தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஆபகூக் 3:18
நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.
பூமியின் நியாயத்தீர்ப்பின் தோற்றங்கள்:-
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்து வந்ததான வேதப் பகுதியில் பூமியின் நியாயத்தீர்ப்பைக் குறித்து நாம் தியானித்தோம். பூமி என்பது யார்,எப்படி பூமியை நியாயந்தீர்க்கிறார் தேவன், என்பதை சற்று தியானித்தோம். கர்த்தர் முட்செடியில் நின்று, மோசேக்கு தரிசனமாகும் போது, முட்செடி பற்றியெரிந்து கொண்டிருக்கிறது ஆனால் அது வெந்து போகவில்லை.
தேவன் எதற்காக நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார் என்பது தெரிய வேண்டும். நம் உள்ளத்தில் அவர் பற்றியெரிகிற அக்கினியாக வெளிப்படுகிறார். தேவனுடைய வார்த்தையானது அக்கினியானது.
ஏசாயா 10:17-18
இஸ்ரவேலின் ஒளியானவர் அக்கினியும், அதின் பரிசுத்தர் அக்கினிஜுவாலையுமாகி ஒரேநாளிலே அவனுடைய முட்செடிகளையும் நெரிஞ்சில்களையும் தகித்துப் பட்சித்து,
அவனுடைய வனத்தின் மகிமையையும், அவனுடைய பயிர்நிலத்தின் மகிமையையும், உள்ளும் புறம்புமாய் அழியப்பண்ணுவார்; கொடிபிடிக்கிறவன் களைத்து விழுவதுபோலாகும்.
ஏனென்றால் பெருமையுள்ள இருதயத்தில் தேவன் பெருமையை அழிக்கிறார்.
ஏசாயா 10:15
கோடரியானது தன்னால் வெட்டுகிறவனுக்கு விரோதமாய் மேன்மை பாராட்டலாமோ? வாளானது தன்னைக் கையாடுகிறவனுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டலாமோ? பாராட்டினால், தடியானது தன்னைப் பிடித்தவனை மிரட்டினாற்போலவும், கோலானது நான் மரக்கட்டையல்லவென்று எழும்பினாற்போலவும் இருக்குமே. இதனை வாசிக்கும் போது பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார் என்பது தெரிகிறது.
ஏசாயா 11:4-9
நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.
நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும்.
அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்.
பசுவும் கரடியும் கூடி மேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப்படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்.
பால் குடிக்குங்குழந்தை விரியன்பாம்பு வளையின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும்,
என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல, பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.
பிரியமானவர்களே நம் உள்ளம் தேவனுடைய நீதி நியாயங்களால் நிறையா விட்டால் ,துன்மார்க்கர்கள் குடியிருப்பார்கள். எல்லா உள்ளத்திலும் பலவித கூட்டத்தார் உண்டு. பலவித கூட்டத்தார் என்று சொல்லும் போது பலவித எண்ணங்கள், கிரியைகள் நம் உள்ளத்தில் எழும்பும் அவற்றை எல்லாம் அழிக்கும்படியாகவே தேவன் வார்த்தையாகிய அக்கினியை நம் உள்ளத்தில் அனுப்பி தமது வாக்கின் கோலால் அடிக்கிறார். இஸ்ரவேலின் ஓளியானவர் அக்கினியாக உலாவுகிறார். அப்போது நம் உள்ளத்தில் உள்ள துன்மார்க்க கிரியைகளை சங்கரிப்பார். இப்படி தான் நம் ஆத்துமா பாவத்திலிருந்து விடுதலையாகி மீட்கபட வேண்டும். இவ்விதமாக எல்லா ஜனங்களிலும் பலவித சுபாவங்கள் (மிருக சுபாவங்கள் உண்டு) இவற்றை தேவன் அவருடைய அக்கினியால் நியாயத்தீர்த்து எல்லோரையும் சிறுபிள்ளையினுடைய இருதயத்தை போல மாற்றுகிறார். அப்போது நம் உள்ளம் (பூமி) கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும். இது தனி ஆத்மாவின் செயல்.
