தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எரேமியா 3:22 

சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள்; உங்கள் சீர்கேடுகளைக் குணமாக்குவேன் என்றார். இதோ, உம்மிடத்தில் வருகிறோம்; நீரே எங்கள் தேவனாகிய கர்த்தர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்மை முதலில் சீர்படுத்தி விக்கிரகங்களுக்கு விலக்கி காத்துக்கொள்ள வேண்டும். 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்மை முழுமையும் எப்போதும் கர்த்தருக்கு நேராக்கிக் கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்,

IIநாளாகமம் 28:1-6 

ஆகாஸ் ராஜாவாகிறபோது இருபது வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; ஆனாலும் அவன், தன் தகப்பனாகிய தாவீதைப்போல், கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்யாமல்,

இஸ்ரவேல் ராஜாக்களின் வழிகளில் நடந்து, பாகால்களுக்கு வார்ப்பு விக்கிரகங்களைச் செய்தான்.

அவன் இன்னோம் குமாரரின் பள்ளத்தாக்கிலே தூபங்காட்டி, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே தன் குமாரரை அக்கினியிலே தகித்துப்போட்டு,

மேடைகளிலும், மலைகளிலும், பச்சையான சகல மரங்களின் கீழும் பலியிட்டுத் தூபங்காட்டி வந்தான்.

ஆகையால் அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனைச் சீரியருடைய ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் அவனை முறிய அடித்து, அவனுக்கு இருக்கிறவர்களிலே பெரிய கூட்டத்தைச் சிறைபிடித்துத் தமஸ்குவுக்குக் கொண்டுபோனார்கள்; அவன் இஸ்ரவேலுடைய ராஜாவின் கையிலும் ஒப்புக்கொடுக்கப்பட்டான்; இவன் அவனை வெகுவாய் முறிய அடித்தான்.

எப்படியெனில், யூதா மனுஷர் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டபடியினால், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா அவர்களில் ஒரேநாளில் லட்சத்திருபதினாயிரம்பேரைக் கொன்றுபோட்டான்; அவர்கள் எல்லாரும் மகா வீரராயிருந்தவர்கள்.

மேற்கூறபட்ட வசனங்களில்  யோதாம் குமாரனாகிய ஆகாஸ் தன்னுடைய இருபதாம் வயதில் ராஜாவாகி, பதினாறு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; ஆனாலும் அவன் தன் தகப்பனாகிய தாவீதைப் போல் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்தான்.  ஆனால் இஸ்ரவேல் ராஜாக்களின் வழிகளில் நடந்து, பாகால்களுக்கு வார்ப்பு விக்கிரகங்களை செய்தான்.  அவன் இன்னோம் குமாரரின் பள்ளதாக்கிலே தூபங் காட்டி, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே, தன் குமாரரை அக்கினியிலே தகித்துப் போட்டு, மேடைகளிலும், மலைகளிலும், பச்சையான சகல மரங்களின் கீழும் பலியிட்டு தூபங்காட்டி வந்தான்.  அவ்விதம் கர்த்தருக்கு பிரியமில்லாமல் விக்கிரங்களுக்கு  தூபங்காட்டி வந்ததால் கர்த்தர் அவனை சீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்தார்.  அவர்கள் அவனை முறியடித்து, அவனுக்கு இருக்கிறவர்களிலே பெரியக்கூட்டத்தை சிறைபிடித்து தமஸ்குவுக்கு கொண்டு போனார்கள்; அவன் இஸ்ரவேலுடைய ராஜாவின் கையில் ஒப்புக் கொடுக்கப்பட்டு,வெகுவாய் முறியடிக்கப்பட்டான்.  யூதா மனுஷர் கர்த்தரை விட்டபடியினால் ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா அவர்களில் இலட்சத்திருபதினாயிரம் பேரைக் கொன்று போட்டான்;  அவர்கள் எல்லாரும் மகா வீரராயிருந்தார்கள்.  பின்னும், 

IIநாளாகமம் 28:7, 8 

அன்றியும் எப்பிராயீமின் பராக்கிரமசாலியான சிக்ரியும், ராஜாவின் குமாரனாகிய மாசேயாவையும், அரமனைத் தலைவனாகிய அஸ்ரிக்காமையும், ராஜாவுக்கு இரண்டாவதான எல்க்கானாவையும் கொன்றுபோட்டான்.

இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரரில் இரண்டு லட்சம்பேராகிய ஸ்திரீகளையும் குமாரரையும் குமாரத்திகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய அநேக திரவியங்களைக் கொள்ளையிட்டு, கொள்ளைப்பொருளைச் சமாரியாவுக்குக் கொண்டுபோனார்கள்.

மேற்கூறபட்டிருக்கிற வசனங்களில் உள்ளபடி, அவர்களை சமாரியாவுக்கு கொண்டு போனார்கள், அங்கே ஓதேத் என்ற தீர்க்கதரிசி இருந்தான்.  அவன் அங்கு வந்த இஸ்ரவேல் சேனைக்கு எதிராக வந்து சொன்னது உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் யூதாவின் மேல் கோபங்கொண்டபடியினால், அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்.  நீங்களோ அவர்களை வானபரியந்தம் எட்டுகிற உக்கிரக கோபத்தோடே அவர்களை சங்காரம் பண்ணினீர்கள்.  பின்னும் அந்த தீர்க்கதரிசி சொன்னது, 

IIநாளாகமம் 28:10,11  

இப்போதும் யூதாவின் புத்திரரையும் எருசலேமியரையும் நீங்கள் உங்களுக்கு வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் கீழ்ப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறீர்கள்; ஆனாலும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான குற்றங்கள் உங்களிடத்திலும் இல்லையோ?

ஆதலால் நீங்கள் எனக்குச் செவிகொடுத்து, நீங்கள் உங்கள் சகோதரரிடத்தில் சிறைபிடித்துக்கொண்டுவந்தவர்களைத் திரும்ப அனுப்பிவிடுங்கள்; கர்த்தருடைய உக்கிரமான கோபம் உங்கள்மேல் இருக்கிறது என்றான்.

மேற்கூறபட்ட வசனங்களில், சகோதரர்களை சிறைபிடித்து சமாரியாவுக்கு கொண்டு வந்ததை கண்டு கர்த்தர் தீர்க்கதரிசி மூலம் சொன்னது யூதாவின் புத்திரரையும், எருசலேமியரையும் உங்கள் வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் கீழ்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள்; கர்த்தருக்கு விரோதமான குற்றங்கள் அவர்களிடத்திலும்  உள்ளதால் சிறைபிடித்துக் கொண்டு வந்தவர்களை திருப்பி அனுப்பி விட வேண்டும் என்றும்; கர்த்தருடைய உக்கிரக கோபம் அவர்களிடத்திலும் இருக்கிறதை சொல்லுகிறார்.  

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட கர்த்தரின் வார்த்தைகள் நமக்கு திருஷ்டாந்தத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.  என்னவென்றால் நாம் எவ்வளவு கர்த்தருக்குரிய செம்மையானவைகளை செய்தாலும், நம் உள்ளம் விக்கிரகங்களுக்கு இடம் கொடுக்குமானால் கர்த்தரின் கோபம் நம்மேல் வரும்.  அப்போது கர்த்தர் நம்மை சத்துருவின் கையில் ஒப்புக்கொடுப்பார்; அவ்விதம் ஒப்புக்கொடுத்தால், சத்துரு நம் ஆத்துமாவை சிறைபிடித்து தமஸ்குவாகிய அந்நிய ஆராதனைக்கு கொண்டு போகும்.  மேலும் நம் உள்ளம் பொல்லாப்புகளை செய்துக்கொண்டு, மற்றவர்களை நாம் குற்றப்படுத்துவோமானால் தேவன் அதனை விரும்புகிறவர் அல்ல. அப்படி நாம் செய்வோமானால் கர்த்தர் நம்மிடம் உக்கிரக கோபம் உள்ளவராக செயல்படுவார்.  ஆதலால் நாம் முதலில் நம்மை சீர்படுத்தி, பின்பு கர்த்தருக்குரிய காரியங்களை நாம் செய்தால் கர்த்தர் நம்மை ஏற்றுக்கொள்வார்.  ஆதலால் நம்முடைய ஆவி ஆத்தும சரீரம் கர்த்தருக்குரிய பிரியமானவைகளை செய்யும்படியாக ஒப்புக்கொடுப்போம்.  ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.