தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 13:5
நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் நம்மை முழுமையும் எப்போதும் கர்த்தருக்காய் நேராக்கிக் கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, மணவாட்டி சபையாகிய நாம் மனமேட்டிமையடைந்து அழிந்துப்போகாமல் ஜாக்கிரதையோடு காணப்பட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்,
IIநாளாகமம் 27:1-4
யோதாம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; சாதோக்கின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் எருசாள்.
அவன் தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் அவனைப்போலக் கர்த்தரின் ஆலயத்திற்குள் பிரவேசியாதிருந்தான்; ஜனங்கள் இன்னும் தங்களைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
அவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினதுமல்லாமல், ஓபேலின் மதிலின்மேல் அநேக கட்டடங்களையும் கட்டினான்.
யூதாவின் மலைகளிலே பட்டணங்களையும், காடுகளிலே கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினான்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் ராஜாவாகிய உசியாவின் குமாரன் யோதாம் தனது இருபத்தைந்தாம் வருஷத்தில் ராஜ்யபாரம் செய்ய தொடங்கி பதினாறு வருஷம் எருசலேமில் அரசாண்டான். அவன் தகப்பன் உசியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான். ஆனாலும் உசியாவை போல கர்த்தரின் ஆலயத்திற்குள் பிரவேசியாதிருந்தான். ஜனங்கள் இன்னும் தங்களை கெடுத்துக் கொண்டிருந்தார்கள். மேலும் அவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினதுமல்லாமல்,ஓபேலின் மலைகளின் மேல் அநேக கட்டடங்களையும் கட்டினான்.யூதாவின் மலைகளிலே பட்டணங்களையும், காடுகளிலே கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினான். மேற்கூறப்பட்ட வார்த்தைகள் திருஷ்டாந்தமாய்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதென்னவென்றால் கர்த்தர் எல்லா ஜனங்களையும் பட்ச பாதமில்லாமல் இரட்சிக்கிறவர் என்பதனை தெளிவுபடுத்துகிறார். இவ்விதமாக கர்த்தரால் நாம் பெற்றுக்கொண்ட இரட்சிப்பை பயன்படுத்தி, நமக்கு விரோதமாக எழும்புகிற அம்மோன் புத்திரரின் ராஜாவோடு யுத்தம் பண்ணி அவர்களை மேற்கொள்கிறவர்களாக இருக்க வேண்டும். அதென்னவனில் நாம் அம்மோனிய கிரியைகளாகிய பொல்லாத மாம்ச கிரியைகளை அழிப்போமானால்; கர்த்தருக்காய் நம்மை முழுமையும் காணிக்கையாக ஒப்புக்கொடுக்க முடியும். அவ்விதம் யோதாம் தன் வழிகளை தன் தேவனுக்கு நேராக்கினதினால் பலப்பட்டான். அதனைப்போல் நாமும் எப்போதும் நம்முடைய உள்ளத்தை கர்த்தருக்கு நேராக்கிக் கொள்வோமானால் நாம் பலப்படுவோம். யோதாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்த பின்பு, அவனை தாவீதின் நகரத்திலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய ஆகாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். நாமும் நம்மை எப்போதும் கர்த்தருக்கு நேராக்கி கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.