தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 148:14
அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும், தம்மைச் சேர்ந்த ஜனமாகிய இஸ்ரவேல் புத்திரருக்கும் கொண்டாட்டமாக, தம்முடைய ஜனத்திற்கு ஒரு கொம்பை உயர்த்தினார். அல்லேலூயா.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.
அல்லேலூயா.
சமுத்திரத்தின் மாற்றத்தில் வந்த முழக்கங்கள்:-
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் சமுத்திரம் என்பது துன்மார்க்கத்தை காட்டுகிறது என்று சில விளக்கங்களை நாம் தியானித்தோம். இந்த துன்மார்க்கம் நம் உள்ளத்தில் செயல்படுமானால் கடலின் அலைகளை போல நாம் எப்போதும் அலைகளினால் நெருக்கப்பட்டு கொண்டிருப்போம்.
மேலும் மற்றவர்களை பார்க்கும் போதல்ல, நம்மையே பார்க்கும்போது நம்மளில் இருக்கிற குறைகளை உணர்ந்து தேவனுடைய சமுகத்தில் அவர் சித்தத்திற்கு தினமும் ஒப்புக்கொடுத்து, தேவ வசனத்திற்க்கு கீழ்ப்படிவோமானால், நம் உள்ளில் உள்ள துன்மார்க்கர்கள் அழிக்கப்பட்டுப் போவார்கள். நீதிமான்கள் பெருகிக் கொண்டேயிருப்பார்கள். இது என்னவென்றால் நம் உள்ளம் நீதியால் நிறையும் போது அநீதி நம் உள்ளத்திலிருந்து மாறிப் போகும். அதைத் தான் தேவ வசனத்தில் துன்மார்க்கர்கள் மறைந்து போவார்கள். நீதிமான்கள் பெருகுவார்கள், என்று எழுதப்பட்டிருக்கிறது. மேலும் நம் இருதயத்தில் தழைத்து வளர்ந்துக் கொண்டிருந்த துன்மார்க்கன் கிரியைகள் கிறிஸ்துவின் கிருபையினால் மாற்றப்படும். பின் ,அது இருந்த இடமும் தெரியாது என்று எழுதப்பட்டிருக்கிறது. அதனால் தேவ வார்த்தையானது,
யோபு 8:20-22
இதோ, தேவன் உத்தமனை வெறுக்கிறதுமில்லை, பொல்லாதவர்களுக்குக் கைகொடுக்கிறதுமில்லை.
இனி அவர் உம்முடைய வாயை நகைப்பிலும், உம்முடைய உதடுகளைக் கெம்பீரத்தினாலும் நிரப்புவார்.
உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும் என்றான்.
நீதிமொழிகள் 14:11
துன்மார்க்கனுடைய வீடு அழியும்; செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும்.
பிரியமானவர்களே கூடாரம் என்பது நம்முடைய உள்ளான சரீரம், அது கிறிஸ்துவின் நீதியால் நிறைந்திருந்தால் அந்த ஆத்துமா செழிக்கும்.
ஆனால் துன்மார்க்கன் என்பது நம்முடைய உள்ளம் அநீதி (உலகம்) அப்படியிருக்குமானால் அந்த வீடு அழியும்.
இரண்டு வித தோற்றத்தை தேவன் நமக்கு விளக்கிக் காட்டுகிறார். என்னவென்றால் நீதிமான்களுடைய கூடாரத்தில் கெம்பீர சத்தம் உண்டு. அதனால் தான்,
எசேக்கியேல் 18:27-32
துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தைவிட்டு விலகி, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் தன் ஆத்துமாவைப் பிழைக்கப்பண்ணுவான்.
அவன் எச்சரிப்படைந்து, அவன் செய்த எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புகிறபடியினாலே அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.
இஸ்ரவேல் வம்சத்தாரோ: ஆண்டவருடைய வழி செம்மையாய் இருக்கவில்லை என்கிறார்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, என் வழிகள் செம்மையாயிராதோ? உங்கள் வழிகள் அல்லவோ செம்மையல்லாததாயிருக்கிறது.
ஆகையால் இஸ்ரவேல் வம்சத்தாரே, நான் உங்களில் அவனவனை அவனவன் வழிகளுக்குத் தக்கதாக நியாயந்தீர்ப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீங்கள் மனந்திரும்புங்கள், உங்களுடைய எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புங்கள்; அப்பொழுது அக்கிரமம் உங்கள் கேட்டுக்குக் காரணமாயிருப்பதில்லை.
நீங்கள் துரோகம்பண்ணின உங்களுடைய எல்லாத் துரோகங்களையும் உங்கள்மேல் இராதபடிக்கு விலக்கி, உங்களுக்குப் புது இருதயத்தையும் புது ஆவியையும் உண்டுபண்ணிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் ஏன் சாகவேண்டும்.
மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
அன்பானவர்களே சமுத்திர வாழ்க்கை இனி நமக்கு வேண்டாம் என்று தீர்மானித்து தேவனுடைய நீதி, நியாயத்தை செய்யும்படியாக நாம் யாவரும் முன்வரவேண்டும்.
நம்முடைய தேவன் கடலை உலர்ந்த தரையாக மாற்றுகிறார்.
சங்கீதம் 66:5,6
தேவனுடைய செய்கைகளை வந்துபாருங்கள், அவர் மனுபுத்திரரிடத்தில் நடப்பிக்குங் கிரியையில் பயங்கரமானவர்.
கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்; ஆற்றைக் கால்நடையாய்க் கடந்தார்கள்; அங்கே அவரில் களிகூர்ந்தோம்.
