நம்முடைய கோல் பாதுகாத்தல்:-
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாட்களில் வானம் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்குவதாக என்ற கருத்துகளின் வாயிலாக சில காரியங்களை நாம் தியானித்துக் கொண்டிருந்தோம். இவை எதற்கென்றால் நம் ஆவி, ஆத்துமா, சரீரம் எகிப்தின் சிறுமையிலிருந்து நம்மை விடுவித்து எடுக்கும் படியாக ,நம் முற்பிதாக்களை வைத்து தேவன் நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார். என்னவென்றால் முற்பிதாக்களாகிய நம்முடைய கோத்திர பிதாக்கள் ,அவர்கள் தலைமுறைகள் நானூறு வருஷம் எகிப்தின் அடிமையில் இருப்பார்கள் என்று தேவன் சொன்ன காரியம் நடந்துக் கொண்டிருக்கும் போது, அவர்கள் சிறுமையை கண்ணோக்கி பார்த்த தேவன் முட்செடியில் நின்று மோசேக்கு தரிசனமாகி, அவனை அழைத்து, எகிப்திற்கு வரும் படியாக மோசேயினிடத்தில் தேவன் பேசுகிறதையும் ,பேசும்போது,
யாத்திராகமம் 3:18-20
அவர்கள் உன் வாக்குக்குச் செவி கொடுப்பார்கள்; அப்பொழுது நீயும் இஸ்ரவேலின் மூப்பரும் எகிப்தின் ராஜாவினிடத்தில் போய்: எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் எங்களைச் சந்தித்தார்; இப்பொழுதும் நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம்போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி எங்களைப் போகவிடவேண்டுமென்று சொல்லுங்கள்.
ஆனாலும், எகிப்தின் ராஜா கைவல்லமை கண்டாலொழிய, உங்களைப் போகவிடான் என்று நான் அறிவேன்.
ஆகையால், நான் என் கையை நீட்டி, எகிப்தின் நடுவிலே நான் செய்யும் சகலவித அற்புதங்களாலும் அதை வாதிப்பேன்; அதற்குப்பின் அவன் உங்களைப் போகவிடுவான்.
பிரியமானவர்களே கழிந்த நாளில் நியாயத்தீர்ப்பை குறித்து சில காரியங்கள் தியானித்தோம். எப்படியெனில் நம் இருதயம் கடினத்தோடு காணப்படும் போது நாம் தேவனுடைய வசனத்துக்கு கீழ்ப்படியாமல் மீறி நடப்போம். அப்போது நம் ஆத்துமா சிறுமைபட்டு தவிக்கும், விடுதலை பெற்றுக் கொள்ள முடியாதபடி இருந்து தவிக்கிற நேரத்தில், தேவன் நம் சிறுமையை நோக்கி பார்த்து, தன் தாசன் மூலமாய் நம்மை விடுவித்து, சகல எகிப்தின் கிரியைகளை விட்டு நம் ஆவி, ஆத்துமா, சரீரம் (உள்ளான மனுஷன்) கறைதிரையில்லாதபடி தேவன் பரிசுத்தபடுத்தி எடுக்கும் படியாக தேவன் நமக்கு மோசேயை முன் வைத்து திருஷ்டாந்தபடுத்தி வாதைகளை எகிப்தில் அனுப்பி நம் ஆத்துமா இரட்சிக்கும் படியாக காத்து தவிக்கிறார். அதற்காக தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம் உள்ளத்தில் அனுப்புகிறார்.
எகிப்தில் தேவன் அவருடைய கைவல்லமையை காட்டி தான் இஸ்ரவேலை மீட்டு இரட்சித்தார் அதேபோல் நம் வாழ்விலும், இப்போது தேசத்திலும் கூட தேவன் அதைத்தான் செய்கிறார் என்று நம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது மிக முக்கியமான காரியம்.
இதில் கூட நம் ஆத்துமாவுக்கு ஒரு இரட்சிப்பு கிடைக்க வேண்டும் ஆனால்,
யாத்திராகமம் 3:22
ஒவ்வொரு ஸ்திரீயும், தன், தன் அயலகத்தாளிடத்திலும், தன் தன் வீட்டில் தங்குகிறவளிடத்திலும், வெள்ளியுடமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டு வாங்குவாள்; அவைகளை உங்கள் குமாரருக்கும் உங்கள் குமாரத்திகளுக்கும் தரிப்பித்து, எகிப்தியரைக் கொள்ளையிடுவீர்கள் என்றார்.
