தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 5:8 

உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலைக் கிட்டிச் சேராதே.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் ஒருபோதும் அந்நிய ஸ்திரீ (உலக சபை) யின் மேல் மயங்க கூடாது

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தர் வழிகாட்டுகிற பாதையில் நடப்போம், சபையாம் ஜனங்களையும் நல்ல பாதையில் நடத்த வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோபு 31:9- 15

என் மனம் யாதொரு ஸ்திரீயின்மேல் மயங்கி, அயலானுடைய வாசலை நான் எட்டிப்பார்த்ததுண்டானால்,

அப்பொழுது என் மனைவி வேறொருவனுக்கு மாவரைப்பாளாக; வேற்றுமனிதர் அவள்மேல் சாய்வார்களாக.

அது தோஷம், அது நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படும் அக்கிரமமாமே.

அது பாதாளபரியந்தம் பட்சிக்கும் அக்கினியாய் என் சம்பத்தையெல்லாம் நிர்மூலமாக்கும்.

என் வேலைக்காரனானாலும், என் வேலைக்காரியானாலும், என்னோடு வழக்காடும்போது, அவர்கள் நியாயத்தை நான் அசட்டைபண்ணியிருந்தால்,

தேவன் எழும்பும்போது, நான் என்ன செய்வேன்; அவர் விசாரிக்கும்போது, நான் அவருக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்.

தாயின் கர்ப்பத்தில் என்னை உண்டுபண்ணினவர் அவனையும் உண்டுபண்ணினார் அல்லவோ? ஒரேவிதமான கர்ப்பத்திலே எங்களை உருவாக்கினார் அல்லவோ?

மேற்கூறபட்ட வசனங்களில் அவன் வேறொரு ஸ்திரீயின் மேல் மயங்கி திரியவில்லை, வேறொரு வாசலை தான் போய் எட்டிபார்க்கவில்லை என்கிறான் அப்படி செய்திருந்தால் தன்னுடைய மனைவி வேறொருவனுக்கு மாவரைப்பாளாக; வேற்று மனிதர் அவள் மேல் சாய்வார்களாக என்கிறான்.  இந்த காரியம் மிகவும் தோஷம் செய்யும் என்றும்; இது நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படும் அக்கிரமமே என்கிறான். மேலும் அவன் சொன்னது அது பாதாளபரியந்தம் பட்சிக்கும் அக்கினியாய் என் சம்பத்தையெல்லாம் நிர்மூலமாக்கும்.  என் வேலைக்காரனானாலும், என் வேலைக்காரியானாலும் என்னோடு வழக்காடும் போது, அவர்களுடய நியாயத்தை

அசட்டைபண்ணவில்லை.  அவ்வாறு அசட்டை பண்ணியிருந்தால் தேவன் எழும்பும் போது நான் ஒன்றும் செய்யமுடியாது என்றும்; அவர் விசாரிக்கும் போது, நான் தேவனுக்கு என்ன மறு உத்தரவு சொல்லுவேன் என்றும்; என்னை தாயின் கர்ப்பத்தில் உண்டுபண்ணினவர் அவர்களையும் அதேபோல ஒரேவிதமான கர்ப்பத்தில் உருவாக்கினார் அல்லவோ என்று தன்னுடைய  உபதேசத்தை சொல்லுகிறதை வாசிக்க முடிகிறது.  

பிரியமானவர்களே, மேற்கூறிய பகுதிகள் தேவன் நமக்கு திருஷ்டாந்தத்திற்கென்று விளக்கி காட்டுகிறார்.  என்னவென்றால் யோபு சொல்வது தான் தேவனுடைய உபதேசத்தை விட்டு வேறொரு சத்தியமில்லாத சபையில் தான் மயங்க வில்லை என்றும், அந்த அயலானுடைய வாசலைப்போலும் எட்டிப்பார்க்கவில்லை என்றும், அப்படியிருந்தால் என் ஆத்துமா வேறொருவனுக்கு இணைந்து போகும் என்றும்; அவ்விதமாக இருந்தால் அது எனக்கு தோஷம் என்றும்; அப்போது அது நியாயாதிபதிகளால்  விசாரிக்கபடும் அக்கிரமம் என்று கூறுகிறான்.  மேலும் அவன் சொன்னது அப்படிபட்ட காரியம் இருந்தால் அது பாதாள பரியந்தம் பட்சிக்கும் அக்கினியாய் என் சம்பத்தையெல்லாம் நிர்மூலம் பண்ணும்.  அல்லாமலும் யாரையும் அற்பமாக எண்ணவில்லை என்றும் கூறுகிறான்.  தான் தாயின் வயிற்றில் உண்டானது போல் தான் வேலைக்காரர்களும் வேலைக்காரிகளையும் கர்த்தர் உருவாக்கினதால், என்னோடு வழக்காட வந்தவர்களின் நியாயத்தை அசட்டைப்பண்ணவில்லை.  

பிரியமானவர்களே, மேற்கூறபட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது கர்த்தரின் சத்தியம் உரைக்கப்படாத எந்த அந்நிய (பரஸ்திரீயின்) சபையின் மேல் மயங்கி திரியக்கூடாது என்பதும்,  அவள் வாசலை கிட்டி சேர கூடாது என்பதும் தேவன் நமக்கு உரைக்கிற கட்டளை.  மேலும் கர்த்தரின் ஊழியக்காரர்கள் நம்மோடு வழக்காடும் போது அவர்களை எந்த நிலையிலும் அசட்டைபண்ணக்கூடாது.  ஏனென்றால் நம்மை போல் தான் கர்த்தர் அவர்களையும் தாயின் கர்ப்பத்தில் உருவாக்குகிறார்.   நாம் கர்த்தரால் விசாரிக்கப்படுவோம் என்று எப்போதும் ஜாக்கிரதையோடு காணப்பட வேண்டும்.  அவ்விதமாக நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.