தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 24:4

கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கைகளில் சுத்தம் உள்ளவர்களாக நடக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதிகளில், மணவாட்டி சபையாகிய நமக்கு மிகுந்த ஜலபிரவாகமாகிய போராட்டம் வரும் போது தேவன் நம்மை தப்புவிக்கிற விதம் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

சங்கீதம் 18:17-24 

என்னிலும் அதிக பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார்.

என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.

அவர் விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்மேல் பிரியமாயிருந்தபடியால், என்னைத் தப்புவித்தார்.

கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.

கர்த்தருடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனுக்குத் துரோகம்பண்ணினதில்லை.

அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; அவருடைய பிரமாணங்களை நான் தள்ளிப்போடவில்லை.

அவர் முன்பாக நான் மனவுண்மையாயிருந்து, என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.

ஆகையால் கர்த்தர் என் நீதிக்கும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என் கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாக எனக்குப் பலனளித்தார்.

மேற்கூறபட்ட வசனங்களில்;  கர்த்தராகிய தேவன் நம்முடைய ஆபத்து நாளில் நமக்கு ஆதரவாயிருந்து எதிராக வருகிற சத்துருக்களுக்கும், பகைஞருக்கும் நம்மை விடுவிக்கிறார் என்பதும், நம்மேல் அவர் பிரியமாயிருந்து, நம்மை  விசாலமான இடத்திலே வைக்கிறார்.  மேலும் கர்த்தர் நாம் செய்கிற நீதிக்கு தக்கதாக பதிலளிப்பர் ; நம்முடைய கைகளின் சுத்தத்திற்கு தக்கதாக நமக்கு சரிகட்டுகிற தேவனாக விளங்குகிறார்.  ஆதலால் பிரியமானவர்களே, நாம் ஒவ்வொருவரும் அவர் வழிகளை கைக்கொண்டு வரவேண்டும்.  என்னவென்றால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சொல்கிறார்; நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன் என்கிறார்.  ஆதலால் அவர் வழியில் நடக்க கற்றுக்கொள்ள வேண்டும்.  அந்த வழிகள் நாம் நம்முடைய பாவத்திற்கு மரித்து, நீதிக்கு பிழைக்கிறவர்களாயிருந்தால் நாம் தேவனுக்கு துரோகம் பண்ணுவதில்லை.  கர்த்தர் நமக்கு தந்திருக்கிற நீதிநெறிகளை தவறாமல் காத்துக்கொண்டு அவர் பாதைகளில் நடக்க வேண்டும். கர்த்தருடைய நியாயங்களையும் பிரமாணங்களையும் தவறாமல் கைக்கொண்டு நடக்க வேண்டும்.  மேலும் நாம் நம்முடைய துர்குணங்களை விட்டு, அவரிடத்தில் எப்போதும் மன உண்மையுள்ளவர்களாய் நடந்துக்கொள்ள வேண்டும்.  அப்படியாக நாம் எல்லாவற்றிலும் கர்த்தரின் சொற்கேட்டு உண்மையாய் நடந்துக் கொள்வோமானால்; கர்த்தர் நம்முடைய நீதிக்கும், தம்முடைய கண்களின் முன்பிருக்கிற நம்முடைய கைகளின் சுத்தத்திற்கு தக்கதாக நமக்கு பதிலளிப்பார்.  ஆகையால் நாம் எப்போதும்   அவருடைய நீதி நியாயம், பிரமாணம் எல்லாவற்றிலும் உண்மையுள்ளவர்களாயும், கைகளில் சுத்தம் உள்ளவர்களாயும் நடந்துக்கொள்ளும் படியாக ஒப்புக்கொடுப்போம்

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.