பூமி பூரிப்பாகுதல்:-

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Jul 16, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

ஏசாயா 26:3

உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

பூமி பூரிப்பாகுதல்:-

கர்த்தருக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேத பகுதியில் பூமியை தேவன் எவ்விதம் நியாயந்தீர்க்கிறாரென்றும் மேலும் பூலோகமெங்குமுள்ள ஜனங்களை நியாயந்தீர்க்கிறவராக விளங்குவதையும் நாம் முந்தின நாளில் தியானித்தோம்.

மேலும் பிரியமானவர்களே, நாம் அறிந்து கொள்ள வேண்டிய வேறொரு முக்கியமான காரியம் என்னவென்றால் நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டில் துவங்குங் காலமாயிருக்கிறது. தேவனுடைய வீடு என்பது இரட்சிக்கப்பட்டவர்களை காட்டுகிறது. என்னவென்றால் முழுமையாக அநீதியை விட்டு நீங்காதவர்களை தேவன் நீதியால் நியாயந்தீர்க்கிறவராக காணப்படுகிறார்.

1 கொரிந்தியர் 6:1-4

உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடே வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடத்தில் போகாமல், அநீதக்காரரிடத்தில் போகத் துணிகிறதென்ன?

பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, அற்ப வழக்குகளைத் தீர்க்க நீங்கள் அபாத்திரரா?

தேவ தூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று அறியீர்களா? அப்படியிருக்க, இந்த ஜீவனுக்கேற்றவைகளை நீங்கள் தீர்த்துக்கொள்ளக்கூடாதிருக்கிறது எப்படி?

இந்த ஜீவனுக்கேற்ற வழக்குகள் உங்களுக்கு இருந்தால், தீர்ப்புச்செய்கிறதற்கு, சபையில் அற்பமாய் எண்ணப்பட்டவர்களை நியமித்துக்கொள்ளுங்கள்.                                  இவ்விதமாக தேவனுடைய வார்த்தைகளை அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறான். என்னவெனில் உங்களுக்கு வெட்கம் உண்டாக சொல்கிறேன், சகோதரனுக்கு சகோதரன் வழக்கு உண்டானால் அதைத் தீர்த்துக் கொள்ளும் படியான விவேகி உங்களுக்குள் இல்லையா ? 

மேலும் அவிசுவாசிகளுக்கு முன்பாக சகோதரனுக்கு சகோதரன் வழக்குண்டாக்குகிறான்.

நீங்கள் ஒருவரோடொருவர் வழக்குண்டாக்குறது, எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படி செய்கிறதை விட நீங்கள் அநியாயத்தை சகித்துக் கொள்ள வேண்டுமென்றும், நஷ்டத்தை பொறுத்துக் கொள்ள வேண்டுமென்றும் கூறுகிறதை பார்க்கிறோம்.

நீங்கள் அநியாயம் செய்கிறீர்கள், நஷ்டப்படுத்துகிறீர்கள், சகோதரருக்கும் அப்படி செய்கிறீர்களே. ஆதலால்,

1கொரிந்தியர் 6:9-10

அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்,

திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.

மேற்கூறிய வசனங்களில் எழுதப்பட்ட காரியங்களை நாம் தேவனை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு நடந்தது போல இனி நடவாமலிருங்கள் என்று நம் தேவனாகிய கர்த்தர் நம்மோடு கூறுகிறார். முந்தின நாளில் பாவம் (எகிப்து) -க்கு அடிமையாக இருந்த காலத்தில் இந்த காரியங்களை செய்தோம். மீண்டும்  இரட்சிக்கப்பட்ட பிறகு இவ்விதமான காரியங்கள் நம் உள்ளத்தில் இருக்குமானால் அவர்களை தான் பூமி என்று சொல்லப்படுகிறது. ஏனெனில், 

I கொரிந்தியர்: 6:11

உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.

ஆதலால் எப்போதும் எல்லாவற்றிலும் எச்சரிக்கையாகவும், ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும்.

ஏசாயா 45:8                                                                                                                 

 வானங்களே உயர இருந்து சொரியுங்கள்; ஆகாயமண்டலங்கள் நீதியைப் பொழியக்கடவது; பூமி திறவுண்டு, இரட்சிப்பின் கனியைத்தந்து, நீதியுங்கூட விளைவதாக; கர்த்தராகிய நான் இவைகளை உண்டாக்குகிறேன்.

பிரியமானவர்களே, மேற்கூறிய வசனத்தை தியானித்து நம்மை நாம் சோதித்து அறிந்து நம் வாழ்க்கையில், நீதியும், நியாயமும், பிரமாணம், கட்டளை, கற்பனைகள்  தேவனுக்குரியவைகளை நாம் உண்மையாக செய்யாமல் இருந்தோமானால், இப்போதே நாம் நம்மை ஒன்றுகூட பாவ அறிக்கைபண்ணி முழுமையும் தேவனிடத்தில் ஒப்புக் கொடுப்போமானால் தேவன் நிச்சயமாக நமக்கு இரட்சிப்பின் கனியைத் தந்து நீதியும் விளையச் செய்கிறார்.

