தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ரோமர் 9:16

ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

 நம் ஆத்மா பார்வோனிடத்திலிருந்து காக்கபடுத்தல்:- திருஷ்டாந்தம்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் ,கர்த்தருக்கு பயந்து நடக்கிறவர்கள் செழிப்படைவார்கள் என்றும், நம் உள்ளம் புது சிருஷ்டியாக மாற வேண்டும் என்றும் தியானித்தோம். அவ்விதமாக இருப்போமானால் இஸ்ரவேல் சபை வளர்ந்து பலுகி பெருகும் என்பது நமக்கு வேத வசனத்தில் கூட நமக்குத் தெளிவுப்படுத்துகிறது.

அல்லாமலும் எபிரெய மருத்துவச்சிகள், எபிரெய குழந்தைகளை பார்வோன் கையில் ஒப்புக்கொடாதபடி காத்துக் கொள்கிறதை நாம் பார்த்தோம். அதேபோல் நம் உள்ளத்தில் ஒரு புதிய சாயல் தோன்ற வேண்டும் என்று எல்லோரும் தேவனிடத்தில் பயபக்தியாய் காணப்படுவோம்.

மேலும் பார்வோன் இட்ட கட்டளை பிரகாரம் எபிரெய மருத்துவச்சிகள் செய்யாமல் ஆண் பிள்ளைகளை காத்ததால் ,பின்பு பார்வோன் ,பிறக்கும் ஆண் பிள்ளைகளையெல்லாம் நதியில் போட்டு விடவும். பெண் பிள்ளைகளையெல்லாம் உயிரோடே வைக்கவும் தன் ஜனங்கள் எல்லோருக்கும் கட்டளையிட்டான்.

ஆனால் ,எகிப்தில் லேவியின் குடும்பத்தாரில் ஒருவன் லேவியின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம் பண்ணினான். அந்த ஸ்திரீ கர்ப்பவதியாகி ஒரு ஆண் பிள்ளையை பெற்று அது அழகுள்ளது என்று கண்டு, மூன்று மாதம் ஒளித்து வைத்தாள்.

அவள் அதை அப்புறம் ஒளித்து வைக்க கூடாமல் ஒரு நாணற் பெட்டியை எடுத்து அதற்குப் பிசினும் கீலும் பூசி அதிலே பிள்ளையை வளர்த்தி நதியோரமாய் நானலுக்குள்ளே வைத்தாள். அதற்கு என்ன சம்பவிக்கும் என்பதை அறியும்படி அதின் தமக்கை தூரத்தில் நின்று கொண்டிருந்தாள்.

பிரியமானவர்களே, இதனை நாம் வாசிக்கும்போது உலக கதையை போல் வாசித்து விடாதபடி நம் உள்ளத்தில் வருகிற புதிய மாற்றம் எப்படி தோன்றுகிறது ,அந்த தோன்றுதலை வளரவிடாமல் பார்வோன் (உலக ஆவி, சத்துரு) தந்திரம் செய்கிறதையும் அதை தேவன் தம்முடைய தூதர்களை வைத்து பாதுகாத்து கொள்வதையும், அந்த ஆத்துமா நன்மையை பூமியில் வந்து புசித்து வளர விடாதபடி ,பெருக விடாதபடி கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டவுடனே அந்த ஆத்துமா ஜெயம் எடுக்காதபடி உத்தரவிடுகிறதையும், பெண் பிள்ளைகள் என்றால் பலவீனர்கள், பலவீனர்கள் வளரட்டும் என்று விட்டுவிடுகிறதையும்  பலவீனர்களை தாங்குகிற பலமுள்ளவர்களை (ஆண் பிள்ளைகளை) அழிக்கவும் கட்டளையிடுகிறதை பார்க்கிறோம்.

ஆனால் லேவி குடும்பத்தாருக்கு, கர்த்தர் ஏற்கனவே ஆசாரிய பட்த்தை அவர்களுக்கு சுதந்தரமாக கொடுத்திருந்தார். அதே லேவி கோத்திரத்தில் பிறந்த மோசே என்ற குழந்தை நாணற் பெட்டியில் வைத்து, நாணலுக்குள்ளே  பாதுகாக்கப்படுகிறதை பார்க்கிறோம்.

