல நாம் இரட்சிப்பை சொந்தமாக்கி கொள்ளும் போது கர்த்தரிடம் நாம் எடுத்த உடன்படிக்கையினிமித்தம்; நாம் தப்பிதங்கள் செய்கிற போதும், கர்த்தர் நம்மை அழிக்காமல் நீடிய பொறுமையோடு நம்முடைய மனந்திரும்புதலுக்காக காத்திருக்கிறார். ஆனால் நாம் இரட்சிப்பை இழக்கும் போது, நமக்குள் இருந்த நீதியின் கிரியைகள் எல்லாம் ஒவ்வொன்றாக அற்றுப்போகிறது. அப்போது கர்த்தர் அவருடைய வழிகளில் நாம் நடவாததைக்கண்டு, அவருடைய வார்த்தைகளினால் நம்மோடு பேசுகிறதாவது, 

11நாளாகமம் 21:12-15 

அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலியா எழுதின ஒரு நிருபம் அவனிடத்திற்கு வந்தது; அதில்: உம்முடைய தகப்பனான தாவீதின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீ உன் தகப்பனாகிய யோசபாத்தின் வழிகளிலும், யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் வழிகளிலும் நடவாமல்,

இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபுடைய குடும்பத்தின் சோரமார்க்கத்திற்கு ஒத்தபடியே யூதாவையும் எருசலேமின் குடிகளையும் சோரம்போகப்பண்ணி, உன்னைப்பார்க்கிலும் நல்லவர்களாயிருந்த உன் தகப்பன் வீட்டாரான உன் சகோதரரையும் கொன்றுபோட்டபடியினால்,

இதோ, கர்த்தர் உன் ஜனத்தையும், உன் பிள்ளைகளையும், உன் மனைவிகளையும், உனக்கு உண்டான எல்லாவற்றையும் மகா வாதையாக வாதிப்பார்.

நீயோ உனக்கு உண்டாகும் குடல் நோயினால் உன் குடல்கள் நாளுக்கு நாள் இற்று விழுமட்டும் கொடிய வியாதியினால் வாதிக்கப்படுவாய் என்று எழுதியிருந்தது.

மேற்கூறப்பட்ட கர்த்தரின் வார்த்தை நமக்கு தேவன் தரும் எச்சரிப்பின் சத்தம்.  அந்த சத்தத்திற்கு செவிக்கொடுப்போமானால் தப்புவிக்கப்படுவோம்.  அல்லாவிட்டால் கர்த்தர் பொல்லாத ஆவியை நம்மேல் அனுப்புகிறார்.  அவைகள் நம்முடைய ஆத்துமாவுக்குள் புகுந்து நம்மை சிறைப்படுத்தி நம்முடைய எல்லா நன்மைகளையும் சூறையாடுகிறது  பின்பு நாம் தீராத நோயினால் வாதிக்கப்படுவோம்;  இவ்விதமாக கர்த்தரைவிட்டு பின்மாறுகிறவர்களின் ஆத்துமாவை அவர் அழித்து, யாரும் விரும்புவாரில்லாமல் பூமியைவிட்டு மாற்றப்படுவார்கள். ஆதலால் நாம் யாரும் இரட்சிப்பை இழந்து போகாமல், கர்த்தரை விட்டு பின்வாங்கிப்போகாமல் நம்மை காத்துக்கொண்டு என்றென்றும் அவரில் நிலைத்திருக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.  ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.