Jul 12, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

ஏசாயா 55:13

முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு விருட்சம் முளைக்கும், காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும்; அது கர்த்தருக்குக் கீர்த்தியாகவும், நிர்மூலமாகாத நித்திய அடையாளமாகவும் இருக்கும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

 நம்மை தெரிந்தெடுத்தல் திருஷ்டாந்தம்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, முந்தின நாளில் நாம் தியானித்த வேத பகுதியில் தேவனால் நாம் இரட்சிக்கப்பட்ட பிறகு, சண்டை போடுதல் தேவனுக்கு பிரியமில்லாத காரியம் என்றும், மற்றும் எவ்வித உலக ஆசீர்வாதங்கள், உலக இன்பங்கள் இருந்தாலும் அவையெல்லாம் அநித்தியமானது என்றும், நினைத்து அவையெல்லாம் முக்கியம் என்று எண்ணி விடாமல் உலகத்தோடு உலகத்திலுள்ள ஐசுவரியங்களை போதுமென்று இருந்து விடாதபடி எல்லாவற்றையும் அற்பமும், குப்பையுமென்று உதறித் தள்ளிவிட்ட மோசேயை போல நாமும் எவ்விதமான நிந்தைகள், தூஷனங்கள் வந்தாலும் கிறிஸ்துவுக்காய் பாடுபடுபவர்களாக எல்லாவற்றையும் விட்டு விட்டு இறங்கி வருவோமானால் நித்தியமான பாக்கியத்தை சுதந்தரிக்க முடியும்.

மேலும் மோசே மீதியானியாரின் தேசத்தில் வந்து குடியிருந்ததை பார்க்கிறோம். பிரியமானவர்களே, அப்போது மீதியான் தேசத்து ஆசாரியனின் குமாரத்திகள் அங்குள்ள துரவண்டையில் வந்து தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்கு தண்ணீர் மொண்டு நிரப்பினார்கள். கழிந்த நாளில் நாம் தியானித்ததான வேத பகுதியில் துரவண்டை என்பது தேவனுடைய சபைக்கு திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது . ஆடுகள் ஆத்துமாக்களுக்கு தேவன் திருஷ்டாந்தபடுத்துகிறார்.

தண்ணீர் என்பது ஜீவ தண்ணீராகிய  தேவவசனம்.ஆனால் அந்த குமாரத்திகள் என்பது ஆத்துமாவுக்குள் ஓரளவு விசுவாசம் வந்தவர்கள் முழுமையடையாதவர்கள். ஆனால் அவர்கள் தொட்டிகளை நிரப்புகிறார்கள்.அவர்களை அங்குள்ள மேய்ப்பர்கள் துரத்துகிறார்கள்.அப்போது அங்கு மோசே எழுந்திருந்து அவர்களுக்குத் துணைநின்று அவர்களுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுகிறான். 

பிரியமானவர்களே இவையெல்லாம் தேவனால் சம்பவித்ததே அல்லாமல் மனுஷரால் சம்பவித்தது அல்ல, ஏனென்றால்; மீதியான் தேசத்து மேய்ப்பர்கள் அந்த குமாரத்திகளை துரத்துகிறார்கள். ஆனால் மோசே உதவி செய்த போது அவனை அவர்கள் துரத்தவில்லை காரணமென்னவென்றால் மோசேக்குள்ளாக லேவி கோத்திரத்தாருடைய ஆசாரிய பட்டம் அவனுக்கு உண்டு .அதனால்தான் எல்லா வித உலக சந்தோஷத்தை விட்டு தேவனுக்காக இறங்கினான் என்பது நமக்கு தெரிகிறது.

நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் மீதியானியர் இஸ்மவேலர். இஸ்மவேலர் என்றால் முழுமையும் மாம்ச சிந்தை உள்ளவர்கள், அவர்கள் குமாரத்திகளை துரத்திவிட காரணம் மேய்ப்பர்களின் தவறான எண்ணம். குமாரத்திகள் தேவ சந்நிதியில் வருவது அருவருப்பு என்று நினைக்கிறார்கள். அந்த காரியம் இப்போதும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. ஏனென்றால், அவர்களின் கண்கள் மாம்ச கண்கள். அவர்களில் ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட வில்லை என்பது நமக்கு நிச்சயமாக விளங்குகிறது. 

ஆனால் அந்த இடத்தில் மோசே காணப்படுகிறான். தேவனால் ஆச்சரியவிதமாக காக்கப்பட்ட மோசேயை, தேவன் முன்கூட்டியே தேவனுக்காக அநேகக் காரியங்களை செய்யும் படியாக நோக்கங் கொண்டவராகக் காணப்படுகிறார். ஆனால் நாம் ஒன்று சிந்திப்போமாக! சிந்திப்போம்! செயல்படுவோம். பின்பு தேவன் இஸ்ரவேல் புத்திரரை கண்ணோக்கி அவர்களை நினைத்தார்.

