தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 37:3 

கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தர் பேரில் மட்டும் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் ஏழை எளிய பிள்ளைகள், விதவைகள், திக்கற்றவர்கள் இவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோபு 31:24-33 

நான் பொன்னின்மேல் என் நம்பிக்கையை வைத்து, தங்கத்தைப்பார்த்து: நீ என் ஆதரவு என்று நான் சொன்னதும்,

என் ஆஸ்திபெரியதென்றும், என் கைக்கு மிகுதியும் கிடைத்ததென்றும் நான் மகிழ்ந்ததும்,

சூரியன் பிரகாசிக்கும்போதும், அல்லது சந்திரன் மகிமையாய்ச் செல்லும்போதும், நான் அதை நோக்கி:

என் மனம் இரகசியமாய் மயக்கப்பட்டு, என் வாய் என் கையை முத்தி செய்ததுண்டானால்,

இதுவும் நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படத்தக்க அக்கிரமமாயிருக்கும்; அதினால் உன்னதத்திலிருக்கிற தேவனை மறுதலிப்பேனே.

என் பகைஞனுடைய ஆபத்திலே நான் மகிழ்ந்து, பொல்லாப்பு அவனுக்கு நேரிட்டபோது களிகூர்ந்திருந்தேனோ?

அவன் ஜீவனுக்குச் சாபத்தைக்கொடுக்கும்படி விரும்பி, வாயினால் பாவஞ்செய்ய நான் இடங்கொடுக்கவில்லை.

அவன் இனத்தார்களில் திருப்தியாகாதவனைக் காண்பிப்பவன் யாரென்று என் கூடாரத்தின் மனுஷர் சொல்லார்களோ?

பரதேசி வீதியிலே இராத்தங்கினதில்லை; வழிப்போக்கனுக்கு என் வாசல்களைத் திறந்தேன்.

நான் ஆதாமைப்போல என் மீறுதல்களை மூடி, என் அக்கிரமத்தை என் மடியிலே ஒளித்துவைத்தேனோ?

திரளான என் கூட்டத்துக்கு நான் பயந்ததினாலாவது, இனத்தார் ஜனத்தார் பண்ணும் இகழ்ச்சி என்னைத் திடுக்கிடப்பண்ணினதினாலாவது, நான் பேசாதிருந்து, வாசற்படியை விட்டுப் புறப்படாதிருந்தேனோ?

மேற்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது யோபு கூறுவது என்னவென்றால் அவன் எந்த ஒரு சிருஷ்டிப்பின் மேலும் நம்பிக்கை வைக்கவில்லை என்பதும், எந்த விலையுயர்ந்த பொருளின் மேலும் நம்பிக்கை வைத்து உன்னதத்திலிருக்கிற தேவனை தான் மறுதலிக்கவில்லை என்றும், தன்னுடைய பகைஞனுடைய ஆபத்திலோ, மற்றும் பொல்லாப்பு அவனுக்கு நேரிட்ட போதே தான் தனக்குள் மகிழ்ந்து களிகூரவுமில்லை என்பதும், தான் பெற்றிருந்த ஜீவனுக்கு சாபத்தை கொடுக்கும்படி விரும்பி, வாயினால் பாவஞ்செய்ய இடங்கொடுக்க வில்லை என்பதனையும் எடுத்துக் கூறுகிறான். மேலும் யோபு சொல்வது என்னவென்றால் அவன் இனத்தாரில் யாருக்கும் எந்த குறையும் வைக்கவில்லை என்றும், பரதேசியை வீதியிலே இராதங்க வைத்ததில்லை என்றும்; வழிபோக்கனுக்கு  அவன் வீட்டு வாசலை திறந்து கொடுத்தேன் என்றும் கூறுகிறான்.  அல்லாமலும் அவன் சொல்வது ஆதாமை போல் என்மீறுதல்களை மூடி அக்கிரமத்தை என் மடியிலே  ஒளித்து வைக்கவில்லை என்கிறான்.  மேலும் 

யோபு 31:34-40 

ஆ, என் வழக்கைக் கேட்கிறவன் ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும்; இதோ, சர்வவல்லவர் எனக்கு உத்தரவு அருளிச்செய்யவும், என் எதிராளி தன் வழக்கை எழுதிக்கொடுக்கவும் எனக்கு விருப்பமுண்டு.

அதை நான் என் தோளின்மேல் வைத்து, எனக்குக் கிரீடமாகத் தரித்துக்கொள்வேனே.

அவனுக்கு நான் என் நடைகளைத் தொகை தொகையாய்க் காண்பித்து, ஒரு பிரபுவைப்போல அவனிடத்தில் போவேன்.

எனக்கு விரோதமாக என் காணி பூமி கூப்பிடுகிறதும், அதின் படைச்சால்கள்கூட அழுகிறதும்,

கூலிகொடாமல் நான் அதின் பலனைப் புசித்து, பயிரிட்டவர்களின் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினதும் உண்டானால்,

அதில் கோதுமைக்குப் பதிலாக முள்ளும், வாற்கோதுமைக்குப் பதிலாகக் களையும் முளைக்கக்கடவது என்றான். யோபின் வார்த்தைகள் முடிந்தது.

மேற்கூறபட்ட பகுதிகளில் யோபு தன்னிடத்தில் எந்த குற்றங்களும் இல்லை என்றும்; ஆனால் குற்றங்கள் இருக்குமானால் கோதுமைக்கு பதிலாக முள்ளும், வாற்கோதுமைக்கு பதிலாக களையும் முளைக்கக் கடவது என்று கூறி அவன் வார்த்தைகளை முடிக்கிறான். 

பிரியமானவர்களே, மேற்கூறபட்ட வசனங்களை நாம் தியானித்தால் நமக்கு கர்த்தர் திருஷ்டாந்தபடுத்தி விளக்குகிறது என்னவென்றால் நாம் கர்த்தரின் வார்த்தைகளை ஒரு போதும் மீறக்கூடாது என்றும், அக்கிரமத்தை மறைக்காமல் கர்த்தரிடத்தில் அறிக்கையிட வேண்டும், கர்த்தரின் பேரில் மட்டும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும், வாயினால் பாவஞ் செய்தால் நாம் பெற்ற ஜீவனுக்கு சாபம் உண்டாகும் என்றும், சபையாம் குடும்பங்களை நம் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும்; அப்படி ஏற்றுக்கொண்டு கர்த்தருக்கு நன்மையானவைகளை செய்வோமானால் அவர் நம்மை ஆசீர்வதிப்பார்.  இவ்விதம் கர்த்தரிடத்தில் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.