தேவனுக்கே மகிமையுண்டாவதாக
எசேக்கியல் 36:26
உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.
அல்லேலூயா.
சமுத்திரம் பற்றியதான விளக்கம் அதனிடத்திலிருந்து விடுதலை:-
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, முந்தின நாளில் பூமி எவ்விதத்தில்
பூரிப்பாகும் என்றும், பூமியிலுள்ள குடிகள் எவ்விதத்தில் கானானை நோக்கி யாத்திரை செய்வார்கள் என்றும் நாம் தியானித்தோம். இந்த நாளில் சமுத்திரம் யார் என்றும், சமுத்திரம் எவ்விதத்தில் முழங்கும் என்றும் நாம் தியானிப்போம்.
சங்கீதம் 98:2,3
கர்த்தர் தமது இரட்சிப்பைப் பிரஸ்தாபமாக்கி, தமது நீதியை ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக விளங்கப்பண்ணினார்.
அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்; பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய இரட்சிப்பைக் கண்டது.
முந்தின நாளில் தேவன் இஸ்ரவேல் சபையை நினைவு கூர்ந்தார். அதனால் அவர் தமது ஜனங்களை கண்ணோக்கி பார்த்து, அவர்களுக்கு இருந்த உபத்திரவமும், ஒடுக்குதலையும் கண்ட தேவன் அவர்களுக்கு இரங்கி அவர்களை சத்துருவின் கையிலிருந்து விடுவித்து இரட்சிக்கும்படியாகவே தமது தாசனாகிய மோசேயை அழைக்கிறார். அழைத்து அவர் நாமத்தை மோசேக்கு அறிவித்து மோசேயிடம்,
யாத்திராகமம் 3:17
நான் உங்களை எகிப்தின் சிறுமையிலிருந்து நீக்கி, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியருடைய தேசத்துக்குக் கொண்டுபோவேன் என்றும் சொன்னேன் என்றார் என்று சொல்லு.
இது எதை காட்டுகிறது என்றால் பாவ, மோக, இச்சை, ஆசை, அலங்காரம், உலக கிரியைகள், உலக வழிபாடுகளில் சிக்கி நம் ஆத்துமாவுக்குள் சந்தோஷத்தை வரவிடாமல் தடைப்படுத்தி, தேவனை ஆவியோடும், உண்மையோடும் தொழுதுக் கொள்ளவிடாமல் வைத்திருக்கிற கடின இதயமுள்ளவர்களை பார்வோனிடத்திலிந்து விடுதலை ஆக்கும்படியாகவே மோசேயை தெரிந்தெடுத்தார் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம்.
இன்னும் நம் உள்ளத்தில் மூன்றாவது ஒரு செயல் சமுத்திரம். இப்பூமியில் பார்க்கும் போது சமுத்திரம் அதிகமான இடத்தில் இருப்பது போல் நாம் உள்ளத்தில் பெரும்பான்மையான இடம் சமுத்திரம். இந்த சமுத்திரம் எவற்றை விளக்குகிறது என்றால் துன்மார்க்கமான வாழ்க்கையை காட்டுகிறது. மேலும் சமுத்திரம் அலைகளால் நிறையப்பட்டிருப்பது போல், நம் உள்ளம் பலவித போராட்டங்களால் நிறையப்பட்டிருக்கும். மேலும் அலைகள் ஒன்றன்பின் ஒன்றாக வருவது போல், தேவ சத்தத்திற்கு கீழ்ப்படியாமல் இருந்தால் நம் வாழ்க்கையில் இந்த அலைகள் ஒன்றன்பின் ஒன்றாக வரும். மேலும் அலைகள் முடியும் என்று நினைப்போம். ஆனால், கர்த்தர் கட்டளையிடுகிற வரையிலும் இந்த அலைகள் நிற்காது. இது யாருக்கு என்றால் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் ,தங்கள் இச்சைகளின் படி நடக்கிற துன்மார்க்கர்களுக்கு மேலும் சில நேரங்களில் பெரிய அலை அடிக்கிறது என்றால் கர்த்தர் காற்றாக வரும் போது என்று நமக்குத் தெரிய வேண்டும். இது நம் வாழ்க்கையில் வருகிற பெரிய போராட்டம்.
நாம் தேவ வசனம் தியானிக்கும் போது நமக்கு தெரிகிற காரியம் என்னவென்றால் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒரு இடத்தில் அவர் வசனங்களை கேட்க சென்ற ஜனங்களை பந்தி அமர்த்துகிறதை பார்க்கிறோம். அப்போது அவரால் தெரிந்து கொண்ட பன்னிரண்டு சீஷர்களும் அங்கு உண்டு. அப்போது சுருக்கமாக நாம் பார்க்கும் போது ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து அண்ணாந்து பார்த்து ஆசீர்வதித்து அப்பங்களை பிட்டு அவர்களுக்கு பரிமாறும் படி சீஷர்களிடத்தில் கொடுத்தார். அவர்கள் பரிமாறிப் போக பன்னிரண்டு கூடை நிறைய மீதி எடுத்தார்கள்.
பின்பு சீஷர்களை தமக்கு முன்னாக பெத்சாயிதாவுக்கு போகும்படி துரிதப்படுத்தினார். பின்பு அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு ஜெபம் பண்ணும் படி ஒரு மலையின் மேல் ஏறினார்.
சாயங்காலமான போது படவு நடுக்கடலிலிருந்தது அவரோ கரையிலே தனிமையாயிருந்தார்.
