தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 106:39,40
அவர்கள் தங்கள் கிரியைகளினால் அசுத்தமாகி, தங்கள் செய்கைகளினால் சோரம்போனார்கள்.
அதினால் கர்த்தருடைய கோபம் தமது ஜனத்தின்மேல் மூண்டது; அவர் தமது சுதந்தரத்தை அருவருத்தார்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் ஒருபோதும் கர்த்தரை விட்டு விலகாமல் ஜாக்கிரதையோடு இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்மை அனுதினம் புதிய கிருபைகளால் புதுப்பிக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்,
IIநாளாகமம் 24:13-17
அப்படி வேலையை விசாரிக்கிறவர்கள் தங்கள் கையினாலே வேலையை நடந்தேறப்பண்ணி, தேவனுடைய ஆலயத்தை அதின் முந்தின சீருக்குக் கொண்டுவந்து அதைப் பலப்படுத்தினார்கள்.
அதை முடித்துத் தீர்ந்தபின்பு, மீந்த பணத்தை ராஜாவுக்கும் யோய்தாவுக்கும் முன்பாக கொண்டுவந்தார்கள்; அதிலே கர்த்தருடைய ஆலயத்தில் செய்யப்படும் பணிமுட்டுகளையும், ஆராதனை பலி முதலியவைகளுக்கு வேண்டிய பணிமுட்டுகளையும், கலசங்களையும், பொற்பாத்திரங்களையும், வெள்ளிப்பாத்திரங்களையும் பண்ணுவித்தான்; யோய்தாவின் நாளெல்லாம் நித்தம் கர்த்தருடைய ஆலயத்திலே சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி வந்தார்கள்.
யோய்தா தீர்க்காயுசுள்ளவனாய் முதிர்வயதில் மரித்தான்; அவன் மரணமடைகிறபோது நூற்றுமுப்பது வயதாயிருந்தான்.
அவன் தேவனுக்காகவும் அவருடைய ஆலயத்திற்காகவும் இஸ்ரவேலுக்கு நன்மைசெய்தபடியினால், அவனைத் தாவீதின் நகரத்தில் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.
யோய்தா மரணமடைந்தபின்பு யூதாவின் பிரபுக்கள் வந்து, ராஜாவைப் பணிந்துகொண்டார்கள்; அப்பொழுது ராஜா அவர்களுக்குச் செவிகொடுத்தான்.
மேற்கூறப்பட்ட வசனங்களின்படி கர்த்தரின் ஆலயமாகிய நம்முடைய சரீரத்தில் கர்த்தர் புதிய கிருபையினால் நம்மை அனுதினம் புதுப்பித்து; பின்பு அந்த கிருபையினால் நாம் நிரப்பப்பட்டு அவருடைய ஆலயத்திலே நம்மை முழுமையாக தகனபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதனை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்தி ஆசாரியனாகிய யோய்தா தீர்க்காயுசுள்ளவனாய் மரித்தான் என்பதனை காட்டுகிறார். இப்படியே நாமும் கர்த்தரின் கிருபையினால் தீரக்காயுசை பெற்று கொள்ள முடியும். அப்படியே யோய்தா மரணமடையும் போது நூற்று முப்பது வயதுள்ளவனாய் மரித்தான். அவன் தேவனுக்காகவும், அவருடைய ஆலயத்திற்காகவும், இஸ்ரவேலுக்கு நன்மை செய்தபடியினால் அவனை தாவீதின் நகரத்தில் ராஜாக்களண்டையில் அடக்கம் பண்ணினார்கள். ஆசாரியனாகிய யோய்தா மரணமடைந்த பின்பு பிரபுக்கள் ராஜாவை பணிந்துக்கொண்டார்கள். அப்பொழுது ராஜா அவர்களுக்கு செவிக்கொடுத்தான். பின்பு அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தை விட்டுவிட்டு, தோப்பு விக்கிரகங்களையும், சிலைகளையும் சேவித்தார்கள்; அப்பொழுது அவர்கள் செய்த குற்றத்தினிமித்தம் யூதாவின் மேலும், எருசலேமின் மேலும் கர்த்தருக்கு கடுங் கோபம்வந்தது.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நித்திய பிரதான ஆசாரியராகவும், ராஜாதி ராஜாவாக நம்மில் விளங்குகிறார். ஆனால் அதற்கேற்ற காலங்கள் வரையிலும் கிறிஸ்து ஆசாரியராக மகிமையாக வெளிப்படுவார். பின்பு அவர் ராஜாவாக அனுதினம் நம்மில் ஆளுகை செய்வார் என்பது முந்தின தேவனுடைய வார்த்தைகளினால் கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார். ஆனால் அநேகம் பேர் இரட்சிக்கப்பட்டு,கர்த்தரால் அபிஷேகம்பண்ணபட்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் தேவனை விட்டுவிட்டு சிலைகளையும், விக்கிரகங்களையும் சேவிக்கிறதால் கர்த்தரால் கடுங்கோபம் அவர்கள் மேல் மூளுகிறது. ஆதலால் நாம் சேவிக்கிற தேவனை ஒருபோதும் விட்டு விலகாமல் ஜாக்கிரதையுள்ளவர்களாக என்றென்றும் அவரோடு வாழுகிறவர்களாக இருக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.