குழந்தையை மோசேயினுடைய தமக்கை துரத்தில் நின்று நாணற் பெட்டியில் வைக்கப்பட்ட குழந்தைக்கு என்ன சம்பவிக்குமோ என்று பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

யாத்திராகமம் 2:5-6

அப்பொழுது பார்வோனுடைய குமாரத்தி நதியில் ஸ்நானம்பண்ண வந்தாள். அவளுடைய தாதிகள் நதியோரத்தில் உலாவினார்கள்; அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன் தாதியை அனுப்பி அதைக் கொண்டு வரும்படி செய்தாள்.

அதைத் திறந்தபோது பிள்ளையைக் கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று, இது எபிரெயர் பிள்ளைகளில் ஒன்று என்றாள்.

அப்பொழுது அதின் தமக்கை பார்வோனின் குமாரத்தியை நோக்கி: உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி எபிரெய ஸ்திரீகளில் பால் கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா என்றாள்.

அதற்குப் பார்வோனுடைய குமாரத்தி: அழைத்துக்கொண்டு வா ,என்றாள். இந்தப்பெண் போய்ப் பிள்ளையின் தாயையே அழைத்துக்கொண்டு வந்தாள்.

இதிலிருந்து நமக்கு தெரியவருவது என்னவென்றால் கர்த்தர் நியமித்தவர்களை யாராலும் எந்த பலவானாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதை தேவன் நமக்கு விளக்கிக் காட்டுகிறார்.

மேலும் பார்வோனின் குமாரத்தியினிடத்தில் அந்த குழந்தை இரக்கம் கிடைக்கிறது என்றால் அது தேவனால் மாத்திரமே சம்பவிக்கும் என்று நமக்கு தேவன் தெளிவுபடுத்துகிறார். நம்முடைய ஆத்துமா காக்கப்பட வேண்டுமானால் தேவனுடைய கண்களில் நமக்கு இரக்கம் கிடைக்கவேண்டும். அப்படியே தான் மோசேக்கு கிடைத்தது. ஏனென்றால் இஸ்ரவேல் மீட்கப்பட வேண்டும் என்று தேவசித்தம் இருந்ததால் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய கட்டளையை தேவன் உடைத்து விடுகிறார். பிரியமானவர்களே, நம்முடைய ஆத்துமா வளர்ச்சிக்காக இவ்விதமாக தேவனுடைய இரக்கத்துக்காக நாம் காத்திருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். அதுதான்,

யாத்திராகமம் 33:19

அதற்கு அவர்: என்னுடைய தயையை எல்லாம் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணி, கர்த்தருடைய நாமத்தை உனக்கு முன்பாகக் கூறுவேன்; எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் கிருபையாயிருப்பேன்; எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன் என்று சொல்லி,

இவ்விதமாய் யார் மேல் சித்தமுள்ளவராக இரக்கம் காட்டுகிறாரோ அவர்கள் நித்திய ஜீவனை பெற்று, முடிவில் ஆசீர்வாதம் பெறுவார்கள். அதனால் நாம் யாவரும் இரக்கத்துக்கு காத்திருக்க வேண்டும். அதை தான்,

நீதிமொழிகள் 16:15

ராஜாவின் முகக்களையில் ஜீவன் உண்டு; அவனுடைய தயை பின்மாரி பெய்யும் மேகத்தைப்போல் இருக்கும்.

ஆனபடியினாலே மோசேயை தன் தாயின் பாலைக் கொடுத்து (எபிரெய ஸ்திரீ) வளர்க்கும் படியாகவே கிருபை செய்கிறார். தாயின் பால் என்பது தேவனுடைய வசனம். ஆனால் எகிப்தின் தாயினிடத்தில் தேவன் அனுப்ப வில்லை. குழந்தை எபிரெய குழந்தை. அதே இனத்தின் பாலாகிய எபிரெய ஸ்திரீ, ஆனால் சொந்த தாயாக காணப்படுகிறதை நாம் வாசிக்க முடிகிறது.

