தேவனுக்கே மகிமையுண்டாவதாக

IIதெசலோனிக்கேயர் 2:14

நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மகிமையை அடையும்பொருட்டாக எங்கள் சுவிசேஷத்தினாலே அந்த இரட்சிப்புக்கு அவர் உங்களை அழைத்தார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம்  மனமேட்டிமையடைந்து அழிந்துப்போகாமல் ஜாக்கிரதையோடு காணப்பட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் சபை பெருக செய்கிறவர்களாக இருக்க வேண்டும்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்,

 IIநாளாகமம் 26:16-17 

அவன் பலப்பட்டபோது, தனக்குக் கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம் மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து, தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.

ஆசாரியனாகிய அசரியாவும், அவனோடேகூடக் கர்த்தரின் ஆசாரியரான பராக்கிரமசாலிகளாகிய எண்பதுபேரும், அவன் பிறகே உட்பிரவேசித்து,

மேற்கூறிய வசனங்களில் கூறப்பட்டபடி ராஜாவாகிய உசியா பலப்பட்ட போது அவனுக்கு கேடுண்டாகும்மட்டும், அவனுடைய மனம் மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து, தூபபீடத்தின் மேல் தூபங் காட்டக் கர்த்தருடைய ஆலயத்தின் பிரவேசித்தான்.  ஆசாரியனாகிய அசரியாவும், அவனோடேக் கூட கர்த்தரின் ஆசாரியரான பராக்கிரமசாலிகளான எண்பது பேரும், அவன் பிறகே உட்பிரவேசித்து, ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்து நின்று சொன்னது, 

IIநாளாகமம் 26:18  

ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்து நின்று: உசியாவே, கர்த்தருக்குத் தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல; தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் குமாரராகிய ஆசாரியருக்கே அடுக்கும்; பரிசுத்த ஸ்தலத்தை விட்டு வெளியே போம்; மீறுதல் செய்தீர்; இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக லபியாது என்றார்கள்.

மேற்கூறிய வசனங்களில் ராஜாவாகிய உசியா கர்த்தருக்கு தூபங்காட்டினது தேவனுக்கு பிரியமல்லாததாயிருந்ததால்; பரிசுத்தமாக்கபட்ட ஆரோனின் குமாரராகிய ஆசாரியனுக்கே அடுக்கும் என்றும் சொல்லி அவனை வெளியே அனுப்பி; மீறுதல் செய்தீர்;  ஆதலால் தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக லபியாது என்றார்கள்.  அதற்கு உசியா கோபத்தோடே தூபகலசத்தை தன் கையிலே பிடித்துக் கொண்டு, ஆசாரியரோடே கோபமாய் பேசுகிற போது ; கர்த்தருடைய ஆலயத்திலே தூபப்பீடத்திற்கு முன் நிற்கிற உசியாவின் நெற்றியின் மேல் குஷ்டரோகம் தோன்றிற்று.  பிரதான ஆசாரியனாகிய அசரியாவும், சகல ஆசாரியும் அதனை பார்க்கும் போது இவன் குஷ்டரோகம் பிடித்தவனென்று கண்டு, அவனை அங்கிருந்து வெளியே போக விட்டார்கள்.  உசியாவின் மரணநாள் மட்டும் குஷ்டரோகியாயிருந்து, கர்த்தருடைய ஆலயத்திற்கு புறம்பாக்கப்பட்டபடியினால்; ஒரு தனித்த வீட்டிலே வாசம் பண்ணினான்; அவன் குமாரனாகிய யோதாம் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் ஜனங்களை நியாயம் விசாரித்தான்.  இவனுடைய ஆதியோடந்த நடபடிகள் எல்லாம் ஏசாயா தீர்க்கத்தரிசி புஸ்தகத்தில் எழுதபட்டதுமல்லாமல், இவன் நித்திரையடைந்த பின்பு ஜனங்கள் அவனை பிதாக்களண்டையில், ராஜாக்களை அடக்கம் பண்ணுகிற இடத்திற்கு அருகான நிலத்திலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோதாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.  

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களின் படி பரிசுத்தமாக்கப்படாத யாரும் தூபப்பீடத்தின் மேல்ஏறக்கூடாது என்பதும்; கர்த்தரின் சமூகத்தில் நாம் மனமேட்டிமையடைந்து கிறிஸ்துவுக்குரிய ஸ்தானத்தை நெருங்குவதற்கு மனம் துணிகரம் கொள்ளக்கூடாது என்பதும் நமக்கு தெரிய வேண்டும்.  அப்படி துணிகரம் கொள்கிறவர்களுக்கு கேடுண்டாகும் என்பதனை கர்த்தர் உசியாவை வைத்து தெளிவுப்படுத்துகிறார்.  மேலும் நாம் கர்த்தரால் அபிஷேகம்பண்ணபட்ட பின்பு நம்முடைய உள்ளம் துணிகரம் கொண்டால் உள்ளான மனுஷனின் நெற்றியில் குஷ்டரோகம் காணப்படும் என்பதாய் வேத வசனம் விளக்குகிறது.  அப்படியாக உள்ளவர்கள் கர்த்தரின் ஆலயத்திற்கு புறம்பாக்கப்படுவார்கள் என்றும்; அவர்கள்  தங்கள் குற்றங்களை கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு மீண்டும் மனந்திரும்பி தங்களை புதுபித்துக்கொண்டால் மீட்கப்படுவார்கள்.  இல்லையென்றால் மரண நாள் மட்டும் பாவத்தில் வாழ்ந்து பாவத்தால் அழிவார்கள்.  ஆதலால் கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நம்முடைய வாழ்வில் குற்றங்கள் காணப்படும் போது கர்த்தரிடத்தில் பாவ மன்னிப்புப்பெற்று புது வாழ்வை பெற்று; என்றென்றும் அவரோடு வாழும்படி ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.