தேவனுக்கே மகிமையுண்டாவதாக
நீதிமொழிகள் 28:13
தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் அறிந்துக்கொள்ள வேண்டிய முக்கியமான கருத்துக்கள்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் சகோதரருக்குள்ள சுதந்தரத்தில் பங்கடைகிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் முந்தின சில நாட்களாக நாம் தியானித்த யோபின் புஸ்தகம் மிகவும் கருத்தோடு கவனிக்க வேண்டியவைகள் ஆகும். ஏனோதானோ என்று படித்து விடுவதல்ல அந்த புஸ்தகம். மட்டுமல்ல பரிசுத்த வேதாகம புஸ்தகத்தின் எல்லா பகுதிகளும் மிகவும் கவனத்தோடும் கருத்தோடும் பரிசுத்த ஆவிக்குள் நிறைந்தவர்களாய் இருந்து தியானித்து; நம் வாழ்வில் எப்படி பரிசுத்தமாய் வாழவேண்டும் என்று தெரிந்துக்கொள்வது மிக முக்கியமாகும். அநேகர் வேதபுஸ்தகம் ஆவியில் தியானிக்காமல் வெளியின் தோற்றத்தை கூறிவிட்டு ஜனங்களை ஏமாற்றிவிடுவார்கள். மேலும் அநேகம் பேர் தொடக்கமும், முடிவும் வாசித்து வெளி தோற்றத்தை சொல்லி விடுவார்கள். ஆனால் பரிசுத்த வேத எழுத்துக்கள் எல்லாமே பரிசுத்த ஆவியால் நிறையப்பட்டு எழுதபட்டது. இதனை ஆழமாக அறிய விரும்புகிறவர்கள் அதன் உட்கருத்துக்கள் எப்படி உள்ளது என்று ஆழமாக பரிசுத்த ஆவியில் தியானித்து அதன் புதைப்பொருட்களை அறிந்துக் கொள்ளவேண்டும். நாம் பார்ககும் போது அநேகர் யோபுவை குறித்து தவறாக புரிந்துக்கொண்டு ஜனங்களை தவறான பாதையில் நடத்தி வருவார்கள். ஆதலால் அநேகர் தங்களுக்கு சோதனை வரும்போது, யோபைப்போல் உள்ள சோதனை என்று நினைத்து தங்கள் குற்றங்களை உணராமல் தங்களை நீதிமான் என்று கருதிக்கொள்கிறார்கள். ஆதலால் அநேகர் பாதாளத்தின் வாயிலிருந்து தப்பித்துக்கொள்ளாமல் இடறி விழுந்து கிடக்கிறார்கள் ஆதலால் பிரியமானவர்களே, கொடுக்கப்பட்டிருக்கிற யோபின் பகுதிகளை நன்றாக கருத்தோடு தியானித்து கர்த்தரிடத்தில் பெற்றுக்கொள்ள வேண்டிய சுதந்தரத்தை பெற்றுக்கொள்ளும்படியாக தாழ்மைப்பட்டு கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.