தேவனுக்கே மகிமையுண்டாவதாக
உபாகமம் 10:12-13
இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து,
நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.
கர்த்தருக்கு பயந்து நடக்கிறவர்கள் செழிப்பார்கள்:-
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் இஸ்ரவேலர் மிகுதியும் பலுகி பெருகுகிறதை நாம் தியானித்தோம். இஸ்ரவேல் சபை வளராமல் இருக்கும் படியாக எகிப்தின் ராஜா, சிப்பிராள், பூவாள் என்னும் பெயருடைய எபிரெய மருத்துவச்சிகளோடே பேசி :
யாத்திராகமம் 1:16-17
நீங்கள் எபிரெய ஸ்திரீகளுக்கு மருத்துவம் செய்யும்போது, அவர்கள் மணையின்மேல் உட்கார்ந்திருக்கையில், பார்த்து, ஆண்பிள்ளையானால் கொன்று போடுங்கள், பெண்பிள்ளையானால் உயிரோடிருக்கட்டும் என்றான்.
மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததினால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளையின் படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள்.
அதினால் எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைப்பித்து: நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்னவெ,ன்று கேட்டதற்கு, எபிரெய மருத்துவச்சிகள், பார்வோனிடம் எபிரெய ஸ்திரீகள் எகிப்திய ஸ்திரீகளைப்போல் அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடத்துக்குப் போகுமுன்னமே அவர்கள் பிரசவித்தாகும் என்றார்கள்.
இதினிமித்தம் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மை செய்தார். ஜனங்கள் பெருகி மிகுதியும் பலத்துப் போனார்கள்.
மருத்துவச்சிகள் தேவனுக்கு பயந்ததினால் அவர்கள் குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்.
இவ்விதமாக பார்வோன், சொன்ன காரியம் நடவாதபடியினால் ,பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் நதியிலே போட்டுவிடவும், பெண்பிள்ளைகளையெல்லாம் உயிரோடே வைக்கவும் தன் ஜனங்கள் எல்லோருக்கும் கட்டளையிட்டான்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இஸ்ரவேல் சபை உலகத்தில் உண்மையாக பெருக வேண்டுமானால், நாம் எல்லோரும் எபிரெய ஸ்திரீகளாக மாறவேண்டும். எபிரெயர் என்று சொல்வது யூத கோத்திரம் . இந்த கோத்திரம் இருந்துதான் இயேசு பிறந்தார் என்பது நமக்கு எல்லாம் தெரியும். இயேசு இவ்வுலகத்தில் பிறப்பதற்கு முன்பே, நம்முடைய தேவன் யூத கோத்திரத்தாரால் (எபிரெயர்) இஸ்ரவேலர் பலுகி பெருகுவார்கள் என்பதை முன் குறித்தே இதனை நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார்.
என்னவெனில் புறஜாதிகளாக இருந்த நம் ஒவ்வொருவரையும் யூதனாக மாற்றுகிறார் எப்படியெனில்,
ரோமர் 2:9-11
முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும்.
முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்.
தேவனிடத்தில் பட்சபாதமில்லை.
வேத வசனத்தின்படி நாம் பார்க்கும்போது எபிரெய மருத்துவச்சிகள், எபிரெய ஸ்திரீகளுக்கு மிகவும் நன்மை செய்ததை பார்க்கிறோம். பார்வோன் ,எபிரெய ஸ்திரீகளுக்கு பிறக்கும் ஆண் பிள்ளைகளை கொன்று போடுங்கள் என்று கட்டளையிட்ட போது அவர்கள் தேவனுக்கு பயந்து, எபிரெய ஸ்திரீகளுக்கு நன்மை செய்ததை பார்க்க முடிகிறது. அதனால் தேவன் மருத்துவச்சிகளின் குடும்பம் தழைக்கும் படி கிருபை செய்கிறார்.
