தேவனுக்கே மகிமையுண்டாவதாக

லூக்கா 6 : 48 

ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக்கூடாமற்போயிற்று; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய அஸ்திபாரம் கன்மலையாகிய கிறிஸ்துவின் மேல் கட்டப்பட்டிருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் ஆலயமாக திடஅஸ்திபாரம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக தியானிப்பது என்னவென்றால் 

எஸ்றா 3:6 

ஏழாம் மாதம் முதல்தேதியில் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தத் தொடங்கினார்கள்; ஆனாலும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் இன்னும் போடப்படவில்லை.

மேற்கூறபட்ட வசனங்களில் உள்ளவர்கள் கர்த்தருக்கு பலிசெலுத்தும்படி பலிபீடம் கட்டி கர்த்தரை தொழுதார்கள். ஆனால் கர்த்தருடைய ஆலயம் எழும்புவதற்கு தடையாக, அவர் கற்பனைகள், கட்டளைகள் நியாயபிரமாணம் இவைகளால் உடன்படிக்கை பண்ணாமல் இருந்ததால் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் தங்களுக்கு பிறப்பித்த உத்தரவின் படியே

எஸ்றா 3:7

அப்பொழுது பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் தங்களுக்குப் பிறப்பித்த உத்தரவின்படியே அவர்கள் கல்தச்சருக்கும் தச்சருக்கும் பணத்தையும், லீபனோனிலிருந்து கேதுருமரங்களைச் சமுத்திரவழியாய் யோபாமட்டும் கொண்டுவரச் சீதோனியருக்கும் தீரியருக்கும் போஜனபானத்தையும் எண்ணெயையும் கொடுத்தார்கள்.

எஸ்றா 3:7 - ல் எழுதியுள்ளபடியே செய்தார்கள். அல்லாமலும் அவர்கள் தேவனுடைய ஆலயத்துக்கு வந்த இரண்டாம் வருடம், இரண்டாம் மாதத்திலே செயல்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், யோசதாக்கின் குமாரனான யெசுவாவும், மற்றுமுள்ள அவர்கள் சகோதரராகிய ஆசாரியரும், லேவியரும், சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கு வந்த அனைவரும், ஆரம்பஞ் செய்து இருபது வயது முதல் அதற்கு மேற்பட்ட லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை நடத்தும்படி வைத்தார்கள்.    மேற்குறிக்கப்பட்டவர்கள் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை நடத்தும்படி ஒருமனப்பட்டு நின்றார்கள்.  சிற்பாசாரிகள் கர்த்தருடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போடுகிறபோது கர்த்தரின் கட்டளைபடியே, கர்த்தரை துதிக்கும்படிக்கு, வஸ்திரங்கள் தரிக்கப்பட்டு, பூரிகைகளை ஊதுகிற ஆசாரியரையும், தாளங்களைக் கொட்டுகிற ஆசாபின் குமாரராகிய லேவியரையும் நிறுத்தினார்கள்.  அல்லாமலும் 

எஸ்றா 3:11

கர்த்தர் நல்லவர், இஸ்ரவேலின்மேல் அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைப் புகழ்ந்து துதிக்கையில், மாறிமாறிப் பாடினார்கள்; கர்த்தரைத் துதிக்கையில், ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்படுகிறதினிமித்தம் மகா கெம்பீரமாய் ஆரவாரித்தார்கள்.

எஸ்றா 3:11-ல் எழுதியிருக்கிறபடி மகா கெம்பீர சத்தமாய் கர்த்தரை புகழ்ந்து பாடி துதித்து ஆரவாரித்தார்கள். மேலும் 

எஸ்றா 3:12,13

முந்தின ஆலயத்தைக் கண்டிருந்த முதிர்வயதான ஆசாரியரிலும், லேவியரிலும், பிதாக்கள் வம்சங்களின் தலைவரிலும் அநேகர் இந்த ஆலயத்துக்குத் தங்கள் கண்களுக்கு முன்பாக அஸ்திபாரம் போடப்படுகிறதைக் கண்டபோது, மகா சத்தமிட்டு அழுதார்கள்; வேறே அநேகம்பேரோ கெம்பீர சந்தோஷமாய் ஆர்ப்பரித்தார்கள்.

ஜனங்கள் மகா கெம்பீரமாய் ஆர்ப்பரிக்கிறதினால் அவர்கள் சத்தம் வெகுதூரம் கேட்கப்பட்டது; ஆனாலும் சந்தோஷ ஆரவாரத்தின் சத்தம் இன்னதென்றும், ஜனங்களுடைய அழுகையின் சத்தம் இன்னதென்றும் பகுத்தறியக் கூடாதிருந்தது.

எஸ்றா 3:12,13 ல் எழுதியுள்ளபடி கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்படுகிறதை பிதாக்களின் தலைவரின் வம்சங்களில் அநேகர் கண்டபோது, மகா சத்தமிட்டு அழுதார்கள்; வேறே அநேகம் பேர் கெம்பீர சந்தோஷமாய் ஆர்ப்பரித்தார்கள்.  ஜனங்கள் மகா கெம்பீரமாய் ஆர்ப்பரிக்கிறதால் வெகு தூரம் சத்தம் கேட்கப்பட்டது; ஆனாலும் சந்தோஷ ஆரவாரத்தின் சத்தம் இன்னதென்றும், ஜனங்களுடைய அழுகையின் சத்தம் இன்னதென்றும் பகுத்தறியக்கூடாதிருந்தது.  

பிரியமானவர்களே, மேற்கூறியப்படி அநேகர் கர்த்தரின் சபைக்கு வந்து தங்களை கர்த்தருக்கு முன்பாக உடன்படிக்கையோடு ஒப்புக்கொடாதபடி, கர்த்தருக்கு பலிசெலுத்துவார்கள்.  அப்படிபட்டவர்களில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆலயமாக எழும்பாமல் இருக்கிறதால்; தேவன் அவர்களையெல்லாம் உடைத்து நொறுக்கி உருவாக்குகிறார்; அவர்கள் ஆத்துமாவை புதிய சிருஷ்டியாக்குகிறதால், மேற்குறிக்கப்பட்ட வயதிலுள்ளவர்கள் கர்த்தரின் ஆலயப்பணியை செய்ய கர்த்தர் அவர்களை ஊக்குவித்து வழிநடத்துகிறார். அவ்விதம் வழிநடத்தி வரும் போது கர்த்தர் மேல் பிரியமுள்ளவர்கள் எல்லாரும் ஒருமனப்பட்டு நிற்கும் போது, சிற்பசாரிகளாகிய (கர்த்தரின் வசனம்) நாம் கிறிஸ்துவின் மேல் அஸ்திபாரம் போடும்படியாக, கர்த்தரின் கட்டளைகளை நாம் ஏற்றுக்கொண்டு, அவரை துதிக்கும் துதியானது நம் உள்ளத்தில் புறப்படும்போது, நம் ஆத்துமாவிற்கு வஸ்திரமாகிய இரட்சிப்பை கர்த்தர் நமக்கு உடுத்துவிக்கிறார்.  பின்பு கிறிஸ்து நம்மில் ஆசாரியராக செயல்பட்டு எக்காளமாகிய தேவனுடைய வார்த்தை அவரிடத்திலிருந்து புறப்படும். அப்போது நாம் ஒவ்வொருவரும் கைத்தாளங்களோடு கர்த்தரை மகா கெம்பீர சத்தமாய் ஆர்பரிக்கும் போது, கிறிஸ்துவின் மேல் அஸ்திபாரம் போடுகிறோம்.  இந்த அஸ்திபாரம் கன்மலையின் மேல் போடப்படுகிறது. அல்லாமலும் பாவமாகிய மணலின் மேல் போடாமல்,  பரிசுத்தமான கர்த்தரின் வார்த்தைகளின் மேல் அஸ்திபாரம் போடுவோமானால் பெருவெள்ளம் அடித்து வந்தாலும், நாம் அசையாமல் கிறிஸ்துவில் நிலைத்திருப்போம்.  இப்படியாக நாம் கன்மலையாகிய கிறிஸ்துவின் மேல் அஸ்திபாரம் போடுகிறவர்களாக ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.