அன்பானவர்களே ஒவ்வொரு வார்த்தையும் உலகத்துக்குரியதல்ல ,எல்லாமே பரலோகத்துக்குரியவைகளை குறித்து, தேவன் நமக்கு விளக்கி திருஷ்டாந்தபடுத்தி காட்டுகிறார். ஒரு போதும் மாயையை நாம் பற்றிக் கொள்ளாதபடி காத்துக்கொள்ள வேண்டும். மாயையை நாம் பின் பற்றக் கூடாது. பொன், வெள்ளி என்று சொல்லும் போது இவ்வுலகத்தில் உள்ளவையெல்லாம் மாயை. இவையெல்லாம் அழிந்து போகும். நாம் அழியாத,என்றைக்கும் நிலைத்திருக்கிறதான நித்திய ராஜ்யத்துக்குரிய காரியங்களை மட்டுமே பின்பற்ற வேண்டும். ஏனென்றால் எகிப்தில் வைத்து அநேக பொருட்களோடு திரும்பி வருவார்கள் என்று தேவன் சொன்னது, காரணம் என்னவென்றால், எகிப்தியரின் பொருட்கள் இஸ்ரவேல் கொள்ளையாடுவார்கள் என்பதை தேவன் காட்டுகிறார். இதற்குக் காரணம் என்னவென்றால் எகிப்தின் வாதையால் துன்பப்படுத்தபடும் போது இஸ்ரவேலர்கள் கொள்ளையாட முடியும் அதற்கு தான் தேவன் அவருடைய கைவல்லமையை காட்டுகிறார். ஒரு பெரிய நியாயதீர்ப்பை உண்டாக்குகிறார்.
பிரியமானவர்களே தேவன் இவ்விதம் செய்வது வேறு யாருக்கோ என்று நாம் நினைக்காதபடி நம் வாழ்வில் இதை செய்கிறார். நம் இருதயம் எகிப்தில் இருக்கும் போது பெற்றுக்கொண்ட வெள்ளியும் பொன்னுமாகிய பொருட்கள் என்னவென்றால் தேவ வசனத்தால் கிடைத்த கிருபையாகிய அலங்கார வஸ்திரம் ,இஸ்ரவேலராக நம் ஆத்துமா தரிப்பித்துகொள்ளும். அதை தான் தேவன் சொல்லுகிறார்,வெள்ளியுடமைகளையும், பொன்னுடமைகளையும் வஸ்திரங்கள் கேட்டு வாங்குவாள். வாங்குவாள் என்று சொல்லும்போது அது ஸ்திரீயை காட்டுகிறது. அந்த ஸ்திரீ தான் பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டி. இதுதான் இரட்சிப்பின் வஸ்திரம். விசுவாச யாத்திரை துவங்க வேண்டுமானால் கிறிஸ்துவின் வஸ்திரம் தரித்திருக்க வேண்டும்.
மேலும் கிறிஸ்துவாகிய வஸ்திரம் தரிப்பிக்கும் முன் நம் உள்ளம் போராடும். எப்படியெனில் கர்த்தர் மோசேயினிடத்தில் பேசின போது, மோசே கர்த்தரிடம் சொல்கிறான்.
யாத்திராகமம் 4:1
அப்பொழுது மோசே: அவர்கள் என்னை நம்பார்கள்; என் வாக்குக்குச் செவிகொடார்கள்; கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள் என்றான்.
கர்த்தர் அவனை நோக்கி: உன் கையில் இருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான்.
அதைத் தரையிலே போடு என்றார்; அவன் அதைத் தரையிலே போட்டபோது, அது சர்ப்பமாயிற்று; மோசே அதற்கு விலகி ஓடினான்.
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: உன் கையை நீட்டி, அதின் வாலைப் பிடி என்றார்; அவன் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தபோது, அது அவன் கையிலே கோலாயிற்று.
ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்கு தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார்.
மோசே எகிப்தியர்கள் நம்ப மாட்டார்கள் என்று சொன்ன போது முதலில் இரண்டு அடையாளத்தை மோசேயிடம் காட்டுகிறார். என்னவெனில் கையில் இருக்கிற கோல் கிறிஸ்து ,ஆனால் அதை தரையில் போட்டால் குறிப்பாக உன் விசுவாசம் புழுதியில் இருக்குமானால் அது நமக்கு எகிப்தின் கிரியை உள்ளவர்களுக்கு சர்ப்பமாகும். ஆனால் நீ கிறிஸ்துவை ஏந்துவாயானால் நமக்கு அது கோலாகும். கோல் மிக முக்கியமான காரியம், அதைப் பற்றி பின்வரும் நாட்களில் தியானிப்போம்.
பின்பு கர்த்தர் மோசேயிடம் உன் கையை மடியிலே போடு என்றார். அவன் மடியிலே போட்டு, பின் வெளியே எடுக்கும் போது அவன் கை உறைந்த மழையைப் போல் வெண்குஷ்டம் பிடித்திருந்தது.
இது என்னவென்றால் நம்முடைய கை கிறிஸ்துவாக இருக்க வேண்டும். ஆனால் எகிப்தின் கிரியைகளை நாம் விடாமல் இருப்போமானால் கை கறைகளால் இருக்கிறது என்பதை காட்டுகிறார்.
அவர் உன் கையை மடியிலே போடு என்றார். அவன் தன் கையை திரும்ப தன் மடியிலே போட்டு தன் மடியிலிருந்து அதை வெளியே எடுத்தபோது அது திரும்ப அவனுடைய மற்றச் சதையை போலாயிற்று.
இப்போதே நாம் சிந்திக்க வேண்டும். நம் உள்ளத்தின் எண்ணங்கள் ஒன்றாக இருக்கவேண்டும். கிறிஸ்துவோடு உள்ள ஐக்கியத்தை மட்டுமே இருக்குமானால் நம் விசுவாசத்திலும், அன்பிலும் பரிசுத்தத்தில் இருக்க முடியும். நம் கையின் கிரியைகளை கர்த்தர் ஆசீர்வதிப்பார். ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.