தேவனுக்கே மகிமையுண்டாவதாக

I பேதுரு 2:9

நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மை கர்த்தர் ஆசாரியராகவும், ராஜாக்களுமாக்குகிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்மில் வஞ்சிக்கிற பொல்லாத ஆவியை நிர்மூலம்பண்ணி,  கர்த்தருடைய ஜனங்களாயிருக்கும் படி கிறிஸ்துவினால் உடன்படிக்கை பண்ணிக்கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால், 

11நாளாகமம் 23:17-21 

அப்பொழுது ஜனங்களெல்லாரும் பாகாலின் கோவிலுக்குப் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும், அதின் விக்கிரகங்களையும் தகர்த்து, பாகாலின் பூசாசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றுபோட்டார்கள்.

தாவீது கட்டளையிட்டபிரகாரம் சந்தோஷத்தோடும் சங்கீதத்தோடும் கர்த்தரின் சர்வாங்க தகனபலிகளை மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே செலுத்தத்தக்கதாக, யோய்தா கர்த்தருடைய ஆலயத்தை விசாரிக்கும் உத்தியோகங்களைத் தாவீது கர்த்தருடைய ஆலயத்துக்கென்று பகுத்துவைத்த லேவியரான ஆசாரியர்களின் கையில் ஒப்புவித்து,

யாதொரு காரியத்தினால் தீட்டுப்பட்டவன் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசியாதபடிக்கு, அதின் வாசல்களுக்குக் காவலாளரை நிறுத்தினான்.

நூறுபேருக்கு அதிபதிகளையும், பெரியவர்களையும், ஜனத்தை ஆளுகிறவர்களையும், தேசத்து சமஸ்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, ராஜாவைக் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து இறங்கப்பண்ணி, உயர்ந்த வாசல்வழியாய் ராஜ அரமனைக்குள் அழைத்துவந்து அரசாளும் சிங்காசனத்தின்மேல் ராஜாவை உட்காரப்பண்ணினார்கள்.

தேசத்து ஜனங்களெல்லாரும் மகிழ்ந்தார்கள், அத்தாலியாளை பட்டயத்தால் கொன்றபின்பு நகரம் அமரிக்கையாயிற்று.

மேற்கூறிய வசனங்களில் எழுதியுள்ளபடி நம்முடைய வாழ்வில் வஞ்சிக்கிற ஆவிகளுக்கு நம் உள்ளத்தில் இடம்கொடாமல், கிறிஸ்துவே ஆசாரியராகவும், ராஜாவாகவும் அபிஷேகம் பண்ணப்பட்டு, நம்மில் உள்ள எல்லா பாகாலின் கோவில்களை இடித்து, அதன் பலிபீடங்களையும், விக்கிரகங்களையும் தகர்த்து, அதன் பூஜாசாரிகளை பலிபீடங்களுக்கு முன்பாக நம்மிலிருந்து நிர்மூலம்பண்ணி; கர்த்தர் நமக்கு கட்டளையிட்டபடியே சங்கீதத்தோடும், சர்வாங்க தகனபலிகளை மோசேயின் நியாயபிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி, நாம் கர்த்தருக்கு கிறிஸ்துவின் மூலம் ஸ்தோத்திரபலி செலுத்துகிறவர்களாக இருக்க வேண்டும்.  ஆனால் நாம் யாதொரு காரியத்தில் தீட்டுப்பட்டிருப்போமானால் கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கக் கூடாது.  மேலும் நாம் பரிசுத்தத்தில் அனுதினம் கர்த்தரின் வசனத்தில் வளருவோமானால் நம்மில் ஆலயம் மட்டுமல்ல, கர்த்தரின் சிங்காசனத்திற்காக அரண்மனையும் விளங்குகிறது.  இவ்விதமாக நாம் ஆசாரியராகவும், ராஜாக்களாகவும் இரட்சிக்கப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.