தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

சங்கீதம்: 30:2

என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

வெட்டுக்கிளி:-எட்டாவது வாதை அவற்றின் செயல்பாடுகள்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் தேவன் அனுப்புகிற வாதைகளை குறித்து தியானித்துக் கொண்டிருக்கிறோம். எகிப்தில் அனுப்பின எட்டாம் வாதை வெட்டுக்கிளி. கீழ் காற்றை கர்த்தர் வீசப்பண்ணும் போது வெட்டுக்கிளி பூமியை நிரப்புகிறது. இதன் ஆவிக்குரிய அர்த்தம் எகிப்தின் கிரியை உள்ளத்தில் வைத்திருக்கிறவர்களின் உள்ளத்தை நிரப்புகிறது. ஆனால் அது நம் உள்ளத்தில் வந்தால் நாம் பெற்றிருந்த கனிகளை தின்று போடுகிறது. வெளி உலகில் வெட்டுக்கிளி எதை செய்யுமோ அது போல் உள் உலகிலும் செய்யும். குறிப்பாக உள்ளத்தில் உலகம் இருந்தால் மற்றும் பாவ பாரம்பரிய வாழ்க்கை இருந்தால் கனிகளை தின்று போடும். அப்படி நம் இருதயத்தின் கனிகளை தின்றுவிடும். அப்போது நம் உள்ளத்தில் நற்குணம் காணப்படாது. மேலும் நம் ஆத்துமா சாகுவதற்கு ஏதுவாகும். கர்த்தர் எகிப்தில் வெட்டுக்கிளியை அனுப்பின போது பார்வோன் மோசேயை நோக்கி என் பாவத்தை மன்னிக்க வேண்டும். இந்த சாவை மட்டும் என்னை விட்டு விலக்க வேண்டும் என்று விண்ணப்பம் பண்ணினான். அப்படியே மோசே கர்த்தரிடத்தில் விண்ணப்பம் பண்ண கர்த்தர் மகா பலத்த காற்றை வீசும் படி செய்தார். அப்போது வெட்டுக்கிளிகளை அடித்துக் கொண்டு போய் செங்கடலிலே போட்டது. கீழ் காற்று என்றால் பாதாளக் காற்று மேற் காற்று பரலோக காற்று எப்படி எனில்,

வெளிப்படுத்தல்: 8:13

பின்பு, ஒரு தூதன் வானத்தின் மத்தியிலே பறந்துவரக்கண்டேன்; அவன் மகா சத்தமிட்டு: இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதருடைய எக்காள சத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ, (ஆபத்துவரும்) என்று சொல்லக்கேட்டேன்.

எக்காளம் என்பது தேவனுடைய வசனம் பூமியின் குடியிருக்கிறவர்கள் என்று சொல்லும்போது ஆத்துமாவில் முழுமையான இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஐயோ,ஐயோ, ஐயோ, (ஆபத்து வரும்) அங்கு எச்சரிப்பின் சத்தம் கேட்கப்படுகிறது வானத்தில் பறந்து வருகிற தூதன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஜனங்களுடைய இருதயத்தில் ஊதப்படுகிற எக்காளத்தைப் பற்றி (வசனம்) கூறுகிறார்.

வெளிப்படுத்தல்: 9:1

ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின் மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது.

இரட்சிக்கப்பட்ட ஒரு ஆத்துமா விழுந்து போகிற ஒரு அனுபவம் என்னவென்றால் பாரம்பரிய வாழ்க்கையிலோ மற்றும் உலக வழிபாடுகளாலோ விக்கிர ஆராதனையிலோ ஏதோ  சந்தர்ப்பங்கள் வரும்போது தன் இரட்சிப்பை யோசிக்காதபடி முன்னோர்களின் பாரம்பரியத்தை ஒட்டி வாழும் போது அதில் விழுந்து விடுகிறான். அவனை தேவன் சொல்கிறார் விழுந்த நட்சத்திரம் அந்த நட்சத்திரத்திற்கு பாதளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது. (திறவு கோல்) ஜெபம்.

வெளிப்படுத்தல்: 9:2

அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெருஞ்சூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகைஎழும்பிற்று; அந்தக் குழியின் புகையில் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது.

அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டுப் பூமியின்மேல் வந்தது; அவைகளுக்குப் பூமியிலுள்ள தேள்களின் வல்லமைக் கொப்பான வல்லமை கொடுக்கப்பட்டது.

இந்த வசனத்தை நாம் வாசிக்கும் போது மனுஷனை சேதப்படுத்த வெட்டுக்கிளிக்கு உத்தரவு கொடுத்து இருக்கிறதை பார்க்கிறோம். யாரை என்றால் தேவனுடைய முத்திரையை தரித்திராதவர்களை இந்த வெட்டுக்கிளி என்பது ஒரு வாதை. இவை எங்கிருந்து வருகிறது என்றால் மனுஷரை சேதப்படுத்துவது மனுஷனுக்குள்ளிருந்து வருகிறது. அது எப்படியென்றால் மனுஷனுடைய பொல்லாத இருதயம் தான் பாதாளம். அவன் கையில் இருந்த திறவுகோலால் பாதாளம் திறக்கப்படுகிறது. அப்பொழுது அவன் செய்த தீய கிரியைகள் எகிப்தின் செயல்பாடுகள் அருவருப்பானவைகள் எல்லாம் அவன் உள்ளத்தில் இருந்ததால் பாதாளக் குழியின் திறவுகோலால் அவன் திறக்கும்போது அந்த குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் அந்தகாரபட்டது காரணம் அவனுக்குள் இருந்த கொஞ்சம் வெளிச்சமும் நஷ்டமாகி விட்டது. அந்த புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டு பூமியின் மேல் வந்தது (உள்ளத்தில்) ஆனால் தேவனுடைய முத்திரையை தரித்தவர்களை அவை சேதப் படுத்தவில்லை. 

பிரியமானவர்களே புல் என்பது ஜனம் மரங்கள் என்பது ஆத்துமாக்கள்.

மேலும் வெளித்தோற்ற பூமியின்மேல் முன்பு எகிப்தில் வாதைகளை அனுப்பியது போல் இந்த நாட்களில் தேவன் வெட்டுக்கிளியை அனுப்பியிருக்கிறார். அது எப்படி பூமியை மூடிக்கொண்டதோ மற்றும் எவ்விதம் வெளியில் பயிர் வகைகளை பட்சித்து தின்று போடுகிறதோ அப்படியே நம் உள்ளில் அனுப்பின வாதையாகிய வெட்டுக்கிளி. நம் அவயவத்தின் முக்கியமான பகுதியை பட்சித்துத் தின்று போடுவது மாத்திரமல்லாமல் நம் ஆவிக்குரிய கனியையும் அழித்து மனுஷனை சேதப்படுத்துகிறது.

ஆதலால் பிரியமானவர்களே நாம் யாவரும் தேவனுடைய முத்திரையை தரித்துக்கொள்ள வேண்டும்.

இவை மனுஷனை இரட்சிக்கும் படியாக தேவன் செய்கிற காரியத்தை குறித்து பத்மு தீவிலே யோவானுக்கு வெளிப்படுத்துகிறார்.

வெளிப்படுத்தல்: 9:7

அந்த வெட்டுக்கிளிகளின் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட குதிரைகளுக்கு ஒப்பாயிருந்தது; அவைகளுடைய தலைகளின்மேல் பொன்மயமான கிரீடம் போன்றவைகளிருந்தன; அவைகளின் முகங்கள் மனுஷருடைய முகங்கள்போலிருந்தன.

வெளிப்படுத்தல்: 9:16-20

குதிரைச்சேனைகளாகிய இராணுவங்களின் தொகை இருபது கோடியாயிருந்தது; அவைகளின் தொகையைச் சொல்லக்கேட்டேன்.

குதிரைகளையும் அவைகளினால் ஏறியிருந்தவர்களையும் நான் தரிசனத்தில் கண்டவிதமாவது; அவர்கள் அக்கினி நிறமும் நீலநிறமும் கந்தக நிறமுமான மார்க்கவசங்களையுடையவர்களாயிருந்தார்கள்; குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப் போலிருந்தன; அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டன.

அவைகளுடைய வாய்களிலிருந்து புறப்பட்ட அக்கினி புகை கந்தகம் என்னும் இம்மூன்றினாலும் மனுஷரில் மூன்றிலொருபங்கு கொல்லப்பட்டார்கள்.

அந்தக் குதிரைகளின் வல்லமை அவைகளுடைய வாயிலேயும் வால்களிலேயும் இருக்கிறது; அவைகளுடைய வால்கள் பாம்புகளுக்கு ஒப்பானவைகளாயும், தலைகளுள்ளவைகளாயுமிருக்கிறது, அவைகளாலே சேதப்படுத்துகிறது.

அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல்மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டாதவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களையும் வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளை விட்டு மனந்திரும்பவுமில்லை;

தங்கள் கொலைபாதகங்களையும், தங்கள் சூனியங்களையும், தங்கள் வேசித்தனங்களையும், தங்கள் களவுகளையும் விட்டு மனந்திரும்பவுமில்லை.

பிரியமானவர்களே யாவரும் ஒன்று சிந்தியுங்கள் வெட்டுக்கிளிகள் பூமியில் வந்து பயிர் வகைகளை நஷ்டப்படுத்துவது மனுஷன் பூமியில் செய்கிற அக்கிரமத்தின் நிமித்தம் தேவன் கோபங்கொண்டு பாதாளத்தின் திறவுகோலை கொடுக்கிறார். அந்த திறவுகோலால் மனுஷர்கள் நிமித்தமே இந்த காரியங்கள் நடக்கிறது.

மேலும் மனுஷர்கள் உண்மையாக மனந்திரும்பி தேவனை ஆராதிக்காமல் விக்கிரகத்துக்கு ஆராதனை செய்கிறதினால் பாதாளத்தின் திறவுகோல் கொடுக்கப்படுகிறது.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டுவது நம் உள்ளத்தில் தான் கொள்ளைநோய் எழும்புகிறது. மேலும் துர்உபதேசத்தினால் தேவன் அதை பரவி செல்ல கட்டளையிடுகிறார். மனந்திரும்புவோமானால் கொள்ளை நோயிலிருந்து தப்பிக்கப்படுவோம். ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.                     

-தொடர்ச்சி நாளை.