இப்படி தான் தேவன் தேசத்திலும் கிரியை செய்து எல்லோரையும் இரட்சித்து, முழு உலகமும் (பூமி முழுவதும்) கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் படியாக, இப்போது நியாயத்தீர்ப்பு நடத்தி கொண்டிருக்கிறார். சீக்கிரத்தில் தேவன் விரும்புகிறது போல் நாம் மாறுவோமானால் தேவ கோபம் நம் தேசங்களை விட்டு மாற்றப்படும்.
இவ்விதமாக நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் தேவன், அவருடைய வார்த்தையை அனுப்பி சுத்திகரிக்கும் போது பரிசுத்தர்கள் மாத்திரம் மீந்திருப்பார்கள்.
ஏசாயா 10:20-22
அக்காலத்திலே இஸ்ரவேலில் மீதியானவர்களும், யாக்கோபின் வம்சத்தில் தப்பினவர்களும், பின்னொருபோதும் தங்களை அடித்தவனைச் சார்ந்துகொள்ளாமல், இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தரையே உண்மையாய்ச் சார்ந்துகொள்வார்கள்.
மீதியாயிருப்பவர்கள், யாக்கோபில் மீதியாயிருப்பவர்களே, வல்லமையுள்ள தேவனிடத்தில் திரும்புவார்கள்.
இஸ்ரவேலே, உன் ஜனங்கள் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், அவர்களில் மீதியாயிருப்பவர்கள் மாத்திரம் திரும்புவார்கள்; தீர்மானிக்கப்பட்ட அழிவு நிறைந்த நீதியோடே புரண்டு வரும்.
பிரியமானவர்களே தேவன் நீதியோடே வந்து நியாயத்தீர்க்கிறவர். அந்த தீர்ப்பில் நாம் அழிந்து போகாத படி தேவன் நம்மை இன்றே அவருடைய பாதுகாப்புக்குள் வைத்து நம்மை பராமரிக்கும் படி நாம் இன்றே மனந்திரும்புவோம். ஒப்புக் கொடுப்போம்.
பிரியமானவர்களே நம்மை நாமே இந்த நாட்களில் மிகவும் சோதித்து அறிந்து கொள்ள வேண்டும்.
ஆபகூக் 3:4-7
அவருடைய பிரகாசம் சூரியனைப்போலிருந்தது; அவருடைய கரத்திலிருந்து கிரணங்கள் வீசின; அங்கே அவருடைய பராக்கிரமம் மறைந்திருந்தது.
அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய் சென்றது; அவர் அடிகளிலிருந்து எரிபந்தமான காய்ச்சல் புறப்பட்டது.
அவர் நின்று பூமியை அளந்தார்; அவர் பார்த்துப் புறஜாதிகளைக் கரையப்பண்ணினார்; பூர்வ பர்வதங்கள் சிதறடிக்கப்பட்டது, என்றுமுள்ள மலைகள் தாழ்ந்தது; அவருடைய நடைகள் நித்திய நடைகளாயிருந்தது.
கூஷானின் கூடாரங்கள் வருத்தத்தில் அகப்பட்டிருக்கக்கண்டேன்; மீதியான் தேசத்தின் திரைகள் நடுங்கின.
இதனை வாசிக்கிற பிரியமானவர்களே நாம் தப்பித்துக்கொள்ள இந்த நாட்களில் நம்முடைய எல்லாவித பாராம்பரிய நடத்தைகள் எல்லாம் மாற்றப்பட்டு உள்ளத்தில் இருக்கிற பெருமையான காரியங்கள் எல்லாம் மாற்றப்படவேண்டும். நம் உள்ளத்தை தேவன் புதுப்பிக்கும் படியாக சத்தியத்திற்கு கீழ்ப்படியும்படியாக தேவன் நம் ஒவ்வொருவரையும் அளவிடுகிறார் . அவருடைய நடைகள் நித்திய நடைகளாயிருக்கும் படியாக தேவன் கொள்ளை நோயை அனுப்புகிறார். எரிபந்தமான காய்ச்சல் புறப்பட்டது என்று சொல்லப்படுகிறது. நம்மை ஒப்புக்கொடுப்போமானால் தப்புவிக்கப்படுவோம். ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.