தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 92:8
கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராயிருக்கிறீர்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் நித்திய ஜீவன் கெட்டுப்போகாமல் காத்துக்கொள்ளும்படி முடிவுபரியந்தமும் ஜாக்கிரதையுள்ளவர்களாக காணப்பட வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவின் இசை கருவியாக செயல்பட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்,
11நாளாகமம் 20:29-37
கர்த்தர் இஸ்ரவேலின் சத்துருக்களோடு யுத்தம்பண்ணினார் என்று கேள்விப்பட்ட அந்தந்த தேசத்து ராஜ்யத்தார்மேல் தேவனால் உண்டான பயங்கரம் வந்தது.
இவ்விதமாய் தேவன் சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாத இளைப்பாறுதலை அவனுக்குக் கட்டளையிட்டதினால், யோசபாத்தின் ராஜ்யபாரம் அமரிக்கையாயிருந்தது.
யோசபாத் யூதாவை அரசாண்டான்; அவன் ராஜாவாகிறபோது, முப்பத்தைந்து வயதாயிருந்து, இருபத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான்; சில்கியின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின்பேர் அசுபாள்.
அவன் தன் தகப்பனாகிய ஆசாவின் வழியிலே நடந்து, அதைவிட்டு விலகாதிருந்து, கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
ஆனாலும் மேடைகள் தகர்க்கப்படவில்லை; ஜனங்கள் தங்கள் இருதயத்தைத் தங்கள் பிதாக்களின் தேவனுக்கு இன்னும் நேராக்காதிருந்தார்கள்.
யோசபாத்தின் ஆதியந்தமான மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் கண்டிருக்கிற ஆனானியின் குமாரனாகிய யெகூவின் வசனங்களில் எழுதியிருக்கிறது.
அதற்குப்பின்பு யூதாவின் ராஜாவாகிய யோசபாத் பொல்லாப்புச் செய்கிறவனான அகசியா என்னும் இஸ்ரவேலின் ராஜாவோடே தோழமைபண்ணினான்.
தர்ஷீசுக்குப் போகும்படிக்குக் கப்பல்களைச் செய்ய அவனோடே கூடிக்கொண்டான்; அப்படியே எசியோன்கேபேரிலே கப்பல்களைச் செய்தார்கள்.
மரேசா ஊரானாகிய தொதாவானின் குமாரனான எலியேசர் யோசபாத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி: நீர் அகசியாவோடே கூடிக்கொண்டபடியினால், கர்த்தர் உம்முடைய கிரியைகளை முறித்துப்போட்டார் என்றான்; அந்தக் கப்பல்கள் உடைந்துபோயிற்று, அவர்கள் தர்ஷீசுக்குப் போகக் கூடாமற்போயிற்று.
மேற்கூறப்பட்ட வசனங்களில் கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்காக அவர்கள் சத்துருக்களோடு யுத்தம் பண்ணினார் என்ற செய்தியை கேள்விப்பட்ட அந்தந்த தேசத்து ராஜ்யத்தார் மேல் தேவனால் உணடான பயங்கரம் வந்தது. இவ்விதமாய்த் தேவன் சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாத இளைப்பாறுதலை கட்டளையிட்டதால், யோசபாத்தின் ராஜ்யபாரம் அமரிக்கையாயிருந்தது. பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட கருத்துக்கள் திருஷ்டாந்தங்கள்; என்னவென்றால் நம் உள்ளத்தை அசுத்திபடுத்துகிற பொல்லாத கிரியைகளை கர்த்தர் நம்முடைய வசனத்தை அனுப்பி அதனை நிர்மூலம்பண்ணும்போது அதனை சார்ந்த அத்தனை கிரியைகளின் மேலும் கர்த்தரால் பயங்கரம் உண்டாகிறது. இவ்விதமாக நம்மை சுற்றிலும் உள்ள தீய கிரியைகளை தானாகவே கர்த்தர் மாற்றி நமக்கு இறைப்பாறுதலை கட்டளையிடுகிறார். யோசபாத் அவன் தகப்பன் ஆசா செய்தது போல் கர்த்தருக்கு செம்மையானவைகளை செய்தாலும் மேடைகள் இன்னும் அகற்றப்பட வில்லை. அதன் காரணமாக ஜனங்கள் தங்கள் இருதயத்தை பிதாக்களின் தேவனுக்கு நேராக்கவில்லை. இப்படியிருக்க நாமும் இவ்விதம் மேடைகள் மாற்றப்படாமல் இருப்போமானால் எத்தனை செம்மையானவைகளை செய்தாலும், இருதயம் கர்த்தருக்கு நேராக்காமல் இருக்கிறோம். அப்படியிருப்பதால் தேவையற்ற நண்பர்களோடு தோழமை வைக்கிறோம். ஆதலால் கர்த்தர் நம்முடைய விசுவாச ஓட்டத்திற்கான கிரியைகளை இடையில் முறித்து போடுகிறார். ஆதலால் நம்முடைய வாழ்வில் நித்திய ஜீவன் இடையில் அசுத்த கிரியைகளுக்கு இடம் கொடுத்து கெட்டுப்போகிறது. ஆதலால் நாம் எப்போதும் எல்லாவற்றிலும் கர்த்தரையே நம்பி சார்ந்து வாழ்ந்து நித்திய ஜீவன் கெட்டு போகாமல் காத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.