தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 90:15

தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும், எங்களை மகிழ்ச்சியாக்கும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

 உலக இன்பங்களை விட்டு கிறிஸ்துவினோடு ஐக்கியப்படுதல்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே முந்தின நாளில், சண்டைப்பண்ணுதல் நமக்கு உரியதல்ல என்பதை பற்றிய கருத்துக்களை நாம் தியானித்தோம். மோசே அநியாயம் செய்கிற எபிரெயனை கண்டிக்கும் போது ,எபிரெயன் கீழ்ப்படியாமல் மறுத்து பேசுகிறான். அதனால் மோசே எகிப்தியனை கொன்று போட்ட செய்தியை பார்வோன் அறிந்து, மோசேயை கொலை செய்ய தேடுகிறான், என்பதை அறிந்த மோசே பார்வோனிடத்திலிருந்து  தப்பியோடி மீதியான் தேசத்து ஒரு துரவண்டையில் வந்து உட்கார்ந்து இருப்பதை பார்த்தோம். அதைத்தான்,

நீதிமொழிகள் 9:8

பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான்.

எப்படியெனில் இரட்சிக்கப்பட்ட அநேகம் பேர் தங்கள் வாழ்வின் முந்தின கிரியைகளை விட்டு விடமாட்டார்கள். பேலியாளின் மக்களைப் போல, சண்டை பண்ணிக்கொண்டிருப்பார்கள். மேலும், சண்டையை கிளப்பி கொண்டிருப்பார்கள்.

இவர்கள் தான் பரியாசக்காரர்கள் தேவனுக்கு கீழ்ப்படியாதவர்கள்.

யூதா 1:19

இவர்கள் பிரிந்து போகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே.

பிரியமானவர்களே நாம் ஒரு போதும் இவ்வித எண்ணம் உடையவர்களாக இருக்க கூடாது. எப்போதும் நாம் கடிந்துக்கொள்ளுதலை ஏற்றுக் கொண்டு, நம்மை  தாழ்மைப்படுத்தி ,நம்மையே நாம் சோதித்து பார்த்து, சீர்திருத்தி கொள்வோமானால் நமக்கு மிகுந்த சந்தோஷம், சமாதானம் கிடைக்கும். நித்திய பேரின்ப வாழ்க்கையிலும் பிரவேசிக்க முடியும்.

இப்போதே நம்மை தேவ சமூகத்தில் ஒப்புக் கொடுப்போம் .

நீதிமொழிகள் 14:6

பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடியான்; புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய் வரும்.

நீதிமொழிகள் 15:31-33

ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்தே தங்கும்.

புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்.

கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.

நம்மை தேவ ஞானத்தால் ஒருவர் கடிந்து கொள்ளும் போது ,தாழ்மை மனப்பான்மையுடன் நாம் ஏற்றுக் கொள்வோமானால், நாமும் ஞானமடைந்து ஞானத்தில் தேறி வர முடியும். அப்போது கர்த்தருக்கு பயப்படுதல் நம்மிடம் உண்டாகும். நம்முடைய வாழ்க்கையில் மேன்மை உண்டாகும் (பரலோக மேன்மை)

மேலும்  மோசே மீதியான் தேசத்தில் போய் தங்கி, துரவண்டையில் உட்கார்ந்திருக்கும் போது, மீதியானியர் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு குமாரத்திகள், அவர்கள் தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டும்படிக்கு அங்கே வந்து தண்ணீர் மொண்டு, தொட்டிகளை நிரப்பினார்கள்.

ஆனால் அங்குள்ள மேய்ப்பர்கள் அவர்களை துரத்தவும், மோசேழுந்திருந்து அவர்களுக்கு துணை நின்று, அவர்களுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான்.

அவர்கள் தங்கள் தகப்பனாகிய ரெகுவேலினிடத்தில் வந்த போது, தகப்பன் அவர்களிடம் இத்தனை சீக்கிரமாய் வந்தது என்ன என்று கேட்க, அவர்கள் எகிப்தியன் ஒருவன் மேய்ப்பர்களின் கைக்கு எங்களை தப்புவித்து எங்களுக்கு தண்ணீர் மொண்டு கொடுத்து, ஆடுகளுக்கும் தண்ணீர் காட்டினான் என்றார்கள்.

அப்பொழுது அவர்கள் தகப்பனாகிய ரெகுவேல் அந்த மனிதனை நீங்கள் விட்டு வந்தது என்ன? போஜனம் பண்ணும்படிக்கு அழைத்து வாருங்கள் என்றான்.

மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்க சம்மதித்தான். அவன் சிப்போராள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்கு கொடுத்தான். அவள் ஒரு குமாரனைப் பெற்றாள்.

  நான் அந்நிய தேசத்திலே பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி அவனுக்கு கெர்சோம் என்று பேரிட்டான்.

 யோசேப்பின்  சகோதரர்கள் தான் யோசேப்பை குழியிலிருந்தெடுத்து இஸ்மவேலர்கள் கையில் விற்றவர்கள்.

