தேவனுக்கே மகிமையுண்டாவதாக
நீதிமொழிகள் 10:28
நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் நீதிமானாக வாழ்கிறோமா என்று கர்த்தர் ஒவ்வொருவரையும் சோதித்தறிகிறார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்மேல் கர்த்தர் அருள் பொழிவார் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
சங்கீதம் 11:1-7
நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன்; பின்னை ஏன் நீங்கள் என் ஆத்துமாவை நோக்கி: பட்சியைப்போல உன் மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறீர்கள்.
இதோ, துன்மார்க்கர் வில்லை வளைத்து, செம்மையான இருதயத்தார்மேல் அந்தகாரத்தில் எய்யும்படி தங்கள் அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள்.
அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதே, நீதிமான் என்ன செய்வான்?
கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது; அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது; அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது.
கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.
துன்மார்க்கர்மேல் கண்ணிகளை வருஷிக்கப்பண்ணுவார்; அக்கினியும் கந்தகமும் கடுங்கோடைக் கொந்தளிப்பும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு.
கர்த்தர் நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.
வசனங்கள் இராகவ தலைவனுக்கு ஒப்புவிக்கபட்ட தாவீதின் சங்கீதம். இந்த சங்கீதம் கிறிஸ்துவின் சங்கீதம். இதன் ஒவ்வொரு பொருளும் நாம் மிகவும் கவனமாக தியானித்து நம்முடைய ஆத்துமாவை காத்து நடக்கிறவர்களாக இருக்க வேண்டும். எப்படியெனில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு விரோதமாக எழும்பினவர்களை பார்த்து அவர் சொல்கிறார். அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதே, நீதிமான் என்ன செய்வான். கிறிஸ்து பரிசுத்த ஆலயமாக இருக்கிறதால்,அவர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தின் சிங்காசனத்தில் இருந்து, அவர் கண்கள் மனுபுத்திரரை பார்க்கிறது; அவருடைய இமைகள் அவர்களை சோதித்தறிகிறது. கர்த்தர் நீதிமானை சோதித்தறிந்து; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது. ஆனால் துன்மார்க்கருக்கு கண்ணிகளை வருஷிக்கப்பண்ணுகிறார், அவர்களுக்கு கந்தகமும், கடுங்கோடை கொந்தளிப்புமாயிருக்கும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்காகயிருக்கும். கர்த்தர் நீதியுள்ளவராகையால் நீதியின் மேல் பிரியப்படுவார்; அவர் முகம் எப்போதும் செம்மையானவனை நோக்கியிருக்கும்.
பிரியமானவர்களே, மேற்கூறபட்ட வசனங்கள் மூலம் நம் வாழ்வில் எந்தவிதமான துன்மார்க்கமாகிய உலக கிரியைகளில் சிக்கிக்கொள்ளாதபடி நம்மை காத்துக்கொள்ள வேண்டும். அல்லாமலும் கர்த்தர் பரலோகத்தின் சிங்காசனத்திலிருந்து மனுபுத்திரரை(இரட்சிக்கப்பட்டவர்கள்) பார்க்கிறது மட்டுமல்ல, நீதிமானாக விளங்குகிறோமா என்று சோதித்தறிந்துக் கொண்டும் இருக்கிறார். மேலும் நாம் அவர் உள்ளம் நம்மை வெறுக்காதபடி, அவர் நீதியில் பிரியப்படுகிறவராகையால் நாம் அவருக்கு பிரியமாக வாழ நீதியை தரித்தவர்களாக இருப்போமானால் நாம் செம்மையாக வாழ்கிறோமாகையால் அவர் முகம் எப்போதும் நம்மை நோக்கிக் கொண்டிருக்கும். ஆதலால் நாம் ஒவ்வொருவரும் தேவனுக்கு பிரியமாய் வாழ்ந்து நம்முடைய ஆத்துமாவை காத்துக் கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.