மருத்துவச்சிகளை தேவன் எதற்கு உதாரணமாக கொண்டு வருகிறார் என்றால், தேவ தூதர்களுக்கு. ஏனென்றால் ஆண் பிள்ளைகள் என்று தேவன் நமக்கு எதைக் குறித்து இஸ்ரவேலர் நடுவில் திருஷ்டாந்தப்படுத்துகிறார் என்றால், நம்முடைய ஆத்துமா விசுவாசத்தில் உறுதியோடு நிலைத்திருந்தால் கிறிஸ்துவை பெற்றெடுத்த உள்ளம் உலகம், மாமிசம், பிசாசு இவற்றை ஜெயித்து தேவனோடு ஐக்கியத்தில் ஒருமைப்பட்டு ,உலக கவலைகளையெல்லாம் விட்டு தேவனோடு ஒருமித்து வாழ்தல் தான், ஜெயமெடுத்த தேவசபையாம் இஸ்ரவேலர். இவ்விதம் இஸ்ரவேலர் பெருகுவதற்கு காரணமாக இருந்தவர்கள் தான் ,எபிரெய மருத்துவச்சிகள் (தேவ தூதர்களுடைய நிழல்).
அதனால் நாம் எப்போதும் தேவசபையின் ஜனங்களுக்கு ஆத்துமா அறுப்புண்டு போகாதபடி, அந்த ஆத்துமா நன்மையில் தங்கியிருக்கும் படியாக ,சத்துரு விழுங்கி விடாதபடி நாம் எல்லோருக்கும்; கிறிஸ்துவுக்கு ஆதரவு கொடுத்தும் தேவ வசனத்தாலும், ஜெபத்தாலும் நாம் மிகவும் அவர்களை தாங்குகிறவர்களாக இருந்தால், நிச்சயமாகவே ,சத்துரு தோற்றுப் போவான். இஸ்ரவேல் சபை பெருகிக்கொண்டிருக்கும். இவற்றை தான் தேவன் நம்மிடத்தில் மிகவும் எதிர்பார்க்கிறார். ஒரு கிறிஸ்தவன் வாழ்வில் மிக முக்கியம், மற்ற ஆத்துமா இடறி போகாதபடி காத்துக் கொள்வது நம் மேல் தேவன் வைத்த கடமை நாம் எல்லோரும் இந்த காரியத்தில் ஒழுங்காக காணப்படவேண்டும்.
ரோமர் 2:12-15
எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத்தீர்ப்படைவார்கள்.
நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்.
அநேகம் பேர் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் ,நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். ஆனால்,
ரோமர்: 2:16
என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசு கிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.
ஆனால் இயேசு கிறிஸ்து, அந்தரங்கங்களை கொண்டு நியாயந்தீர்ப்பது என்ன என்று சொல்கிறாரென்றால் அநேகர் தங்கள் மனசாட்சியில் குற்றமுண்டு, குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினால், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.
அதனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனுஷருடைய அந்தரங்கங்களை குறித்து நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறார். அவ்வித நியாயத்தீர்ப்பு கொடுத்து தான் நம் உள்ளம் யூதனென்று பெயர் பெறும். இவ்விதம் தான் புறஜாதிகளாகிய நம்மை யூதனென்று (எபிரெயர்) என்று விளங்க செய்கிறார்.
ரோமர் 2:28-29
ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல.
உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது.
நம் உள்ளம் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும். நம்முடைய இருதயத்தின் நுனித்தோல் மாற்றப்பட வேண்டும். அப்போது தான் நியாயப்பிரமாணத்தின் கிரியைகள் நம் உள்ளத்தில் வெளிப்படும் அப்போது தான்,
ரோமர் 8:2,3
கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் ,என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.
அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.
இவையெல்லாம் ,நம் உள்ளத்தை நம் தேவனாகிய கர்த்தர் புறஜாதிகளின் கிரியைகளை மாற்றி, உள்ளான மனுஷன் யூதனாக மாற்றுகிறார். அதனால்,
ரோமர் 8:4
மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.
இவ்விதமான உள்ளம் தான் எபிரெய மருத்துவச்சிகளின் உள்ளம். அதனால் அவர்கள் பார்வோனுடைய கட்டளைக்கு கீழ்படியாமல் தேவனுக்கு பயந்து நடந்ததினால், இஸ்ரவேலர் பலுகி பெருகுவதற்கு காரணமாயிருந்தார்கள். நாமும் அவ்விதமே நம் உள்ளம் புது சிருஷ்டியாக மாற தேவனுக்கு ஒப்புக்கொடுப்போம். ஜெபிப்போம். கர்த்தர் யாரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை