தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 101:8
அக்கிரமக்காரர் ஒருவரும் கர்த்தருடைய நகரத்தில் இராதபடி வேர் அறுப்புண்டுபோக, தேசத்திலுள்ள அக்கிரமக்காரர் யாவரையும் அதிகாலமே சங்கரிப்பேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் ஆலயத்திற்கு எதிராக வருகிற தடைகளை கிறிஸ்துவின் வல்லமையாகிய வசனத்தால் தகர்க்க வேண்டும்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் சத்துருவை ஜெயித்து கர்த்தரின் ஆலயமாகிய இரட்சிப்பை சுதந்தரிப்போம் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
எஸ்றா 5:1-2
அப்பொழுது ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் குமாரனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யூதருக்கு இஸ்ரவேல் தேவனின் நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
அப்பொழுது செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும் யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும் எழும்பி, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்டத்தொடங்கினார்கள்; அவர்களுக்குத் திடன்சொல்ல தேவனுடைய தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள்.
மேற்கூறிய வசனங்களில் ராஜாவாகிய அர்தசஷ்டாவின் நாட்களிலிருந்து பெர்சியாவின் ராஜாவாகிய தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் மட்டும் தேவாலயத்தின் வேலை தடை செய்யப்பட்டிருந்தது. அப்போது ஆகாய் தீர்க்கதரிசியும் இத்தோவின் குமாரனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும், எருசலேமிலுள்ள யூதருக்கும் இஸ்ரவேல் தேவனின் நாமத்துக்கும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். அப்போது செருபாபேலும் யெசுவாவும் எழும்பி எருசலேமிலுள்ள ஆலயத்தை கட்ட தொடங்கினார்கள்; அவர்களுக்கு திடன் சொல்ல தேவனுடைய தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள். அக்காலத்தில் நதிக்கு இப்புறத்திருக்கிற
எஸ்றா 5:3,4
அக்காலத்திலே நதிக்கு இப்புறத்தில் இருக்கிற நாடுகளுக்கு அதிபதியாகிய தத்னாய் என்பவனும், சேத்தார் பொஸ்னாயும், அவர்கள் வகையராவும் அவர்களிடத்துக்கு வந்து, இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டவன் யார் என்று அவர்களைக் கேட்டார்கள்.
அப்பொழுது அதற்கு ஏற்ற உத்தரவையும், இந்த மாளிகையைக் கட்டுகிற மனிதரின் நாமங்களையும் அவர்களுக்குச் சொன்னோம்.
மேற்கூறப்பட்டவர்கள் அவர்களிடம் கேட்டது ஆலயத்தை கட்டவும், மதிலை எடுப்பிக்கவும் கட்டளையிட்டது யார்? என்று கேட்கும் போது, அதற்கு ஏற்ற உத்தரவையும், இந்த மாளிகையைக் கட்டுகிற மனிதரின் நாமங்களையும் அவர்களுக்கு சொன்னர்கள். ஆனாலும் இந்த செய்தி தரியுக்கு எட்டும்வரைக்கும் இவர்கள் யூதருடைய வேலையை தடுக்காதபடிக்கு அவர்களுடைய தேவனின் கண் அவர்கள் மேல் வைக்கப்பட்டிருந்தது. அப்பொழுது அவர்கள் சொன்ன மறுமொழியை கடிதத்தில் எழுதியனுப்பினார்கள்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும்போது, நம்மில் அநேகர் இரட்சிப்பை தரித்துக் கொண்டு பரிசுத்தமான வாழ்க்கையும், அதனை முடிவு வரை காத்துக் கொள்ள வேண்டும் என்று எத்தனையோ முறை முயன்றும், சத்துரு பல உபாய தந்திரங்களை நமக்கு விரோதமாக செய்யும்போது கர்த்தரை நம்முடைய சூழ்நிலைக்கேற்றபடி விட்டுவிடுகிற நேரத்தை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். இப்படிதான் நம்மில் சத்துரு தடைப்போடுகிறான் என்பது முந்தின வார்த்தைகள் மூலம் கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார். ஆதலால் கர்த்தராகிய இயேசு நம் உள்ளத்தில் தீர்க்கதரிசியாகவும், சுவிசேஷகராகவும், அப்போஸ்தலராகவும், போதகராகவும் செயல்பட்டு, நமக்கு தருகிற அவருடைய திட வார்த்தைகளால் நம்மை உறுதிப்படுத்திக்கொண்டு இரட்சிப்பை சுதந்தரித்துக்கொள்கிறவர்களாகவும், முடிவு பரியந்தம் இரட்சிப்பை காத்துக்கொண்டவர்களாகவும் இருக்கும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.