தேவனுக்கே மகிமையுண்டாவதாக
எபேசியர் 6:10, 11
கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.
நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்காய் அநேக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துகிறவர்களாக இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் சபை பெருக செய்கிறவர்களாகயிருக்க வேண்டும் என்பதனைக் குறித்துத் தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்,
IIநாளாகமம் 26:11-13
உசியாவுக்கு யுத்தவீரரின் சேனையும் இருந்தது; அது சம்பிரதியாகிய ஏயெலினாலும் ஆதிக்கக்காரனாகிய மாசேயாவினாலும் இலக்கம்பார்க்கப்பட்டபடியே, ராஜாவின் பிரபுக்களில் ஒருவனாகிய அனனியாவின்கீழ் வகுப்பு வகுப்பாய்ச் சேவகம்பண்ணப் புறப்பட்டது.
பராக்கிரமசாலிகளான வம்சத்தலைவரின் தொகையெல்லாம் இரண்டாயிரத்து அறுநூறு.
இவர்கள் கையின்கீழ்ச் சத்துருக்களுக்கு விரோதமாக ராஜாவுக்குத் துணைநிற்க, பராக்கிரமத்தோடே யுத்தம்பண்ணுகிற மூன்றுலட்சத்து ஏழாயிரத்து ஐந்நூறுபேரான சேனை இருந்தது.
மேற்கூறிய வசனங்களில் கூறபட்ட வசனங்களை தியானிக்கும் போது, அவன் கர்த்தருக்குள் பலப்பட்ட பின்பு யுத்த வீரரின் சேனையும் அவனுக்கு இருந்தது. அந்த சேனை அனனியாவின் கீழ் வகுப்பு வகுப்பாய் சேவகம் பண்ண புறப்பட்டது. பராக்கிரமசாலிகளின் தொகையெல்லாம் இரண்டாயிரத்து அறுநூறு. இவர்கள் கையின் கீழ் ராஜாவுக்கு துணை நிற்க, பராக்கிரமத்தோடே யுத்தம் பண்ணுகிற மூன்று லட்சத்து ஏழாயிரத்து ஐந்நூறு பேரான சேனை இருந்தது. இந்த சேனையிலுள்ளவருக்கெல்லாம் உசியா ,
IIநாளாகம் 26:14-15
இந்தச் சேனையிலுள்ளவருக்கெல்லாம் உசியா கேடகங்களையும், ஈட்டிகளையும், தலைச்சீராக்களையும், மார்க்கவசங்களையும், வில்லுகளையும், கல்லெறிகிற கவண்களையும் ஆயத்தப்படுத்தினான்.
கோபுரங்கள்மேலும் அலங்கக்கோடிகள்மேலும் நின்று அம்புகளையும் பெரிய கற்களையும் பிரயோகிக்கிறதற்கு நிபுணரான தொழிலாளிகள் கற்பித்த யந்திரங்களையும் அவன் எருசலேமில் உண்டாக்கினான்; அப்படியே அவன் கீர்த்தி வெகுதூரம் பரம்பிற்று; அவன் பலப்படுமட்டும் ஆச்சரியமாய் அவனுக்கு அநுகூலமுண்டாயிற்று.
மேற்கூறப்பட்ட ஆயுதங்களையெல்லாம் ராஜா பலப்படுத்தினான். பின்பு அவன் கீர்த்தி வெகுதூரம் பரம்பிற்று; அவன் பலபடுமட்டும் ஆச்சரியமாய் அவனுக்கு அனுகூலமாயிற்று. பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களில் உள்ளவை நமக்கு கர்த்தர் திருஷ்டாந்தத்திற்கு என்று எழுதப்பட்டிருக்கிறது. என்னவென்றால் நாம் ஒவ்வொருவரும் கர்த்தருடைய சத்தியத்தின் படியே நம்முடைய ஆத்துமாவில் பலபட வேண்டும்; அவ்விதம் பலப்பட்டால் மட்டுமே நம் உள்ளத்தில் எழும்புகிற பொல்லாத சாத்தானுடைய செயல்களை முறியடித்து ஜெயம்பெற்று எழும்பி, கர்த்தருக்காய் நாம் பரிசுத்தமாக வாழ்ந்து; அநேக ஜனங்களை ஜாதிகளின் கிரியைகளினின்று கர்த்தரின் பாதையில் ஆதாயபடுத்திக் கொள்ள முடியும். மேலும் சத்தியம் என்னும் கச்சையை அரையிலே கட்டினவர்களாகவும், அவருடைய வசனம் நமக்கு கேடகமாகவும், நீதி என்னும் மார்க்கவசத்தை அணிந்தவர்களாகவும், இரட்சிப்பென்னும் தலைசீராவை தமது சிரசில் தரித்தவர்களாயும், நீதி சரிகட்டுதலென்னும் வஸ்திரங்களை உடுப்பாக உடுத்திக் கொண்டவர்களாயும், வைராக்கியத்தை சால்வையாக போர்த்துக்கொண்டவர்களாகவும், கர்த்தரின் வல்லமையை உடையவர்களாயும், அவர் ஆவியாகிய கவண்கற்களால் சத்துருவை மேற்க்கொள்கிறவர்களாகவும் இருக்க வேண்டும். இவையெல்லாம் நம்மில் இருக்கிற கர்த்தராகிய கிறிஸ்துவின் செயலாக இருக்கிறது. இவ்விதமாக சத்துருக்களோடு யுத்தம் செய்வது நாம் அல்ல நம்மில் இருக்கிற கிறிஸ்து என்பதனை நாம் முக்கியமாக அறிந்துக்கொள்ள வேண்டும். இப்பாடியாக கர்த்தராகிய கிறிஸ்துவின் கீர்த்தி எல்லா இடங்களிலும் பிரசித்தமாகவும், நாம் கர்த்தருக்காய் வாழும் போது, அது நமக்கு எல்லா விதத்திலும் அனுகூலமுமாயிருக்கும். இப்படியாக நம்மை கர்த்தருக்காய் ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.