தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 84:4 

உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள். (சேலா.)

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் முக்கியமாக கிறிஸ்துவின் சரீரமாக சபையில் உபவாசிக்கிறவர்களாகவும், ஜெபிக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும். 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் யாரும் அந்நிய ஜனத்தோடே கலவாமல் நம்மை காத்துக்கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

எஸ்றா 10:1

எஸ்றா இப்படி விண்ணப்பம்பண்ணி, அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்துக்கு முன்பாக தாழ விழுந்துகிடக்கையில், இஸ்ரவேல் புருஷரும் ஸ்திரீகளும் பிள்ளைகளுமான மகா பெரிய சபை அவனிடத்தில் வந்து கூடிற்று; ஜனங்கள் மிகவும் அழுதார்கள்.

மேற்கூறிய வசனங்களில் எஸ்றா கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணி அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்துக்கு முன்பாகத் தாழ விழுந்து கிடக்கையில், இஸ்ரவேலில் புருஷரும் பிள்ளைகளுமான மகா பெரிய சபை அவனிடத்தில் வந்துகூடி நின்று ஜனங்கள் மிகவும் அழுதார்கள்.  அப்பொழுது யெகியேலின் குமாரன் செக்கனியா எஸ்றாவை நோக்கி சொன்னது எஸ்றா 10:2-4 

அப்பொழுது ஏலாமின் புத்திரரில் ஒருவனாகிய யெகியேலின் குமாரன் செக்கனியா எஸ்றாவை நோக்கி: நாங்கள் தேசத்து ஜனங்களிலுள்ள அந்நிய ஸ்திரீகளைச் சேர்த்துகொண்டதினால், எங்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகிலும் இப்பொழுது இந்தக் காரியத்திலே இன்னும் இஸ்ரவேலுக்காக நம்பிக்கை உண்டு.

இப்பொழுதும் அந்த ஸ்திரீகள் எல்லாரையும், அவர்களிடத்தில் பிறந்தவர்களையும், என் ஆண்டவனுடைய ஆலோசனைக்கும், நமது தேவனுடைய கற்பனைக்கு நடுங்குகிறவர்களின் ஆலோசனைக்கும் ஏற்றபிரகாரம் அகற்றிப்போடுவோம் என்று நம்முடைய தேவனோடே உடன்படிக்கைப் பண்ணக்கடவோம்; நியாயப்பிரமாணத்தின்படியே செய்யப்படுவதாக,

எழுந்திரும்; இந்தக் காரியத்தை நடப்பிக்கிறது உமக்கு அடுத்தது; நாங்களும் உம்மோடேகூட இருப்போம்; நீர் திடன்கொண்டு இதைச் செய்யும் என்றான்.

மேற்கூறிய வார்த்தைகளை கேட்ட எஸ்றா எழுந்திருந்து 

எஸ்றா 10:5-6

அப்பொழுது எஸ்றா எழுந்திருந்து, ஆசாரியரிலும் லேவியரிலும் பிரதானமானவர்களும் இஸ்ரவேல் அனைவரும் இந்த வார்த்தையின்படி செய்யும்படிக்கு, அவர்களை ஆணையிடச்சொன்னான்; அவர்கள் ஆணையிட்டார்கள்.

அதின்பின்பு எஸ்றா தேவனுடைய ஆலயத்துக்கு முன்னிருந்து எழுந்து, எலியாசிபின் குமாரனாகிய யோகனானின் அறைக்குள் பிரவேசித்தான்; அங்கே வந்தபோது, அவன் சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினிமித்தம் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் துக்கித்துக்கொண்டிருந்தான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் எஸ்றா தேவனுடைய ஆலயத்துக்கு முன்னிருந்து எழுந்திருந்து எலியாசியின் குமாரனாகிய யோகனானின் அறைக்குள் பிரவேசித்தான்.  அங்கே வந்த போது சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினிமித்தம் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் துக்கித்துக் கொண்டிருந்தான்.  அப்போது எஸ்றா சொன்னது சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லாரும் எருசலேமிலே வந்து கூட வேண்டும் என்றும் மூன்று நாளைக்குள்ளே பிரபுக்கள் மூப்பர்களுடைய ஆலோசனையின்படியே எவனாகிலும் வராதேபோனால் அவனுடைய பொருளெல்லாம் ஜப்தி செய்யப்பட்டு, சிறையிருப்பிலிருந்து வந்த சபைக்கு அவன் புறம்பாக்கப்படுவான் என்றும், யூதாவிலும் விளம்பரம்பண்ணினார்கள். 

பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களில் நம்முடைய ஆத்துமா உலகமாகிய சிறையிருப்பிலிருந்து விடுதலையாகி வந்தால் கிறிஸ்துவாகிய எருசலேமில் நாம் யாவரும் சபையாக கூடி மூன்று நாள் கர்த்தரின் சந்நதியில் வந்து புசியாமலும், குடியாமலும் இருந்து கர்த்தரிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறவர்களாக இருக்க வேண்டும்.  மேலும் கர்த்தரின் சந்ததியில்  நாம் கூடி வராமல் இருந்தால் நம்முடைய பொருட்கள் சத்துருவால் சிறைப்படுத்தப்படுகிறது. ஆதலால் நாம் உபவாசத்தோடும், ஜெபத்தோடும் நம்மை காத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.