மாற்கு 6:48
அப்பொழுது காற்று அவர்களுக்கு எதிராயிருந்தபடியினால், அவர்கள் தண்டு வலிக்கிறதில் வருத்தப்படுகிறதை அவர் கண்டு, இராத்திரியில் நாலாம் ஜாமத்தில் கடலின்மேல் நடந்து, அவர்களிடத்தில் வந்து, அவர்களைக் கடந்து போகிறவர்போல் காணப்பட்டார்.
பிரியமானவர்களே இவ்விதம் தான் நம்முடைய வாழ்க்கையும் இருக்கிறது. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ,நமக்கு தேவ வசனத்தை விளம்பி தந்து நாம் புசிக்கும்படி செய்து, பின் நாம் எப்படி அக்கறை யாத்திரை செல்கிறோம் என்று நம்மை சோதிக்கிறார். ஆனால் அந்த சீஷர்கள் யாத்திரை செய்யும்போது, எதிர் காற்று அடிக்கிறது, அக்கரை போகவிடாமல் நம் வாழ்க்கையும் இப்படி தான், நம்மை அக்கரையாகிய பரலோகத்தில் போகவிடாமல் எதிர் காற்று அடிக்கும். அப்போது நாம் ஒன்று இந்த வார்த்தைகளை சிந்திக்க வேண்டும். எதிர்காற்றடிப்பதற்கு காரணம் என்ன என்று சிந்திப்போமா?
ஆனால் நம் விசுவாச யாத்திரையை மிகவும் கவனமாக நம்முடைய தேவன் உற்று கவனிக்கிறார். நமக்கு போராட்டங்கள் வரும்போது நம் பக்கத்தில் தான் கடந்து போவார். ஆனால் தன்னுடைய சீஷராக இருக்கிறவர்கள் அமிழ்ந்து போகதப்படி காத்துக் கொள்வார்.
மாற்கு 6:49-53
அவர் கடலின்மேல் நடக்கிறதை சீஷர்கள் கண்டு, ஆவேசம் என்று எண்ணி, சத்தமிட்டு அலறினார்கள்.
அவர்களெல்லாரும் அவரைக் கண்டு கலக்கமடைந்தார்கள். உடனே அவர் அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்று சொல்லி,
அவர்கள் இருந்த படவில் ஏறினார். அப்பொழுது காற்று அமர்ந்தது; அதினால் அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள்.
அவர்களுடைய இருதயம் கடினமாயிருந்தபடியினால் அப்பங்களைக்குறித்து அவர்கள் உணராமற்போனார்கள்.
அவர்கள் கடலைக்கடந்து கெனேசரேத்தென்னும் நாட்டிற்கு வந்து, கரை பிடித்தார்கள்.
பிரியமானவர்களே நம் விசுவாச ஓட்டத்தை துவக்கி வைத்த நம் கிறிஸ்து அதை சோதிக்கிறவராகவும், அமிழ்ந்து போகாதபடி காக்கிறவராகவும் காணப்படுகிறார்.
மேற்கூறிய வார்த்தையை போல் நம் பக்கம் வருகிற கிறிஸ்துவை நாம் காண முடியாதபடி நம் கண்கள் அடைக்கப்பட்டிருக்கிறது. நாமும் பிசாசு என்று நினைத்து விடுகிறோம். ஆனால் இயேசு நம் வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப வாழ்விலும் வந்து விட்டால் நிச்சயம் காற்று அமரும் இந்த வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது அவர் படவில் வந்து ஏறின உடனே காற்று அமர்ந்ததை பார்க்கிறோம். காற்று அடிப்பதற்கு காரணம் அவர்கள் அப்பங்களை குறித்து உணராமற்போனார்கள்.
மீதியாய் எடுத்த அப்பங்களைக் குறித்து அவர்கள் உணரவில்லை.
இதனை தேவன் நமக்கு எதற்கு விளக்குகிறார். வேத வசனம் கேட்டும் நாம் பாவ இச்சைகளிலும், பல உலக தோற்றங்களிலும், ஆசைகளிலும், ஜென்ம சுபாவங்களிலும் மற்றும் உலக பழக்க வழக்கங்களிலும் நடப்போமானால் நம் வாழ்க்கை சமுத்திரம் (துன்மார்க்கம்) இப்படி நடக்கிறவர்களிடத்தில் கடின இருதயம் உண்டாயிருக்கும். கடின இருதயம் இருக்கிறதினால் அப்பங்களை குறித்து அவர்கள் உணராமல் போகிறார்கள்.
பிரியமானவர்களே இவ்வித, தேவனுக்கு பிரியமில்லாத காரியங்கள் மாற்றப்பட்டு நாம் பரிசுத்த அக்கினியின் அபிஷேகம் பெற்று கொண்டால், நம் ஆத்துமா உயிர் பெற்று விசுவாசத்தை தொடரும். நாம் யாரும் சமுத்திரஅலை (துன்மார்க்கத்தில்) விழுந்து போகாதபடி நம்மை பாது காத்துக்கொள்ள அனுதினம் கிறிஸ்துவின் அப்பமாகிய தேவ வசனம் புசித்தும் மற்றவர்களுக்கு கொடுத்தும் வாழ்வோமானால் ,நம் தேவன் நம்மை அழிவிலிருந்து காப்பாற்றுவார், அக்கரை சேர்ப்பார். யாவரும் ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.