பிரியமானவர்களே மேற் கூறிய வசனம் ஆத்துமாவை (நம்மை) தேவன் நடத்தி வருகிற விதம் கடலை உலர்ந்த தரையாக மாற்றுகிறார். சமுத்திரமாக இருந்த நம்மை சமுத்திரத்தில் உள்ள ஒரு (தண்ணீர்) பழக்க வழக்கங்கள் இல்லாதபடி எல்லா துர்கிரியைகளையும் மாற்றி நடத்தி கொண்டு வருகிறார். ஆகிலும் அவர் தரையாகிய பூமியில் நடத்தி கொண்டு வந்து இஸ்ரவேல் ஜனங்களை பல வருடமாக சுற்றி நடக்க வைத்து காட்டுகிற திருஷ்டாந்தம் ,என்னவென்றால் விசுவாச யாத்திரையும் நியாயத்தீர்ப்பு நடத்தி அந்த தீர்ப்பில் தப்பிக்கபட்டவர்கள் மாத்திரம் கானானுக்குள் பிரவேசிக்கிறார்கள். இதுதான் நம்முடைய ஆத்துமாவின் நிரந்தர வாழ்வின் திருஷ்டாந்தம்.
சங்கீதம் 66:7-9
அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; அவருடைய கண்கள் ஜாதிகள்மேல் நோக்கமாயிருக்கிறது; துரோகிகள் தங்களை உயர்த்தாதிருப்பார்களாக. (சேலா.)
ஜனங்களே ,நம்முடைய தேவனை ஸ்தோத்திரித்து, அவரைத் துதிக்குஞ் சத்தத்தைக் கேட்கப்பண்ணுங்கள்.
அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவொட்டாமல், நம்முடைய ஆத்துமாவை உயிரோடே வைக்கிறார்.
இதிலிருந்து நமக்கு தெரியவருகிறது என்னவென்றால், சமுத்திர வாழ்க்கையாகிய துன்மார்க்க வாழ்க்கையை தேவன் மாற்றி நம்மை எவ்விதத்தில் கொண்டு வந்து நம் ஆத்துமாவை உயிரோடே வைக்கிறார்.
இந்த கருத்துகள் எல்லோரும் நன்றாக தியானித்து துன்மார்க்கர்கள் யார்? அவர்களுடைய ஆலோசனையில் நடவாதபடி தேவனுடைய ஆலோசனையில் நடப்பதற்காக யாவரும் தேவ சமூகத்தில் ஒப்புக்கொடுங்கள்.
தேவனுடைய வேலை செய்கிறவர்களாக இருந்தாலும் அவர்கள் செயல்பாடுகள், நடத்தைகள் உலகத்திற்கு ஒத்த வேஷம் தரித்திருந்தால், உலக கிரியைகளை செய்வார்களானால் அவர்கள் துன்மார்க்கர்கள். அதை தான்,
சங்கீதம் 50:16
தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என் பிரமாணங்களை எடுத்துரைக்கவும், என் உடன்படிக்கையை உன் வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு.
இவ்விதமாக வாழ்கிறவர்கள் தேவனுடைய சிட்சையை பகைத்து அவருடைய வார்த்தைகளை தங்களுக்கு பின்னாக எறிந்து போடுகிறார்கள். அவர்களை குறித்து தேவனுடைய வார்த்தை,
சங்கீதம் 50:18
நீ திருடனைக் காணும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு.
விபசாரர்கள் என்று சொல்லும் போது மாம்சத்தில் விபச்சாரம் செய்கிறவர்கள் பாவிகள். ஆனால் துன்மார்க்கர்களில் விபச்சாரம் என்று சொல்லும் போது ஆவிக்குரிய ஆராதனைக்கு மாறாக சத்தியத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருதயத்தில் பல ஆசைகள் மற்றும் பொருளாசை, விக்கிரகராதனை செய்கிறவர்களை தேவன் விபச்சாரம் என்று சொல்லுகிறார். இவ்விதமாக அநேகர் வேத புஸ்தகத்தை ஏந்தி இவ்விதமாக நடக்கிறார்கள். ஆதலால் தேவன் அவர்களுடைய நடத்தைகளை விரும்புகிறதில்லை. ஆதலால் பிரிய ஜனமே நம்மை நாம் சோதிப்போமா? தேவ வார்த்தைகளுக்கு கீழ்ப்படிவோமானால் தேவன் துன்மார்க்க கிரியைகளிலிருந்து நம்மை விடுவித்து, ஆசீர்வதிப்பார்.
II கொரிந்தியர்: 6:14-18
அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?
கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?
தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.
ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.
இவ்விதமாக நாம் அநீதியை விட்டு நீங்கி நீதிக்குட்பட்டிருப்போமானால் நம் உள்ளம் முழக்கத்தோடு கெம்பீரிக்கும். ஆனால்,
ஏசாயா 57:20,21
துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறார்கள்; அது அமர்ந்திருக்கக் கூடாமல், அதின் ஜலங்கள் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது.
துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்லுகிறார்.
நம் வாழ்க்கையில் மாற்றப்பட்ட அழுக்குகள், சேறுகள், நம் உள்ளத்தில் மீண்டும் வராதபடி பாதுகாத்து நீதியின் கிரியைகளை நாம் செய்கிறவர்களாக நாம் காணப்படுவோமானால் நமக்கு தேவ சமாதானம் அதிகமாய் கிடைக்கும்.
சங்கீதம் 75:10
துன்மார்க்கருடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்; நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்.
பிரியமானவர்களே நாம் இந்த நாளில் தியானித்துக் கொண்டிருக்கிற வேதப்பகுதி பிரகாரம் நம்மை ஒப்புக் கொடுப்போமானால் நம் வாழ்க்கையை தேவன் புதுப்பித்துக் ஆசீர்வதிப்பார். ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.