பிரியமானவர்களே ,மோசேயை தேவன் நம் ஆத்மாவில் கிறிஸ்துவின் ராஜ்யம் வருவதற்காக திருஷ்டாந்தப்படுத்தி காட்டுகிறார். நம்முடைய தாயாக கிறிஸ்துவை தேவன் நமக்கு தந்திருக்கிறார். அவருடைய களங்கமில்லாத ஞானப்பாலின் மேல் நாம் வாஞ்சையும் கவனமாயிருப்போமானால், நம்முடைய ஆத்துமா வாழ்ந்து சுகமாயிருக்கும். மேலும் தேவன் நம்முடைய ஆத்துமாவில்  மணவாளனாக களிகூர்ந்து மகிழுவார். எவ்வித எதிர் வல்லமைகளோ நம்மை ஒன்றும் சேதப்படுத்தமாட்டாது. அதை தான்,                                                                    

I பேதுரு: 2:3                                                                                                                      

நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள். இப்படியிருப்போமானால் பரிசுத்த ஆசாரிய கூட்டமாய் கூட்டி கட்டப்பட்டு வருவோம். இதைத்தான் தேவன் நமக்கு மோசேயை காட்டி திருஷ்டாந்தப் படுத்துகிறார்.

மேலும் குழந்தையாகிய மோசேயை  நாணற்பெட்டியில் வைத்து, நதியோரத்தில் வைத்ததை தேவன் நமக்கு எடுத்துக் காட்டுவது என்னவென்றால் எகிப்தில் ஓடுகிற நதி எகிப்தின் நதி (சீகோரின் தண்ணீர்) உலக கிரியைகளை காட்டுகிறது.

ஏதேன் தோட்டத்திலிருந்து ஒரு நதி ஓடி,அங்கேயிருந்து நாலு பெரிய ஆறுகளாக பிரிகிறது. நாலாம் ஆறு ஐப்பிராத்து. ஐப்பிராத்து நதி பிசாசின் கிரியை, உலக பெருமை  இவற்றை காட்டுகிறது. அதனால் கர்த்தர் எரேமியாவிடத்தில் சொல்கிறார் ஒரு சானல் கச்சையை வாங்கி அரையில் கட்டிக்கொள் தண்ணீரில் படவொட்டாதே என்று சொல்கிறார். அவன் அவ்விதமே செய்து ஐப்பிராத்து நதியோரத்தில் ஒரு கன்மலையின் வெடிப்பிலே அதை ஐபிராத்து நதியின் ஒரத்தில், தேவன் சொன்னது போல் ஒளித்து வைத்தான்.

பின்பு ஒளித்து வைத்த கச்சையை தோண்டி எடுத்து பார்க்கும் போது ஒன்றுக்கும் உதவாமற் போயிற்று.

பின்பு கர்த்தர் சொல்லுகிறார் இவ்விதமே யூதாவுடைய பெருமையையும்,

எருசலேமுடைய மிகுந்த பெருமையும் கெட்டு போக பண்ணுவேன் என்கிறார்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய காரியம் என்னவென்றால், எகிப்து நதி (சீகோரின் தண்ணீர்) பொல்லாங்கானுடைய கிரியைகள். இந்த தண்ணீரில் விழுந்து விடாதபடி மோசே நாணற்பெட்டியில் பிசினும், கீலும் பூசி பாதுகாப்போடு நதியோரத்தில் வைக்கப்பட்டிருக்கிறதை நாம் பார்க்கிறோம்.

இதன் பொருள் என்னவெனில் நம் ஆத்துமா உலகமாகிய பொல்லாங்கானுக்குள் விழுந்து விடாதபடி நம்மை பாதுகாக்கும் படியாக தேவன், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அபிஷேகம் பண்ணியிருக்கிறார்.

அந்த அபிஷேகம் பண்ணினவருக்குள் நாம் மறைந்து பாதுகாப்பாக காணப்பட வேண்டும். அந்த பாதுகாப்பில் நாம் இருக்கும்போது தேவன் நமக்கு அன்றன்றுள்ள ஆகாரமாகிய தேவ வசனத்தை தந்து தேவன் நம்மை வளர்த்துவார்.

இவ்விதமாக பிரியமானவர்களே நம் ஆத்துமா அபிஷேகம் பண்ணப்பட்டவரால் காக்கபடுகிறது. ஜெபிப்போம். கர்த்தர் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.