இந்த மீதியானியர் தேசத்தில் தான் மோசே பார்வோனுக்கு தப்பி வந்து தங்கியிருக்கிறான். அப்போது அங்கு துரவண்டையிருக்கிறதை பார்க்கிறோம். துரவண்டை என்றால் தண்ணீர் எடுக்கும் இடம் ,இது சபையை காட்டுகிறது. தண்ணீர் எடுக்க வந்தது மீதியானியர் தேசத்து ஆசாரியனுடைய குமாரத்திகள். கர்த்தர் மீதியானியாகிய சிப்போராள் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கிறார். இவர்கள் (மீதியானியர்) இஸ்ரவேலர் அல்ல, என்பது தெரியவருகிறது. இது இஸ்ரவேலருடைய துரவு அல்ல, மீதியானியருடைய துரவு. ஆனால் மீதியானியராகிய மேய்ப்பர்கள், மீதியானிய ஆசாரியருடைய குமாரத்திகளுக்கு தண்ணீர் கொடுக்காதபடி துரத்துகிறதை பார்க்கிறோம்.‌ ஆனால் மோசே அங்கு உதவி செய்து, அந்த வீட்டிலுள்ள ஒருவனாக மாறுகிறான். இப்போது எகிப்தில் இருந்த மோசே எங்கு வந்தான் என்றால் மீதியானியரிடத்தில்,

மோசே தனக்கு ஒரு குமாரன் பிறந்தவுடனே நான் அந்நியனும் பரதேசியும்  என்று சொல்லி அவனுக்கு கெர்சோம் என்று பெயரிட்டான் என்றால் இரட்சிக்கபடாத ஒரு அனுபவத்தை காட்டுகிறது.

சிலகாலம் சென்ற பின்பு எகிப்தின் ராஜா மரித்தான். இஸ்ரவேல் புத்திரர்

அடிமைத்தனத்தினால் தவித்து முறையிட்டு க் கொண்டிருந்தது தேவ சந்நிதியில் வந்து எட்டினது.

யாத்திராகமம் 2:24

தேவன் அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார்.

கர்த்தர் யோசேப்பையும் மீதியானியர் கையில் ஒப்புக் கொடுக்கிறார். எப்படியெனில் சகோதரர்களால் குழியில் இட்டு, பின்பு குழியிலிருந்து தூக்கி அவர்கள் இஸ்மவேலருக்கு விற்று, இஸ்மவேலரால் எகிப்து கொண்டு செல்லப்படுகிறான். ஆனால் தேவன் ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் படியாக ,யோசேப்பை எகிப்துக்கு  முதலில் அனுப்பி, பின் இஸ்ரவேலின் பதினொரு கோத்திர பிதாக்களும், யாக்கோபும் (இஸ்ரவேலும்) யோசேப்பு மூலம் அவர்கள் ஜீவனை காத்து ,அந்த கோத்திரங்களாகிய லேவி கோத்திரங்களில் கர்த்தர் ஒரு மோசேயை எழுப்பி ,அவனையும் யோசேப்பை போல் பார்வோனின் அடிமையில் கொடுத்து பின்  பார்வோனின் சகல சாஸ்திரங்களையும் கற்று கொண்டவனாக, வாக்கிலும், செய்கையிலும் வல்லவனானான் .அதற்கு பின் சில முகாந்தரங்களை ஒருக்கி தேவன் அவனை மீதியானியரிடத்திற்கு கொண்டு வந்து, மீதியானியரிடத்தில் வைத்து தான் தேவன் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து மீட்டெடுக்கும் படியாக அழைக்கிறார்.

அவ்விதமாக மோசேயும் தேவனுடைய தெரிந்தெடுப்பு இருப்பதால், பார்வோனுடைய அரண்மனையில் வளர்க்கப்பட்டு பெரிதான போதிலும் அந்த இன்பங்களை எல்லாம் விட்டு,

எபிரெயர் 11:24-27

விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து,

அநித்தியமான பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு,

இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்.

விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்.

அன்பானவர்களே, இவற்றையெல்லாம் தேவன் எதற்காக திருஷ்டாந்தபடுத்துகிறார் என்றால், நம் ஆத்துமாவிலே எத்தனை உலக சந்தோசங்கள் இருந்தாலும் அது அநித்தியமானது, பிரயோஜனமில்லாதது, உறுதியில்லாதது, நிலையில்லாதது என்பதை  தேவன் நமக்கு மோசேயை வைத்து திருஷ்டாந்தப்படுத்தி நம் ஆத்தும உலகமாகிய பாவத்தின் அடிமையில் இருந்தால் அந்த இன்பங்களை எல்லாம் விட்டு எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் கிறிஸ்துவில் ஐக்கியப்பட்டால் நமக்கு நித்திய பேரின்பம் பெற்றுக்கொள்ளமுடியும்.

சத்துருவின் கரத்திலிருந்து விடுதலை பெற்று, நித்திய ஜீவனை சுதந்தரிக்கும் படியாகவே தேவன் இஸ்ரவேலின் ஒடுக்குதலில் கண்ணோக்கி பார்த்து அவர்களை நினைவு கூருகிறார் .தேவன் நம்மை  நினைத்தால் நமக்கு விடுதலை. யாவரும் இந்த விடுதலையை சுதந்தரிப்போம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தராளமாய் ஆசீர்வதிப்பார். 


-தொடர்ச்சி நாளை.