அப்போது மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்து வந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின்புறத்திலே ஓட்டி தேவ பர்வதமாகிய ஓரேப் மட்டும் வந்தான்.

யாத்திராகமம் 3:2

அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது.

இதனை பார்த்த மோசே; இந்த முட்செடி வெந்து போகாதிருக்கிறது என்ன இந்த அற்புத காட்சியை பார்ப்பேன் என்று கிட்ட வருகிறததை, கர்த்தர் பார்த்து அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார் அவன் இதோ அடியேன் என்றான்.

இதனை வாசித்து தியானிக்கிற தேவனுடைய ஜனமே, கர்த்தர் மோசேக்கு முட்செடியில் நின்று தரிசனமாகிறார். எனென்றால் மோசே பார்வோனின் அநித்யமான எல்லா உலக சந்தோஷத்தை விட்டுக் இறங்கி வந்ததினால் கர்த்தர் அவ்விதமான தரிசனத்தை நமக்கு விளக்கிக் காட்டுகிறார். முட்செடி நடுவில் அக்கினி பற்றியெரிந்தது தான், நம்முடைய தேவன் (அவர் அக்கினியாயிருக்கிறார்).

முட்செடி என்பது உலகமாக இருக்கிற நம் ஒவ்வொருவரும் மோசேயை போல எல்லா உலக இன்பங்களை விட்டு வருவோமானால் கர்த்தர் நம் நடுவில் வாசம்பண்ணுகிறார். அவர் அக்கினியாயிருக்கிறார். இதனை மோசேக்கும் அவ்வித ஆசீர்வாதத்தை கொடுக்கும்படியாக இவ்விதம் தரிசனமாகிறார்.

அப்பொழுது அவர்: இங்கே கிட்டி சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றி போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார். 

யாத்திராகமம் 3:6

பின்னும் அவர்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்றார். மோசே தேவனை நோக்கிப் பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான்.

பின்னும் கர்த்தர் மோசேயிடம் எகிப்திலுள்ள என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலை கேட்டேன். அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். அதனால் அவர்களை எகிப்தியனின் கைக்கு நீங்கலாக்கி விடுவிக்கவும் அவர்களை அந்த தேசத்திலிருந்து நீக்கி,கானானியரும், எத்தியரும், எமோரியரும், பெரிசியரும், ஏவியரும், எபூசியரும் இருக்கிற பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான இடத்திலே அவர்களை கொண்டு போய் சேர்க்கவும் இறங்கினேன். 

ஆகையால் அவர்களை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னை அனுப்புவேன் வா என்றார். 

அதற்கு மோசே, பார்வோனிடத்திற்கு போகவும் அவர்களை அழைத்து வரவும், எம்மாத்திரம் என்றான்.

யாத்திராகமம் 3:12-14                                                                                           

அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன்; நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார்.

அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான்.

யாத்திராகமம் 3:14                                                                                           

அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.

பிரியமானவர்களே இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று நம்முடைய தேவனாகிய கர்த்தர் அடையாளம் காட்டும் படியாகவே முட்செடியில் மோசேக்கு தரிசனமாகிறார். மேலும் மோசேயை எகிப்திற்கு அனுப்பும்படியாக அவர் முன் குறித்து நான் உன்னோடே இருக்கிறேன் என்பதை தெளிவுபடுத்துகிறார்.

மோசேயும் விசுவாசிக்கும் படியாக இப்படி செய்கிறார்.

இது தேவன் காண்பித்தது முட்செடியாகிய உள்ளத்தில், நம் தேவன் அக்கினியாக வெளிப்படும் போது, நம் உள்ளத்தில் நம்மை நெருக்குகிற உலக கவலை, மயக்கம், சிற்றின்பங்கள், ஆசை மேலும் உள்ளத்தில் இருக்கிற பல வித வீணான சிந்தனைகள் மற்றும் பிசாசின் கிரியைகள் சகலத்தையும் அழிக்கும் படியாக முட்செடியாக இருக்கிற உள்ளத்தில் பரிசுத்த அக்கினியாக கடந்து வந்து நம் உள்ளத்தின் பொல்லாத சிந்தனைகளை சுட்டெரித்து, கர்த்தர் தம்முடைய மகிமையில் வெளிப்பட்டு சீயோனாக பிரகாசித்து, ஆத்துமாவின் நெருக்கதின்று நம்மை விடுவித்து இரட்சித்து அவரோடே சேர்க்கும் படியாக, இவ்வித திருஷ்டாந்தத்தை நமக்கு விளக்கிக் காட்டுகிறார். நம்முடைய ஆத்துமாவின் விடுதலைதான் மிகவும் முக்கியம். ஜெபிப்போம்.

கர்த்தர் தாராளமாய் யாவரையும் ஆசீர்வதிப்பார். 

-தொடர்ச்சி நாளை.