ஏசாயா 45:11-13

இஸ்ரவேலின் பரிசுத்தரும் அவனை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: வருங்காரியங்களை என்னிடத்தில் கேளுங்கள்; என் பிள்ளைகளைக்குறித்தும், என் கரங்களின் கிரியைகளைக்குறித்தும் எனக்குக் கட்டளையிடுங்கள்.

நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷனை சிருஷ்டித்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்.

நான் நீதியின்படி அவனை எழுப்பினேன்; அவன் வழிகளையெல்லாம் செவ்வைப்படுத்துவேன்; அவன் என் நகரத்தைக் கட்டி, சிறைப்பட்டுப்போன என்னுடையவர்களைக் கிரயமில்லாமலும் பரிதானமில்லாமலும் விடுதலையாக்குவான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

பிரியமானவர்களே நம்மை உருவாக்கினவர் நம்முடைய பிதாவாகிய தேவன்,நமக்குள்ளாக அவருடைய கிரியைகளை நடப்பிக்கிறவர். அந்த கிரியையாவது மனுஷனை சிருஷ்டிக்கிறார். அந்த மனுஷன் தான் நம்முடைய புதிய மனுஷன் (உள்ளான மனுஷன்) அதில் நீதியை தேவன் வர்த்திக்க செய்கிறார். வானங்களை விரிக்கிறார். சர்வ சேனைக்கும் கட்டளையிடுகிறார் என்றால் தேவனுடைய மகிமையால் நம் உள்ளம் நிறையப்படுகிறது. பரிசுத்தவான்களின் கூட்டம் அவர்களுக்குள் மகிமையாக பிரவேசிப்பார்கள். அப்போது நாம் செய்த நீதியின்படி நம்மளில் மரித்து கிடக்கிற ஆத்துமாவை தேவன் உயிர்ப்பித்து உள்ளான மனுஷனுக்குள் ஆத்துமாவை தேவன் எழுப்பி அதற்கு வழிகளையெல்லாம் செவ்வைப்படுத்துகிறார்.

பின்பு நம்முடைய உள்ளத்தில் அவர் சீயோன் நகரத்தை கட்டி ,சிறைப்பட்டு கிடக்கிற நம்முடைய ஆத்துமாவை கிரயமில்லாமலும், பரிதானமில்லாமலும் விடுதலையாக்குவார்.                                                                                                         

அதற்கு தான் புதிய ஏற்பாட்டில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வருவதற்கு முன், அவருக்கு பாதைகளை செவ்வைபடுத்தும் படியாக யோவான் ஸ்நாபகனை தேவன் இவ்வுலகில் அனுப்பினார். இவ்விதம் நம் வாழ்க்கையில் நாம் புதிய மாறுதலை காணும் போது நம் உள்ளம் பூரிப்படையும் பூரிப்படைந்த நம் உள்ளம் மீண்டும் எல்லா காரியங்களிலும் தேவசித்தம் செய்து கீழ்ப்படிவோமானால் தேவன் தாம் செய்த கிரியைகளினாலே நம்மில் மகிழ்வார், நாமும் மகிழ்வதற்கு அது காரணமாய் இருக்கும்.

அதைத் தான்,

சங்கீதம் 96:11-13

வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்குவதாக.

நாடும் அதிலுள்ள யாவும் களிகூருவதாக; அப்பொழுது கர்த்தருக்கு முன்பாக காட்டு விருட்சங்களெல்லாம் கெம்பீரிக்கும்.

அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.

பிரியமானவர்களே, சமுத்திரம் பற்றி பின்பு தியானிப்போம்.

கர்த்தர் பூமியாயிருக்கிற நம்மை நியாயத்தீர்த்து சீர் செய்யாவிட்டால் நாம் எல்லோரும் நித்திய அழிவில் அழிக்கப்படுவோம். கர்த்தர் நம்மை நியாயந்தீர்க்கிறாரென்றால் நம்மை நாம் தேவ வசனத்து சத்தியத்திற்கேற்றபடி சீர் செய்வோமானால் நித்திய அழிவில் இருந்து தப்பிக்கபடுவோம்.

இவ்விதம் நம்மை சீர்படுத்திக் கொண்டு சத்தியத்தின் பிரகாரம் பரிசுத்தப் படுத்துவோமானால்,

ஏசாயா 26:20-21

என் ஜனமே, நீ போய் உன் அறைக்குள்ளே பிரவேசித்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக்கொள்.

இதோ, பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலைசெய்யப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும்.

அப்படியிருந்தால் நம் ஆத்துமா பிழைக்கும் அதைத்தான்,                             

ஏசாயா 26:19                                                                                                                         

மரித்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களோடேகூட எழுந்திருப்பார்கள்; மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே, விழித்துக் கெம்பீரியுங்கள்; உம்முடைய பனி பூண்டுகளின்மேல் பெய்யும் பனிபோல் இருக்கும்; மரித்தோரைப் பூமி புறப்படப் பண்ணும்.

இப்படி மண்ணோடு ஒட்டி மரித்து கிடக்கிற ஆத்துமாவை கானானை நோக்கி தேவன் புறப்படப்பண்ணுகிறார்.

எபேசியர்: 5:14-17

ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்.

ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து,

நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.

பிரியமானவர்களே இந்த நாட்களில் நாம் மிகவும் உணர்ந்து ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார். 

-தொடர்ச்சி நாளை.