தேவனுக்கே மகிமையுண்டாவதாக
எபேசியர் 5 : 17
ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்மை துயரத்துக்கும், பழிப்புக்கும், திகைப்புக்கும் கர்த்தர் ஒப்புக்கொடாதபடி பாதுகாக்கப்பட வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளம் அந்நிய பலிபீடமாக இருக்கக்கூடாது என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்,
II நாளாகமம் 29:1-4
எசேக்கியா இருபத்தைந்தாம் வயதில் ராஜாவாகி, இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின்பேர் அபியாள்.
அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
அவன் தன் ராஜ்யபாரத்தின் முதலாம் வருஷம் முதலாம் மாதத்தில் கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்து, அவைகளைப் பழுதுபார்த்து,
ஆசாரியரையும் லேவியரையும் அழைத்துவந்து, அவர்களைக் கிழக்கு வீதியிலே கூடிவரச்செய்து,
மேற்கூறிய வசனங்களில் யூதாவின் ராஜாவாகிய ஆகாசின் குமாரனாகிய எசேக்கியா இருபத்தைந்தாம் வயதில் ராஜாவாகி, இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பெயர் அபியாள். அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதை செய்தான். அல்லாமலும் அவன் ராஜ்யபாரம் தொடங்கின முதலாம் வருஷம் முதல் மாதத்தில் கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளை திறந்து பழுது பார்த்து, ஆசாரியரையும், லேவியரையும் அழைத்து வத்து, அவர்களை கிழக்கு வீதியிலே கூடி வர செய்து, அவர்களிடம் சொன்னது,
II நாளாகமம் 29:5
அவர்களை நோக்கி: லேவியரே, கேளுங்கள்; நீங்கள் இப்போது உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொண்டு, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைப் பரிசுத்தம்பண்ணி அசுத்தமானதைப் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளியே கொண்டுபோங்கள்.
மேற்கூறிய வசனங்களில் உள்ளவைகளின் படியே பரிசுத்த ஆலயத்திலிருந்து, அசுத்தமானதை வெளியே கொண்டு போக வேண்டும் என்பது குறிப்பிடதக்கது. மேலும் நம்முடைய பிதாக்கள் துரோகம் பண்ணி, நம்முடைய தேவனாகிய கர்ததருக்கு பொல்லாப்பானதை செய்து, அவரை விட்டு விலகி, தங்கள் முகங்களைக் கர்த்தருடைய வாசஸ்தலத்தை விட்டு திருப்பி, அதற்கு முதுகு காட்டினார்கள். அவர்கள் இஸ்ரவேலின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலி செலுத்தாமலும், தூபங்காட்டாமலும், விளக்குகளை அணைத்துப்போட்டு மண்டபத்தின் கதவுகளையும் பூட்டிப் போட்டர்கள். ஆகையால் கர்த்தரின் கடுங் கோபம் யூதாவின் மேலும், எருசலேமின் மேலும் வந்து, அவர் இவர்களை, நீங்கள் உங்கள் கண்களால் காண்கிறபடி துயரத்துக்கும்,திகைப்புக்கும், பழிக்கும் ஒப்புக்கொடுத்தார்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கையில், கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தத்திற்கென்று விளக்கி காட்டியது என்னவென்றால் நம்முடைய பிதாக்கள் கர்த்தருக்கு விரோதமாக நடந்து, கர்த்தருக்கு செலுத்த வேண்டிய பலியை ஏற்ற நேரங்களில் செலுத்தாமல், ஆலயத்தின் வாசலை அடைத்து, கதவுகளை பூட்டி, தங்கள் முகங்களை கர்த்தருடைய வாசஸ்தலத்தை விட்டு மறைத்து முதுகு காட்டினதால் அவர்களை, துயரத்துக்கும், திகைப்புக்கும், பழிக்கும் அவர்கள் கண்கள் காணும்படி ஒப்புக்கொடுத்தார். இன்றைக்கு நம்மையே கர்த்தருடைய ஆலயமாக கர்த்தர் மாற்றி, அவர் மகிமையை நமக்கு தந்து, அவர் முகம் நம்மில் பிரகாசிக்க செய்திருக்கிறார். ஆதலால் நாம் ஒருபோதும் நம்முடைய இருதயம் அவரை பிரவேசிக்கக்கூடாதபடி அடைக்கக்கூடாது. எப்போதும் அவருடைய வார்த்தை நம்மில் கடந்து வரும்படியாக நம் இருதய கதவை கர்த்தருக்காய் திறக்க வேண்டும். மற்றும் ஆலயமாகிய நம் உள்ளத்திலுள்ள அசுத்தங்கள் எல்லாம் வெளியே ,மாற்றப்பட வேண்டும். அப்போது கர்த்தர் நம்மில் வந்து தங்கி, அவருடைய வாசஸ்தலமாக மாற்றுகிறார். அப்படியாக நாம் அவருடைய வாசஸ்தலமாக மாற்றும்போது, அவர் முகம் நம்மில் பிரகாசிக்கும். இப்படியாக நம் முன்னோர்களால் அடைக்கபட்ட ஆலயத்தில் வாசல் கதவுகளை நாம் திறக்கிறவர்களாயிருக்கிறோம். அப்போது நம் முன்னோர்களிடத்தில் கர்த்தருக்கு உண்டாயிருந்த கோபம், நம்மை தொடாதபடியும், துயரத்துக்கும் , பழிப்புக்கும், திகைப்புக்கும் நம்மை ஒப்புக்கொடாமல், நாம் கர்த்தரால் பாதுகாக்கப்படுகிறோம். இப்படியாக நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.