தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 7:4,5

இச்சக வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக,

ஞானத்தை நோக்கி, நீ என் சகோதரி என்றும், புத்தியைப்பார்த்து, நீ என் இனத்தாள் என்றும் சொல்வாயாக.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கு விலகி காத்துக் கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில்                              மணவாட்டி சபையாகிய நாம் முக்கியமாக கிறிஸ்துவின் சரீரமாக சபையில் உபவாசிக்கிறவர்களாகவும், ஜெபிக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

எஸ்றா 10:9-14 

அப்படியே யூதா பென்யமீன் கோத்திரத்தார் எல்லாரும் மூன்றுநாளைக்குள்ளே எருசலேமிலே கூடினார்கள்; அது ஒன்பதாம் மாதம் இருபதாந் தேதியாயிருந்தது; ஜனங்கள் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியிலே அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது ஆசாரியனாகிய எஸ்றா எழுந்திருந்து அவர்களை நோக்கி: நீங்கள் இஸ்ரவேலின்மேலிருக்கிற குற்றத்தை அதிகரிக்கப்பண்ண, மறு ஜாதியான ஸ்திரீகளை விவாகம்பண்ணினதினால் பாவஞ்செய்தீர்கள்.

இப்பொழுதும் நீங்கள் உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு, அவருடைய பிரியத்தின்படியே செய்து, தேசத்தின் ஜனங்களையும், மறுஜாதியான ஸ்திரீகளையும் விட்டு விலகுங்கள் என்றான்.

அப்பொழுது சபையார் யாவரும் மகா சத்தத்தோடே பிரதியுத்தரமாக: ஆம், நீர் சொன்ன வார்த்தைகளின்படியே செய்யவேண்டியதுதான்.

ஆனாலும் ஜனங்கள் திரளாயிருக்கிறார்கள், இது மாரிகாலமுமாயிருக்கிறது, இங்கே வெளியிலே நிற்க எங்களாலே கூடாது; இது ஒருநாள் இரண்டுநாள் வேலையல்ல; இந்தக் காரியத்திலே கட்டளை மீறினவர்களாகிய நாங்கள் அநேகர்.

ஆகையால் இதற்குச் சபையெங்கும் எங்கள் பிரபுக்கள் விசாரிப்புக்காரராக வைக்கப்படவேண்டும்; இந்தக் காரியத்தினிமித்தம் நம்முடைய தேவனுக்கு இருக்கிற உக்கிரகோபம் எங்களை விட்டுத் திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் மறுஜாதியான ஸ்திரீகளைக்கொண்ட அனைவரும் ஒவ்வொரு பட்டணத்தின் மூப்பரோடும் நியாயாதிபதிகளோடும் குறித்தகாலங்களில் வரக்கடவர்கள் என்றார்கள்.

மேற்கூறிய வசனங்களில் எஸ்றா சபையை கூடி வர சொன்னது போல் யூதா, பென்யமீன் கோத்திரத்தார் எல்லாரும் மூன்று நாளைக்குள்ளே எருசலேமில் கூடினார்கள்; அது ஒன்பதாம் மாதம் இருபதாம் தேதியாயிருந்தது, ஜனங்கள் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியிலே அந்த காரியத்தினாலும், அடைமழையினாலும் நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.ஆசாரியனாகிய எஸ்றா எழுந்திருந்து அவர்களை நோக்கி சொன்னது; இஸ்ரவேலின் மேல் குற்றத்தை அதிகரிக்கப் பண்ண மறுஜாதியான ஸ்திரீகளை விவாகம் பண்ணினதினால் பாவஞ் செய்தீர்கள்.  அதனால் அந்த ஸ்திரீகளை விட்டு விலகுங்கள் என்று சொன்னதும், சபையார் எல்லாரும் மகா சத்தத்தோடே பிரதியுத்தரமாக ஆம், நீர் சொன்னபடியே செய்ய வேண்டியது தான்.  ஆனாலும் திரளான ஜனங்கள் இருக்கிறார்கள்; இது மாரிகாலமாயிருக்கிறது.  வெளியில் நிற்க எங்களால் கூடாது; இது ஒரு நாள் இரண்டு நாள் வேலையல்ல; இந்த காரியத்திலே கட்டளை மீறினவர்கள் அநேகராயிக்கிறபடியால்  சபையெங்கும் எங்கள் பிரபுக்கள் விசாரிப்புக்காரராக வைக்கப்பட வேண்டும்; இந்த காரியத்தினிமித்தம் நம்முடைய தேவனுக்கு இருக்கிற உக்கிர கோபம் எங்களை விட்டு திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் மறுஜாதியான ஸ்திரீகளைக் கொண்ட அனைவரும், ஒவ்வொரு பட்டணத்தின மூப்பரோடும், நியாயாதிபதிகளோடும் குறித்த காலங்களில் வர கடவர்கள் என்றார்கள். மேலும் பிரியமானவர்களே, நம்முடைய குடும்பங்களில் விவாகம் செய்துக் கொண்டால் அந்நிய ஸ்திரீகளை விவாகம்  செய்யக்கூடாது என்று கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப்படுத்தியிருக்கிறார்.  என்னவென்றால் நம்முடைய உள்ளத்தில் பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டியை நாம் கிறிஸ்துவினால் பெற்றுக்கொள்கிறவர்களாக இருக்க வேண்டும்.  ஆனால் அதற்கு மாறாக இச்சக வார்த்தைகளை பேசும் அந்நிய ஸ்திரீயாகிய பரஸ்திரீ நம் உள்ளத்தில் இடம் பெறுவாளானால், கர்த்தர் நம்மிடத்தில் உக்கிரக கோபமுள்ளவராகுவார்.  அவ்விதம் காணப்பட்டால் நாம் கர்த்தரின் சந்நிதியில் காணப்படும்போது கர்த்தர் அடைமழையாகிய கோபாக்கினையை நம்மேல் ஊற்றுவார்.  அப்போது நாம் நடுங்கி நம்முடைய தேவனிடத்தில் பாவங்களை அறிக்கையிட்டு, கர்த்தர் நம்மை விசாரித்து அவர் கோபம் நம்மை விட்டு நீங்கும் வரை கர்த்தரிடத்தில் பற்றிக்கொண்டு அவர் கற்பனைகளுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்படிந்து அவர் பாதம் பணிந்து நம்மை ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.